இராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முடிவு | தினகரன்

இராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா முடிவு

உச்ச நீதிமன்றுக்கு உத்தியோகபூர்வமாக  அறிவிப்பு

நாட்டின் நலனுக்காக இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாத வகையில், சேதுசமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றுவோம் என உச்ச நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இராமர் பாலம்,இராமேஸ்வரம் அருகே பாம்பனிலிருந்து இலங்கை வரை கடலுக்கு அடியில் 50கி.மீ தொலைவுக்கு செல்கிறது. இந்த பாலம் இயற்கையான சுண்ணாம்புக் கற்களால் உருவானதாக கூறப்படுகிறது.

ஆனால், இலங்கையில் இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க இராமர், வானரப் படை உதவியுடன் இந்த பாலத்தை அமைத்தார் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு  இந்தியா, இலங்கை இடையிலான சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால், இந்த திட்டத்தின் வழித்தடம் இராமர் பாலத்தை சேதப்படுத்தும் வகையில் இருந்ததால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதையடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும், அல்லது, இராமர் பாலம் சேதமடையாமல் நிறைவேற்றக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன், சுப்பிரமணியன் சுவாமி தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது அதில் சேதுசமுத்திரத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், இராமர் பாலத்தை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இராமர் பாலம் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும், கருத்தையும் தெரிவிக்கக் அவர் கோரியிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இராமர்பாலம் தொடர்பாக அரசின் கருத்தை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய ஆணையிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமின்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய கப்பல் போக்குவரத்து துறை சார்பில் இராமர் பாலம் தொடர்பாக, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில்கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டின் நலன் கருதி ஆடம் பாலம் அல்லது இராமர் பாலத்துக்கு எந்தவிதமான சேதமும், பாதிப்பும் ஏற்படாமல், சேதுசமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும். இதற்கான மாற்றுப்பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபடும்.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதலின்படி இராமர்பாலம் தொடர்பாக அரசின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இராமர் பாலத்துக்கு ஆதரவாக தாக்கலான பொதுநலன் மனுக்களை நீதிமன்றம் முடித்துவைத்தது. 

 

 


Add new comment

Or log in with...