முல்லைத்தீவில் சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி | தினகரன்

முல்லைத்தீவில் சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி

பாதுகாப்புப் படை தலைமையக (முல்லைத்தீவு) கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவின் எண்ணக் கருவுக்கு அமைய 59 படைத் தலைமையக படைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிகசூரியவின் வழிகாட்டலில் 592 படைத் தளபதி கேர்னல் சானக ரத்நாயக்கவின் அனுசரணையுடன் இனங்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் ஹம்பாந்தோட்டை மாவட்ட கிரிக்கெட் கழக அங்கத்தவர்கள் அணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் கழக அணிக்கும் இடையே 20க்கு 20 கிரிக்கெட் போட்டி (08) ம் திகதி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியின் பிரதம விருந்தினராக 59 வது படையணியின் படைத்தளபதி பிரிகேடியர் ருவன் வனிகசூரிய கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பிரதி கல்விப் பணிப்பாளர் சுந்தரலிங்கம் பிரபாகரன் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபர் கே.சிவலிங்கம் ஹம்பாந்தோட்டை மாவட்ட விளையாட்டுத் தலைவர் டொக்டர் சஞ்சய சேனரத் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியின் நடுவர்களாக வவுனியா மாவட்ட கிரிக்கெட் கழக நடுவர்களாக ஆரியரத்தினம் ரவிகரன், ராஜேந்திரன் தஸரிஸ் ஆகியோர் பங்கு பற்றினார்கள்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்ட கிரிக்கெட் கழக அணி முதலில் துடுப்பெடுத்தாட முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு சந்தர்ப்பம் வழங்கியது. 20 ஓவர் முடிவில் 04 விக்கெட்டுக்களுக்கு முல்லைத்தீவு விளையாட்டு கழக அணி 125 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் பதிலுக்கு ஆடிய ஹம்பாந்தோட்டை மாவட்ட கழக கிரிக்கெட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்கள். அதன்படி போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் கழக அணி மூன்று ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சிறந்த துடுப்பாட்ட வீரராக 41 ஓட்டங்களைப் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் கழக அணியின் அருணாசலம் அஞ்சயன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக 15 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டை வீழ்த்திய ஹம்பாந்தோட்டை மாவட்ட கிரிக்கெட் கழக அணியின் பீ.கே. லசந்த தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் சிறந்த வீரருக்கான கிண்ணத்தை முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் கழக அணியின் அருணாசலம் அஞ்சயன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் படையணித் தலைவர்கள் மற்றும் கட்டளையிடும் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். 


Add new comment

Or log in with...