ஒப்சேவர்- - மொபிடெல் மெகா போட்டியை போற்றிப் புகழும் முன்னாள் தலைவர்கள் | தினகரன்

ஒப்சேவர்- - மொபிடெல் மெகா போட்டியை போற்றிப் புகழும் முன்னாள் தலைவர்கள்

 

பாடசாலை மட்டத்தில் மற்றைய வீரர்களுக்கு எடுத்துக்காட்டான முறையில் விளையாடியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் எழுவர், கடந்த 40 வருட காலப் பகுதியில் ஒப்சேவர்- மொபிடெல் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டி கொண்டுள்ள வகிபாகத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். உத்தியோகபூர்வமான பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப்போட்டிகள் எதுவும் நடாத்தப்பட்டிருக்காத ஒரு கால கட்டத்தில், பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தவும் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் மைல்கல் சாதனைகளை அங்கீகரிக்கவுமென மேற்படி ‘மெகா போட்டியானது விலை மதிக்க முடியாத பங்களிப்பொன்றை வழங்கியுள்ளதாக அவர்கள் அனைவரும் பொதுவான கருத்தொன்றைப் பகிர்ந்துள்ளனர்.

வருடத்திற்கான ஒப்சேவர்- மொபிடெல் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கும் வைபவத்திற்கும் சண்டே ஒக்சேவர் பத்திரிகைக்கும் புகழ் மாலை சூட்டிய அதே வேளையில், பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரர்களென்ற வகையில் தாங்கள் வென்றெடுத்திருந்த முதலாவது விருதானது தங்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னாளன் இலங்கை அணித் தலைவராக விளங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம போட்டி நடுவராகப் பிரகாசித்துவரும் ரஞ்சன் மடுகல்ல றோயல் கல்லூரியில் பாடசாலை கிரிக்கெட் வீரராக திகழ்ந்த தனது ஆரம்ப நாட்கள் அதிசிறந்த தருணங்களாக அமைந்தன என வர்ணித்துள்ளார். தனிப்பட்ட முறையிலான மகத்துவத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து தான் ஒருபோதும் நினைத்துப் பார்க்காதிருந்த போதிலும், முதலாவது ஒப்சேவர் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதினை நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பெற்றிருந்தமையை தனக்கு வழங்கப்பட்ட பெரும் கௌரவமாக தான் கருதுவதாக அவர் அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டார்.

பாடசாலை கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தி பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப்போட்டிகளையோ அல்லது விருது வழங்கல் வைபவமொன்றையோ கொண்டிராத யுகமொன்றில், பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் திறன்களை மதிப்பிட்டு அவர்களை ஊக்குவிப்பதற்கான தேவைப்பாட்டை புரிந்து செயற்பட்டமைக்காக அவர் “சண்டே ஒப்சேவர் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனம் ஆகியவற்றை பாராட்டியுள்ளார்.

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவரும் முன்னாள் ஆனந்தா கல்லூரி அணித் தலைவரும், கடந்த 1980 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் ஒப்சேவர் பிரபல்யமான பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதுகளை வென்றவருமான அர்ஜுன ரணதுங்க தனது கிரிக்கெட் ஆட்டத்தின் ஆரம்ப நாட்களை இன்றும் பெருமையுடன் நினைவுகூருகின்றார்.

“ஏராளமான இடங்களுக்குச் சென்று ஏனைய பல விருதுகளை வென்றெடுத்த போதிலும், எந்தவொரு கிரிக்கெட் வீரரினதும் வாழ்க்கையில் ஓப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டியிலும் வென்றெடுத்த விருதானது என்றுமே மறக்க முடியாததாகும். நான் 1982இல் இலங்கை அணிக்காக விளையாட ஆரம்பித்த போது எனக்குக் கிடைத்திருந்த இரண்டு விருதுகளும் எனக்குள் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்த்தன எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இலங்கை அணித் தலைவரும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி நடுவருமான ரொஷான் மகாநாம இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தனக்கு 1983 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் கிடைத்த ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதுகள் விலைமதிக்க முடியாதவையாகும். இதன் மூலம் எனது நீண்டநாள் கனவுகளில் ஒன்றை என்னால் நனவாக்க முடிந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

கடந்த 1996 இல் இலங்கை அணி உலகக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்ட அந்த வரலாற்றுப் புகழ்மிக்க போட்டியின் ஆட்டநாயகனான சனத் ஜயசூரிய ஒப்சேவர் பாடசாலை வீரர் விருதின் மகத்துவம் பற்றி கருத்து வெளியிடுகையில், வெளிமாவட்ட பாடசாலையான மாத்தளை புனித சவேரியார் கல்லூரி அணிக்காக தான் விளையாடி கடந்த 1988இல் ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதின் மூலம் நான் இலங்கை கிரிக்கெட் அணிக்குத் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன.

முன்னாள் இலங்கை அணித்தலைவர் ஹஷான் திலகரத்ன இதுபற்றி குறிப்பிடுகையில், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கென உன்னதமான சேவையை ‘சண்டே ஒப்சேவர்’ ஆற்றியுள்ளது. நாட்டில் உத்தியோகபூர்வமான பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப்போட்டிகள் எதுவும் நடத்தப்படாத காலகட்டத்தில், இத்தகைய விருதுகள் வழங்கும் வைபவத்தை நடாத்த லேக்ஹவுஸ் நிறுவனம் துணிந்து செயற்பட்டமை உண்மையில் பாராட்டத்தக்கது என்றார். இது ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் உந்துசக்தியாக அமைந்தது.

கடந்த 2009 இல ஒப்சேவர்- மொபிடெல் பாடசாலை விருதினை ஆனந்தா கல்லூரி அணித்தலைவராக களமிறங்கி வென்றெடுத்த தினேஷ் சந்திமால் இதுபற்றிய தனது கருத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார். “இந்த விருதின் மூலம் எனது வாழ்க்கையில் புதியதோர் அத்தியாயம் துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் தொடங்கியது எனத் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...