2/3 பெரும்பான்மை சபையில் கிடைத்தால் மாகாணசபை தேர்தல் | தினகரன்

2/3 பெரும்பான்மை சபையில் கிடைத்தால் மாகாணசபை தேர்தல்

*21 இல் மாகாண எல்லை நிர்ணய விவாதம்

*கட்சிகளுக்கு சபையில் திருத்தங்கள் முன்வைக்க வாய்ப்பு

மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் துரிதமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி இது தொடர்பான பாராளுமன்ற விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர், எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்ய எந்தக் குழுவும் அமைக்கப்படாது எனவும் பாராளுமன்றத்திலேயே தேவையான திருத்தங்களை செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் கையளிப்பது மட்டுமே எனது பொறுப்பு. அதன் பின்னரான சகல நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினூடாகவே முன்னெடுக்கப்படும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேறாவிட்டால் பிரதமர் தலைமையிலான குழுவில் இது பற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

உள்ளூராட்சித் தேர்தல் புதிய கலப்பு முறையில் நடந்த நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என சில கட்சிகள் கோரியுள்ளன. உள்ளூராட்சி தேர்தலில் சில குறைபாடுகள் இருந்தாலும் மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தி பின்னோக்கி செல்வது உகந்ததல்ல. சுதந்திரக் கட்சி பழைய முறையில் செல்வதை விரும்பினாலும் புதிய முறையே உகந்தது என்ற நிலைப்பாட்டிலே இருக்கிறேன்.

சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோரியுள்ளன. சிறுபான்மை பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தேசிய ரீதியில் சிந்திக்க ​வேண்டும்.

மேன்முறையீடு செய்ய குழு எதுவும் இல்லாத நிலையில் எம்.பிக்களினுடாகவே தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முடியும்.

எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்க சுயாதீனமாக குழு நியமிக்கப்பட்டது. அதில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை. சகல கட்சிகளையும் அழைத்து சர்வ கட்சி கூட்டமொன்றை கூட்டுமாறு நான் இந்தக் குழுவிடம் யோசனை முன்வைத்திருந்தேன். ஆனால் அறிக்கை காலதாமதமாகும் என இந்த குழு கூறியதால் சர்வ கட்சி குழு கூட்டப்படவில்லை. கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்பிக்க முடியும்.

மூன்று மாகாண சபைகள் ஆளுநரின் கீழ் செயற்படுகின்றன. எல்லை நிர்ணய அறிக்கை நிறைவேற்றப்பட்டு தேர்தல் நடைபெறும் வரை தொடர்ந்து அவை ஆளுநரின் கீழேயே செயற்படும்.

எல்லை நிர்ணயத்தில் கலப்பு மற்றும் விகிதாசார வீதங்கள் 50 ற்கு 50 ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அனைத்து திருத்தங்களும் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை போன்று அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என்றார்.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதத்தை பிற்போடுமாறு சிறுபான்மை கட்சிகள் அரசாங்கத்தை கோரியுள்ளதாக அறிய வருகிறது.

ஷம்ஸ் பாஹிம்

 


There is 1 Comment

yaaru venum endalum election kekalama?????????

Add new comment

Or log in with...