பேச்சுவார்த்தையை அடுத்து FB தடை நீக்கம் | தினகரன்


பேச்சுவார்த்தையை அடுத்து FB தடை நீக்கம்

 

பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் மீது விதிக்கப்பட்ட தற்காலிக தடைநீக்கம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனது அறிவுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோவுக்கும் பேஸ்புக் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (15) ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் செய்தியொன்றை விடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தையில், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரப்புதல், வன்முறைகளை ஏற்படுத்தும் விடயங்களை பகிர்வது உள்ளிட்ட விடயங்களை தங்களது ஊடகத்தின் ஊடாக இடம்பெறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக, பேஸ்புக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதனையடுத்து, பேஸ்புக்கில் நுழைவதற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்குமாறு, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து, Facebook உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இனவாத, மதவாத கருத்துகளை பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தே இவ்வாறு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தற்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, சமூக வலைத்தளங்களின் தற்காலிக தடை படிப்படியாக நீக்கப்பட்டது.

அதற்கமைய நேற்று (14) முதல் Viber செயலியும், இன்று (15) முதல் WhatsApp செயலியும் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...