அ' பற்றில் அதாவுல்லாவின் உருவப்படம் எரிப்பு | தினகரன்

அ' பற்றில் அதாவுல்லாவின் உருவப்படம் எரிப்பு

அ' பற்றில் அதாவுல்லாவின் உருவப்படம் எரிப்பு-Akkaraipattu Athaullah Photo Burnt

 

புதுப்பள்ளி CCTV சேமிப்பு கருவி திருட்டு

அக்கரைப்பற்று மாநகரசபைக்குரிய புதிய மேயர், பிரதி மேயர் ஆகியோரின் பெயர்களை தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் மாலை (14) அறிவித்ததைத் தொடர்ந்து ஏனைய வேட்பாளர்களின் ஆதாரவாளர்கள் அவரின் பதாதைகளை எரித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியான அரசயடியிலும், புதுப்பள்ளி வாசல் முன்னால் உள்ள வீதியிலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தங்கியிருக்கும் அவரது சொந்த இடமான கிழக்கு வாசல் எனும் இடத்திலும் உள்ள வீதிகளில் டயர்களை எரித்தமை குறிப்பிடத்தக்கது.

மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளை எதிர்பார்த்த உறுப்பினர்களின் ஆதரவாளர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

தற்போது பெயர் அறிவிக்கப்பட்ட புதிய மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி இதற்கு முன்னரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக இருந்துள்ளதுடன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்தமகனும் ஆவார், புதிய பிரதி மேயராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அஸ்மி ஏ. கபூர் இதற்கு முன்னர் அக்கரைப்பற்று மாநகரசபையில் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த அமைதியின்மையை தொடர்ந்து பொலிசாரும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், பாதைகளில்  எரிக்கப்பட்ட டயர்களையும், பதாதைகளையும் அகற்றினர்.

இதேவேளை, நேற்று (15) இரவு அக்கரைப்பற்று புதுப்பள்ளிவாயலில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்களுக்கான சேமிப்பகம் திருடப்பட்டுள்ளது.

குறித்த சேமிப்பகத்தில், அக்கரைப்பற்று மாநகரசபையில் மேயர் அறிவிப்பை அடுத்து, தலைவர் அதாவுல்லாவுக்கு எதிராக உருவப் பதாகையை எரித்த காணொளி பதிவாகியிருக்கலாம் எனும் அடிப்படையில் இது திருடப்பட்டிருக்கக் கூடுமென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர் - எம்.எல். சரீப்தீன், எமது நிருபர்)
 


Add new comment

Or log in with...