Thursday, April 25, 2024
Home » கண்டி சித்தி லெப்பை கல்லூரியின் கேட்போர் கூட திறப்பு விழா இன்று

கண்டி சித்தி லெப்பை கல்லூரியின் கேட்போர் கூட திறப்பு விழா இன்று

by sachintha
November 10, 2023 8:13 am 0 comment

கண்டி மாநகரில் கல்வி ஒளிச்சுடராக கம்பீரமாகத் தோற்றமளிக்கும் சித்திலெப்பைக் கல்லூரி இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரலாற்றில் புதியதொரு மைல்கல்லாக, தடம் பதிக்கும் மாபெரும் நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இப்பிரதேச மக்களின் பிள்ளைகளின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் முஸ்லிம் பாடசாலையாகவும் மிகப் பெரும் சொத்தாகவும் இக்கல்லூரி திகழ்கிறது.

இக்கல்லூரியின் முக்கியமானதும் முதன்மையானதுமான கேட்போர் கூடத் தேவையினை சித்திலெப்பை கல்வி அபிவிருத்திச் சங்கம் (செடா), கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், ஸம்ஸம் அமைப்பு, கண்டி சிட்டி ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு, முஸ்லிம் வர்த்தக சங்கம், கண்டி மஸ்ஜித் சம்மேளனம், பாடசாலை அபிவிருத்தி சபை போன்ற அமைப்புக்களினதும் நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்களின் கூட்டு முயற்சியினால் செடா அமைப்பின் தலைமைத்துவத்தினாலும் தியாகத்தினாலும் உருவாக்கப்பட்டது. வல்லோன் அல்லாஹ் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக. ‘அல்ஹம்துலில்லாஹ்’

எமது தேசத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கையில்; இலங்கை தாய்த்திரு நாட்டின் தோற்றம், வளர்ச்சி, உயர்வு என்பவற்றில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த முக்கியமும் முதன்மையுமானவருமான வரலாற்றின் தந்தையாகக் கருதப்படுபவர் அறிஞர் எம்.ஸீ. சித்திலைப்பை அவர்கள். அவர் தம் சொந்த மண்ணிலே வாழும் மக்களின் கல்வித் தேவையினை நிறைவு செய்ய தனியானதொரு இடமின்றி தவித்துக் கொண்டிருந்த வேளையிலே தாமே அதற்கான காணியை வழங்கி 1887ஆம் ஆண்டு தனது சகோதரியையே ஆசிரியராக நியமித்து ஒரு கட்டிடத்தை சமூகத்திற்கு வழங்கினார். அன்றைய காலகட்டத்தில் அரபு மொழியும் பெண்களுக்கான மத்ரஸா கல்வி என்று இணைந்து தொழிற்பட்டு ஆங்கிலக் கல்வியும் புகட்டப்பட்டது. பெண்கள் பாடசாலை, கலவன் பாடசாலை, அரசாங்க பாடசாலை, முஸ்லிம் வித்தியாலயம், மகா வித்தியாலயம் என்று படிமுறை வளர்ச்சியின் பின் தற்காலத்தில் சித்திலெப்பைக் கல்லூரியாக நாமம் பெற்று மும்மொழிப் போதனைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

1943 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கப் பாடசாலையாகவும் 1962 ஒக்டோபர் முதலாம் திகதி மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டதுடன் ஒஸ்மாணியா என்ற பெயரையும் பெற்றது. 1971 ஆண்டு முதல் தரம் 1 – 8 வரையான மாணவிகள் கண்டி பெண்கள் கல்லூரிக்கு அனுப்பப்பட்டனர். பின்பு கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது.

2018 ஆம் ஆண்டு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டு, பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு பல்துறை வளர்ச்சியை, கண்டு வருவதுடன், மறுமலர்ச்சியுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

1971 ஆம் ஆண்டு காலப்பகுதயில் விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம் என்பன அமைக்கப்பட்டன. இவையும் தற்காலத்தில் நவீனமயப்படுத்தப்பட்டு மாற்றங்கள் பெற்றுள்ளன. 1972ஆம் ஆண்டு கண்டிப் பிரதேச அறிஞர்களினதும் மக்களினதும் சமூக நலன் விரும்பிகளினதும் பெற்றோர்களினதும் அபிலாசைகளின்படி எமது சமூகத்தின் தேசபிதாவான அறிஞர் சித்திலெப்பை அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவையினைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக சித்திலெப்பை கல்லூரி என்ற நாமம் சூட்டி கல்விப் பணியை தொடர்வதுடன், 1C தரத்துடன் கல்வியொளி பரப்புகின்றது. சித்திலெப்பை கல்லூரி ஈன்றெடுத்தச் செல்வங்கள் தற்காலத்தில் உலகில் பல பாகங்களிலும் பல்துறைசார் சேவைகளை வழங்கி வருவதும் பெருமைக்குரியவிடயமாகும்.

1943 ஆம் ஆண்டு தொடக்கம் எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு சேவையாற்றிய அதிபர்களாக எம். ஹஸன், வீ.முத்துலிங்கம், எம். தாஹா, எம். லியாவுத்தீன், எம். முஹம்மட், எம். இஸ்மாயில், எம்.ஏ. அஸீஸ், எம். சலீம், முஹம்மட், எம். கப்பார், எம். ஹனீபா, எம் ஹுசைன், எம் குவைலிதீன். எம்.சலாஹுத்தீன், ஜனாபா எஸ்.எஸ் மஸாஹிமா போன்றோர் திகழ்ந்துள்ளனர்.

தற்போதைய கல்வியின் வளர்ச்சிக்காக அதிபர் ஏ.ஜி.எம்.தமீம் பணியாற்றி வருகிறார். அவர் பதவியேற்ற பின் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டு வரும் இக்கல்லூரி கண்டி வாழ் மக்களின் கல்வித் தேவையை நிறைவு செய்யும் ஒரு பொக்கிஷமாக உள்ளதென நாம் புரிந்து செயற்படுவது அவசியமாகும். இன்றைய காலகட்டத்திலே மானிடவளம், பௌதீக வளம், முகாமைத்துவம், கல்வி இணைப்பாட விதானம் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளிலும் உயர் நோக்கங்களைக் கொண்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

பன்மைச் சமூக அமைப்பைக் கொண்ட எமது தாய் திருநாட்டில் தமிழ், சிங்களம் என்ற மொழிப் பிரிவுகளுடனும் சர்வதேச தொடர்பாடல், காலத்தின் தேவையென்பதை கருத்திற் கொண்டு 2013 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 6 இலிருந்து ஆங்கில மொழிக்கல்விக்கும் உரிய இடமளிக்கப்பட்டு கல்விப் போதனைகள் இடம்பெறுவது காலத்தின் தேவையை நிறைவு செய்யும் செயற்பாடாக உள்ளது.

கல்லூரியின் வளர்ச்சிப்பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் வேளையிலே எமது மாணவர்கள் ஏனைய சகோதர சமூகத்தைச் சார்ந்தவர்களுடன் போட்டியிட்டு நாம் எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்லர் என்று பல வெற்றிகளையும் பரிசுகளையும் சாதனைகளையும் புரிந்து சமூகத்திற்கும் கல்லூரிக்கும் நற்பெயரை பெற்றுத் தருகின்றனர். இவை மறுமலர்ச்சியின் எடுத்துக் காட்டாக அமைகின்றது. எமது கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் வெளிக்கள போட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி பல்வேறு வெற்றிகளை பெற்று பாடசாலைக்கு பெருமைகளை ஈட்டித் தந்துள்ளனர். அந்தவகையில்; பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மாணவன் எஸ்.டென்சில் வெள்ளிப்பதக்கத்தையும், ஜூடோ போட்டியில் மாணவன் எம்.ஐ.எம். இமாத் மற்றும் எம். ஸைஹான் தங்கப் பதக்கத்தினையும், எம்.ஆர்.எம். இஸ்பாக் மற்றும் எம்.ஆர்.எம். இனாஸ் வெள்ளிப் பதக்கத்தினையும், வை.எம்.சி. சார்பாக குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு மாணவர் எம்.எஸ்.எம். உமர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கடந்த வருடங்களில் கல்லூரியின் நாமத்தை சமூகத்திற்கு பறைசாற்றியுள்ளனர்.

உதைப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் பிரதேச ரீதியிலான வெற்றியினைத் தமதாக்கிக் கொண்டனர். மேலும் இஸ்லாமிய தினப் போட்டி, சமூக, விஞ்ஞானப் போட்டி, தமிழ் மொழித்தினப் போட்டி, சித்திரப் போட்டி, ஆங்கில தினப்போட்டி, விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் தன்னம்பிக்கையுடன் கலந்து கொண்டு பெரும் வெற்றிகள் பலவற்றையும் பெற்றுக் கொண்டனர். தேசிய ரீதியில் நடைபெற்ற மீலாதுன் நபி விழாப் போட்டியில் சிங்கள மொழிப் பிரிவைச் சேர்ந்த தரம் 10 மாணவன் எம்.என்.எம். மிராஜ் இரண்டாமிடத்தைத் தனதாக்கிக் கொண்டு, கல்லூரியின் நாமத்தை ஏனையோரும் அறியும் வண்ணம் சாதனையைப் புரிந்துள்ளார்.

மேலும், சர்வதேச ரீதியில் தொடர்பாடல் செயற்பாடுகளில் பங்கு கொண்டு கல்வி அமைச்சும் பிரித்தானிய தூதரகமும் நடாத்திய சர்வதேச ரீதியிலான ஐ.எஸ்.ஏ. நட்சத்திர விருது (2014/2015) மற்றும் (2016/2017) ஆகிய இருகாலகட்டத்திற்குரிய இரண்டு விருதுகளும் எமது கல்லூரிக்கு கிடைத்தமை அனைவரும் பாராட்டத்தக்கது. இது பல்துறை வெற்றிகளுக்கு பக்க பலமாகத் திகழ்ந்தது. அத்தோடு 2014 ஆம் ஆண்டு சிறந்த அதிபருக்கான ‘பிரதீபா பிரபா’ விருதினையும் எமது கல்லூரி அதிபர் பெற்றுக் கொண்டார்.

தற்காலத்திலே நவீனத்துவத்திற்கு ஏற்றாற் போல் கற்றல் – கற்பித்தல் முறைகளை உள்ளடக்கிய ‘நுண்திறன் வகுப்பறை’ மூன்றினை ‘செரண்டிப்’ நிறுவனம் வழங்கி மாணவர் கல்வியை ஊக்கப்படுத்தி வழிப்படுத்தியுள்ளது. நவீனத்துவ முறையில் அமைந்த ஆரம்பப் பிரிவு சாரணர் குழு, பேண்ட் வாத்தியக் குழு, கணினி பிரிவு, ஆரம்ப ஒலி ஒளி பிரிவு மேலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைகின்றமையும் சிறந்த புள்ளிகளைப் பெற்று வருகின்றமையும் மற்றும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் (2019) சிறந்த சித்திகளைப் பெற்றமையும் கணித, வர்த்தக ஏனைய கலைத்துறைகளுக்கும் தெரிவானதோடு பாடசாலை தர ரீதியிலும் உயர் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்தது. எமது பாடசாலை மாணவர்களின் தேவைகளை அறிந்த சமூக. நலன்புரி அமைப்புக்கள் கற்றல் உபகரணங்கள், உலர் உணவுகள், பொதிகள் போசனைத் திட்டங்கள், உடைகள் என்பவற்றை வழங்கி ஊக்கமும் உற்சாகமும் அடைந்திட வழிசெய்கின்றன.

குறிஞ்சி நில மண்ணிலே, பன்மொழிச் சமூக அமைப்பினைக் கொண்ட பிரதேசமாக கண்டி நகரம் காணப்படுவதால் இங்கு எம்முடன் சிங்களம், தமிழ், கிறிஸ்தவம் ஆகிய மொழிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் ஒற்றுமையாகக் கல்வியைத் தொடர்வதுடன் சகோதர இனத்தைச் சார்ந்த ஆசிரியர்களும் ஒருமைப்பாட்டுடன் பணியாற்றி புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக சேவை புரிவது அனைவருக்கும் படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் அமையப் பெற்றுள்ளது. கொரோனா எனும் கடுமையான இடர்காலத்திலும் அதன் பின்பும் மாணவரின் கல்வியை மேம்படுத்துவதில் எமது ஆசிரியர்கள் அரும்பாடுபட்டு தொண்டாற்றி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் பௌதீக வள அபிவிருத்தியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவதில் அவ்வப்போதைய கால அதிபர்களும் அரசியல்வாதிகளும். கல்வி நிறுவனங்களும் சமூக சேவையாளர்களும் பல உதவிகளை வழங்கி மேம்பாட்டிற்கு தன்னலம் அற்ற சேவைகளை வழங்கி பாடசலையின் வளர்ச்சிக்கு பக்க பலமாகத் தொழிற்பட்டுள்ளனர் என்பதை வரலாறுகள் சான்று பகர்கின்றன. இன்று திறந்து வைக்கப்படும் கேட்போர் கூடம் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டட முதற்கட்டத் திறப்பு விழா முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

எமது கல்லூரியின் எதிர்கால வேலைத் திட்டங்களாக, கல்வித்துறையில் உயர்நிலையை அடைதல், நவீனத்துவத்திற்கு ஏற்ற உயர் நோக்கையுடைய, உயர் சமூக பரம்பரையை உருவாக்குதல், பல்துறைசார் சான்றோர்களை அதிகரித்தல், சவால்களை எதிர்கொண்டு வெற்றிப்பாதையில் வீறுநடை போடும் புத்தாக்க சமூகத்தை உருவாக்குதல், விளையாட்டுத்துறையில் உயர்நிலையை அடைந்து வெற்றிகளை தேசிய ரீதியில் அடைதல், சமூகத்தில் உயர்நிலை கல்லூரியாக திகழ்தல் போன்றனவாகும்.

இவ்வாறு பிரதேச மக்களின் அறிவுப் பசியைத் தீர்த்து வைக்கும் நோக்கில் உருவான கல்லூரியின் வளர்ச்சிக்கு பாலமாகவும், அச்சாணியாகவும் திகழும் நோக்கில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புத்திஜீவிகள், தனவந்தர்கள், நல்லுள்ளம் கொண்ட நல்லோர்கள் வர்த்தக சங்கத்தினர், கண்டி பொதுவைத்தியசாலை வைத்தியர் எம்.எச்.எம். சலாஹுத்தீன் அவர்களைத் தலைவராக கொண்டு உருவான சித்திலெப்பை கல்வி அபிவிருத்தி சங்கம் (செடா), ஸம்ஸம் அமைப்பு, கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், கட்டுக்கலை முஸ்லிம் இளைஞர் பேரவை, கண்டி சிட்டி ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் வர்த்தக சங்கம் கண்டி, முஸ்லிம் சம்மேளனம் கல்லூரிக்கு என்றும் உறுதுணையாக நின்று செயற்படும் மௌலவி எம்.சியாமை செயலாளராகக் கொண்டு இயங்கி வரும் பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் (எஸ்.டீ.சி), சட்டத்தரணிகள் சங்கம், வை.எம்.எம்.ஏ கட்டுக்கலை பரிபாலன சபை, ஒரபிபாஷா கலாசார நிலையம், பழைய மாணவர் சங்கம், பொதுநல இயக்கங்கள், சமூக நலன் விரும்பிகள், பெற்றோர் போன்ற பலரும் அரும்பாடுபட்டு ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து உழைக்கின்றனர். அனைவரின் உயர் நோக்கினை இறைவன் பொருந்திக் கொள்வானாக.

‘ஸதகத்துல் ஜாரியாவில்’ உள்ளடக்கப்படும் கல்விக்காக உதவும் இந்த ஈருலக நன்மையை பெற்றுத்தரும் செயற்பாடுகளை வல்ல நாயன் ஏற்று அருள்புரிந்து உதவ வேண்டுமெனவும் எமது சமூகத்தினதும் கண்டி வாழ் மக்களினதும் மாபெரும் சொத்தான கலைக்கூடத்தினை வலுவும் வளமும் பெற்றதாக மாற்றியமைத்து உயர்வடைச் செய்வது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மைப் பொருந்திக் கொள்வானாக.

ஆசிரியை ரஸ்மியா ஆஸீன்

(கண்டி – சித்தி லெப்பை கல்லூரி)

படங்களும் தகவல்களும் – இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT