Friday, April 19, 2024
Home » இஸ்லாம் கூறும் குடும்பத் தலைவி

இஸ்லாம் கூறும் குடும்பத் தலைவி

by sachintha
November 10, 2023 6:53 am 0 comment

டும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், அநேக குடும்பங்கள் சுவனக்குடும்பங்களாக மாறிவிடும்.

நமது குடும்பங்களை இறைவன் விரும்பும் இஸ்லாமியக் குடும்பங்களாக மாற்றுவதில் இல்லாளின் பங்கு அளப்பரியது. குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறாதவரை சமூக மாற்றமும் சாத்தியம் அற்றது. ஆரோக்கியமான குடும்பமே வளமான சமூகத்தை உருவாக்கும். ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு குடும்பத் தலைவிக்கே உள்ளது.

அல் குர்ஆன் அனைத்துத் துறைகளைக் குறித்தும் பொதுவாகவும் சுருக்கமாகவும் எடுத்தியம்பியுள்ளது. ஆனால் குடும்பவியல் குறித்து மட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்கலாம். இதன் ஊடாக குடும்பவியலுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

நல்ல குடும்பம் என்பது அமைதியையும் மகிழ்ச்சியையும் அடித்தளமாகக் கொண்டே அமைக்கப்படுகிறது. குடும்பங்களில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட வேண்டுமெனில் தலைவனும்-தலைவியும், கணவனும்– மனைவியும் பரஸ்பரம் தமக்கிடையே நிறைவேற்ற வேண்டிய உரிமைகள், கடமைகள் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். கணவனும் மனைவியும் குடும்பத்தின் பங்காளர்களாவர்.

சிறந்த சந்ததிகளை உருவாக்குவதுதான் குடும்ப வாழ்வின் இலக்கு. இன்பகரமான குடும்பப் பின்னணியின் மூலம்தான் தூய சந்ததிகளை உருவாக்கலாம். அந்த இன்பகரமான குடும்பப் பின்னணியைத் தோற்றுவிப்பதில் குடும்பத் தலைவியின் பொறுப்பு பெரும் பங்காக இருக்க வேண்டும்.

குறிப்பாக பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் விஷயத்தில் குடும்பத்தலைவி முன்மாதிரித் தாயாகத் திகழ வேண்டும். வரலாற்றில் சாதனை படைத்த ஆளுமைகளுள் பெரும்பாலானோர் சிறு பருவத்திலேயே தாய்மார்களால் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். தாய்மார்களால் தனிக்கவனம் செலுத்தப்பட்ட பிள்ளைகளே பிற்காலத்தில் பெரும் ஆளுமை மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர்.

அன்றைய தாய்மார் தமது பிள்ளைகளுக்கு ஊட்டும் அமுதுடன் அறிவையும் ஒழுக்கப் பண்பாடுகளையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர்.

அலி (ரழி) அவர்களை, “அறிவின் தலைவாசல்” என்று நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறினார்கள். இதற்கான மூலகாரணம், அவரின் தாய் பாத்திமா பின்த் அசத் (ரழி) அவர்கள்தான். ஸுபைர் (ரழி) அவர்கள் அறிவும் ஞானமும் நற்பண்புகளும் மிக்கவராகவும் பெரும் வீரராகவும் திகழ்ந்தார்கள்.

“ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஒரு மெய்க்காப்பாளர் இருப்பார். எனது மெய்க்காப்பாளர் ஸுபைர் (ரழி)” என்று பெருமானார் (ஸல்) அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் அவர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள்கள் பிடித்து போர் செய்யும் ஆற்றல் பெற்ற தனிப்பெரும் வீரராகத் திகழ்ந்தார். இவ்வளவு சிறப்புக்கும் அவரது தாயார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் ஆவார்.

‘இரண்டாம் உமர்’ என்றும் ‘நேர்வழி நின்ற ஐந்தாம் கலீபா’ என்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெருமையுடன் பாராட்டப்படுபவர்தான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள். இவரது தாயார், உமர் (ரழி) அவர்களுடைய மகனான ஆஸிம் (ரழி) அவர்களுடைய மனைவியாகும். இப்பெண்மணி நற்குணத்திலும் இறையச்சத்திலும் இறைவழிபாட்டிலும் மிகச்சிறந்தவராக விளங்கினார். ஆகவே தமது மகனை ஒரு தலைசிறந்த ஆளுமை மிக்க முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

இமாம் ஷாபி (ரஹ்) அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியுமா? சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் அவர். ஆயினும் அன்னாரின் தாயார் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களைப் பேணி வளர்த்து, அமுதோடு அறிவையும் சேர்த்து ஊட்டி உலகம் போற்றும் உத்தம அறிஞராக மாற்றிக்காட்டினார். அனைத்துப் பெருமையும் அன்னாரின் தாயாரையேச் சாரும்.

இமாம் அவர்களின் தாயார் குறிப்பிடுகையில், “நான் எனது மகன் ஷாஃபிக்கு எப்பொழுதெல்லாம் பாலூட்ட நினைப்பேனோ அப்போதெல்லாம் உளு செய்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக தந்தையைவிட தாய்தான் பிள்ளைகளுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுவார். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவார். இதனால் தான் தாய்-சேய் உறவு பலமடைகிறது. தாயின் மடியே பிள்ளைகளின் முதல் பள்ளிக்கூடமாகத் திகழ்கிறது. அங்கு கற்பிக்கப்படும் பாடங்களும், கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்களும்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன, சிறந்த ஆளுமைகளாக அவர்களை உருவாக்குகின்றன என்பதை குடும்பத் தலைவிகள் மறந்துவிடலாகாது.

ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுத்து அன்னையால் வார்த்தெடுக்கப்படும் பிள்ளைக்கும், தாயால் வளர்க்கப்படாத பிள்ளைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அழகுறப் புரிந்துகொள்ளலாம்.

நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மலை உச்சி மீது ஏறி நின்ற தமது மகனை நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கின்றார்கள். அவனோ கப்பலில் ஏற மறுகின்றான். இக்காட்சியை அல் குர்ஆன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது, “அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார். “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள். நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே”. அதற்கு அவன் பதிலளித்தான். “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன். அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.”

(11:42)

இறுதியில் என்னவாயிற்று..? அதையும் அல் குர்ஆனே விவரிக்கின்றது: “இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்!”

(11:43)

இங்கு வாழ வருமாறு தந்தை அழைக்கின்றார். ஆனால் தந்தையின் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து மகன் தண்ணீரில் மூழ்கிப்போனான். நூஹ் (அலை) அவர்களின் மனைவியும் மகனின் தாயாரும் ஒரு முஸ்லிமாக இருக்கவுமில்லை, அவர் மகனுக்கு ஒழுக்கப்பண்புகளை கற்றுக்கொடுக்கவும் இல்லை.

அதே சமயம் இப்றாஹீம் (அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைத்தார். அதுவும் அறுத்துப்பலியிடவாகும். மகனின் பதில் என்னவாக இருந்தது? என்பதை அல் குர்ஆன் இவ்வாறு எடுத்தியம்புகிறது.

“என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவுகண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார், “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்” (37:102)

இங்கு தந்தை மரணத்தை நோக்கி அழைக்கிறார். ஆயினும் மகனின் பதிலைப் பாருங்கள். இப்படியொரு வியத்தகு பதிலைக் கூறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார்? இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மனைவியும், இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய தாயாருமான ஹாஜரா (அலை) அவர்களாவர். அன்னாரின் பிள்ளை வளர்ப்பு அவ்வாறு சிறப்பாக அமைந்திருந்தது.

ஒரு தந்தை தனது மகனை வாழ்வதற்காக அழைக்கிறார். மகன் அவ்வழைப்பை ஏற்க மறுக்கிறான், நிராகரிக்கின்றான். அதேசமயம் இன்னொரு தந்தையோ தமது மகனை அறுத்துப் பலியிட மரணத்தை நோக்கி அழைக்கிறார். மகனோ உடனடியாக அவ்வழைப்புக்குச் செவி சாய்கின்றார்.

இரு மகன்களுக்கும் இடையே நிலவும் இவ்வேறுபாடு உணர்த்துவது என்ன? தாயின் வளர்ப்பு மிகச்சரியாக அமைந்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதையாகும். இதுவே இல்லற வாழ்வில் இல்லாளின் கடமை!

ஆகவே, நாமும் நமது குடும்பமும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தந்தையின் பங்களிப்பைவிட தாயின் பங்களிப்பே அதிகம் தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே போதும், அநேக குடும்பங்கள் சுவனக்குடும்பங்களாக மாறிவிடும் என உறுதிப்படக்கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT