Friday, March 29, 2024
Home » வேலு குமார் எம்.பியின் விமர்சனம் தகுதியற்றது; சாடுகிறார் சட்டத்தரணி

வேலு குமார் எம்.பியின் விமர்சனம் தகுதியற்றது; சாடுகிறார் சட்டத்தரணி

- அழைப்பு விடுத்தும் விழாவிற்கு ஏன் வரவில்லை என கேள்வி

by Prashahini
November 10, 2023 9:40 am 0 comment

இலங்கையில் 200 வருட வாழ்வியல் வரலாற்றை கொண்ட நமது மலையக மக்களுக்காக தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட “நாம் 200” நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தும் விழாவில் வந்து கலந்து கொள்ள முதுகெழும்பு இல்லாத கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் “நாம் 200” விழாவையும், இவ் விழாவை தலைமை தாங்கி நடத்தியவர்களையும் விமர்சிக்க அருகதையற்றவர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாநகர சபையின் முன்னால் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜன் சாடியுள்ளார்.

கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று முடிந்த “நாம் 200” விழாவை விமர்சித்தும், ஊடகங்களில் அறிக்கைவிட்டும் வேலு குமார் எம்.பி அரசியல் இலாபம் தேடி வருகிறார் என நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது.

மலையக மக்களை தலை நகர் கொழும்புக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுடைய உரிமைகளை உயரிய தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த “நாம் 200” நிகழ்வு இ.தொ.காவின் அரசியல் நிகழ்வு என இவர் விமர்சித்து மக்களை திசை திருப்புகிறார்.

அத்துடன் இவர் கூறுவது போல இது தனிப்பட்ட அரசியல் நிகழ்வாக இருப்பின் அதில் ஏன் நாட்டின் ஜனாதிபதி உட்பட அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள் என பலர் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? இது வேலு குமார் எம்.பிக்கு தெரியாதா ?அந்தளவுக்கு அவர் ஞானமற்றவரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்திய தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் காணொளி ஊடாக வாழ்த்து தெரிவித்ததை நிகழ்வில் திரையிடவில்லை என வேலு குமார் எம்.பி விமர்சித்துள்ளார். ஆனால், ஏன் காணொளி திரையிடப்படவில்லை என்பதை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தேசிய ஊடகங்களுக்கு தெளிவாக தெரிவித்துள்ளார். இதை வேலு குமார் எம்.பி அறிந்திருக்கவில்லையா?

குறித்த காணொளி உரிய நேரத்தில் வந்து கிடைக்கவில்லை என்பதை உணராத அவர் விமர்சனம் செய்வதால் அவருக்கு என்ன பயன் தேடுகிறார்.

அத்துடன் விழாவுக்கு வருகை தந்திருந்த இந்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமனை நுவரெலியாவுக்கு அழைத்து வரவில்லை என விமர்சனம் செய்துள்ளார். இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக இவ்விழாவை விமர்சித்து அரசியல் இலாபம் தேடிவரும் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் அவரின் தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்த போது ஏன் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆக, மலையக மக்களின் உரிமை சார் விடயங்களை வெளிக்கொணர்ந்து அதற்கு தீர்வினை எட்டுவதற்கு தலைநகரில் இ.தொ.கா பொதுசெயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமை தாங்கி நடத்திய விழா வேலு குமார் எம்.பிக்கு கண்ணுருத்தலாக இருக்கிறது என்பது அவர் விட்டு வரும் தரமற்ற அறிக்கையில் தெரியவருகிறது.

எனவே, அன்றும், இன்றும் எப்போதும் விமர்சனங்களை கண்டு அஞ்சி போகாத அமைப்பு இ.தொ.கா என்பதை வேலு குமார் எம்.பிக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன் என தெரிவித்த சட்டத்தரணி இ.தொ.கா மலையக மக்களுக்கு காலத்தால் பெற்று தரக்கூடிய அனைத்து உரிமைகளையும், சேவைகளையும் வழங்கும் எனவும் மேலும் தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT