த.தே.கூட்டமைப்பின் ஆதரவு சரிந்துள்ளதென்பது மாயை | தினகரன்

த.தே.கூட்டமைப்பின் ஆதரவு சரிந்துள்ளதென்பது மாயை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்பது ஒரு மாயை என்பதை விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (15) வியாழக்கிழமை காலை இடம் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்களை மாவட்டம் தோறும் சென்று சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு வருகின்றோம்.

மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் எங்களின் மக்கள் பிரதிநிதிகளை நாங்கள் அழைத்து மக்களின் கருத்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு தெரியப்படுத்தி பல்வேறு செயல் திட்டத்தை அமுல் படுத்தி எமது கட்சியை இன்னும் பலமான கட்சியாக எதிர்காலத்தில் செயல் படுத்துவதற்கு ஏற்ற வழி முறைகளை ஏற்படுத்திக் கொள்ள இச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்போடு இன்னும் அதிக அளவு ஒருமித்தவர்களாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரு சரிவு ஏற்பட்டுள்ளதை மேலோட்டமாக பார்க்கப்பட்ட போதும் அது இத்தேர்தலின் இயல்பு என்று சொல்லக்கூடிய வகையிலே பலர் மாறாகவே வாக்குகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் தேர்தல்களிலே தாங்கள் எங்கு நின்றார்களோ அந்த இடத்திற்கே மீண்டும் வந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைப்போம் என்ற விடயத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போது இருக்கின்ற இச்சூழ்நிலையில் மக்கள் அபிவிருத்தியை நோக்கிய விடயங்களிலும் அக்கறையாக இருக்கின்றார்கள். அந்த விடயங்களை செய்ய வேண்டிய கடற்பாடு எங்களுடைய உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.ஏனைய மாவட்டங்களிலும் சென்று மக்களின் அபிப்பிராயங்களை பெற்ற பின் எமது அறிக்கையை எமது உயர் சபைக்கு சமர்ப்பிப்போம்.

அதன் பின்னர் கட்டமைப்பை உருவாக்குதல் என்கின்ற செயற்பாட்டிற்கு வந்து இன்னும் எமது செயற்பாடுகளை முன் நின்று செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.


There is 1 Comment

plz give the chance for young boy to nominate for election in tna than tna can get most votes in north this is the time to change and most of the youngers nomitening for other parties ...reason is this......

Add new comment

Or log in with...