தினகரனுக்கு 86 ஆண்டு பூர்த்தி | தினகரன்

தினகரனுக்கு 86 ஆண்டு பூர்த்தி

தினகரன் பத்திரிகைக்கு 86 ஆண்டு பூர்த்தி-Thinakaran Newspaper Celebrate 86 Birthday-Since-1932

 

86 ஆண்டுகள் கடந்த வெற்றிப் பயணம் (1932 - 2018)

 

தினகரன் பத்திரிகையின் முதலாவது இதழின் முதல் பக்கம்

இலங்கையின் நீண்ட காலப் பெருமை வாய்ந்த தமிழ் தேசியப் பத்திரிகையான தினகரன் இன்று தனது 86 வது வருட பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

இந்து சமுத்திரத்தில் எழில்மிகு முத்தாக விளங்கும் இலங்கை  ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புக்கு நாலரை நூற்றாண்டு காலம் உள்ளாகி இருந்தது.  இவ்வாக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெறுபவதற்கான முயற்சிகள் 20 ஆம்  நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வேகமடையத் தொடங்கின. இதற்கு இந்தியாவில்  முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமும் அதிக பங்களிப்பு  நல்கியது.

அந்த வகையில் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கடந்த  காலங்களைப் போலல்லாது இம்முறை ஊடகங்களைப் பயன்படுத்தும் முறைமை  அறிமுகமானது. அதாவது ஊடகங்களைப் பாவித்து மக்கள் மத்தியில் சுதந்திர  வேட்கையை விதைக்கவும், அதன் அவசியத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொண்டு  செல்லவும் முடியும் என்ற நம்பிக்கை தோற்றம் பெற்றதே இதற்கான அடிப்படைக்  காரணமாகும். இதற்கு டி.ஆர். விஜேவர்தன முன்னோடியாக அமைந்தார்.

1914 இல் 'தினமின' பத்திரிகையை வெளியிடத் தொடங்கியதோடு  சுதந்திரத்திற்கு பத்திரிகையைப் பயன்படுத்தும் ஒழுங்கைமைக்கப்பட்ட நிலைமை  இந்நாட்டில் உருவானது. சிங்கள மொழியிலான இப்பத்திரிகைக்கு கிடைக்கப் பெற்ற  ஆதரவும் வரவேற்பும் சொற்ப காலத்தில் ஆங்கில மொழிப் பத்திரிகையை  ஆரம்பிக்கவும் அவரை இட்டுச் சென்றது.

இவ்வாறான நிலையில், இந்நாட்டின்  சுதந்திரத்தின் தேவையையும், அதற்காக முன்னெடுக்கப்படுகின்ற  நடவடிக்கைகளையும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும்  கொண்டு செல்லவும், அதனூடாக சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முழுநாட்டிலும் ஏற்படுத்துவதையும் ஒரே நோக்காகக் கொண்டு 1932.03.15 அன்று தினகரன்  தினசரியை டி.ஆர். விஜேவர்தன ஆரம்பித்தார்.

இலங்கையின் முதலாவது தமிழ் தினசரியாக 1930 முதல் வீரகேசரி  வெளியான போதிலும், அன்று அப்பத்திரிகை முற்றிலும் இந்நிய சுதந்திரப்  போராட்டம் தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும் ஒன்றாகவே  காணப்பட்டது. அதனால் இலங்கையின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும்  சுதந்திரப் போராட்டத்தை இந்நாட்டு தமிழ் பேசும் மக்களுக்குக் கொண்டு  செல்வதற்கான ஊடகத்தின் தேவையும் வெற்றிடமும் நிலவியது.

இந்த தேவையையும், வெற்றிடத்தையும் நிறைவு செய்யும் வகையில்தான் டி.ஆர். விஜேவர்தன தினகரன் தினசரியை ஆரம்பித்தார். உள்நாட்டில் வாழும்  தமிழ் பேசும் மக்களின் சமய, கலாசார மொழிப் பாரம்பரியங்களின் ஊடாக  இந்நாட்டின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளைத் தமிழ் பேசும் மக்களுக்கு  கொண்டு செல்வதே இப்பத்திரிகையின் பிரதான நோக்கமாக இருந்தது. ஆனாலும் அந்நோக்கத்தை  ஆரம்பத்திலேயே நிறைவு செய்ய முடியவில்லை. ஏனெனில் பத்திரிகைத் துறையில்  பரிச்சயம் மிக்கவர்களை உள்நாட்டில் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட சிரமம்  காரணமாக தினகரனில் கடமையாற்றவென பத்திரிகை ஆசிரியர் உட்பட  உதவியாசிரியர்களையும், ஊழியர்களையும் தமிழகத்தில் இருந்து தருவிக்க வேண்டிய  நிலைமை டி.ஆர். விஜேவர்தனவுக்கும் ஏற்பட்டது.

அதனால்தான் தினகரனும்  வீரகேசரியைப் போன்று ஆரம்ப காலப் பகுதியில் தென்னிந்தியப் பத்திரிகைகளின்  சாயலிலேயே வெளிவந்தது.பத்திரிகையின் மொழிநடை, மொழிப் பிரயோகம் என்பவற்றில்  தமிழகத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

ஆனாலும் உள்நாட்டு எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கும் தினகரன் களம் வழங்கத் தவறவில்லை.

இந்த வகையில் 1932. 03. 15 அன்று வெளியான தினகரனின் முதலாவது  இதழில் பத்திரிகையின் நோக்கத்தை டி.ஆர். விஜேவர்தன மிகத் தெளிவாகக்  குறிப்பிட ஏற்பாடு செய்தார். அதாவது 'தமது நோக்கம்' என்ற தலைப்பில் வெளியான  அத்தலைப்பில், 'இப்பத்திரிகை யாருக்காக பிரசுரம் செய்யப்படுகின்றதோ  அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கைப் பொறுப்புக்கு நாம்  பாத்திரங்களாகவிருப்பதற்கு மனப்பூர்வமாக முயல்வோம்.

இலங்கையிலேனும்,  வேறெந்த நாட்டிலேனும் உள்ள கட்சிக்காரர்களில் எவராவது ஒரு கட்சியினரின்  முகமனைப் பெறுவது எமது நோக்கமல்ல. எமது பத்திரிகை கட்சி பேதங்களுக்கு  அப்பாற்பட்டதாகும். எவராவது ஒருவருக்கு மாத்திரம் பணியாற்றுவதற்கன்றி  ஏதாவது விஷேட உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது தோன்றியதன்று. தமிழ்ப் பாஷையைப்  பேசும் மக்கள் எவரெவரோ அவரவர்களின் நலவுரிமைகளைப் பாதுகாப்பதே  இப்பத்திரிகையின் பெரும் பணியாகும். ஆகவே எல்லோருக்கும் பொதுவாக நன்மை  பயக்கத்தக்க நீதியான வழியிலேயே நடப்பது எமது நோக்கமாகும்' என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் தினகரன் தினப் பத்திரிகை ஆரம்பம்  முதல் செயற்பட்டு வருகின்றது. ஆரம்ப காலப் பகுதியில் செய்திகளுக்கு  மேலதிகமாக கட்டுரை இலக்கியத்திற்கு தினகரன் அதிக முக்கியத்துவம் அளித்தது.  ஏனெனில் இந்திய சுதந்திரப் போராட்டம், டொனமூர் ஆணைக்குழுவின் யோசனைகளுக்கு  இலங்கையர் காட்டிய எதிர்ப்பு, சர்வதேச அரசியல் நிலைமை என்பவற்றைத் தெளிவாக  வெளிப்படுத்துவதற்கு கட்டுரை வடிவம் ஏற்றதாக இருந்ததே இதற்கான காரணமாகும்.  அதேநேரம் சுதந்திரப் போராட்டச் செய்திகள், கட்டுரைகள் உட்பட இலக்கிய  படைப்புக்களையும் தினகரனில் வெளியிட டி.ஆர். விஜேவர்தன அடிக்கடி  ஊக்கமளித்து வந்தார்.

இந்த அடிப்படையில் கவிதை இலக்கியத்திற்கும் தினகரன் ஆரம்பம்  முதலே இடமளிக்கத் தவறவில்லை. அதாவது 1932 இல் மகாத்மா காந்தி உண்ணாவிரதம்  இருந்தார். அது இந்தியாவில் மாத்திரமல்லாமல் இலங்கையிலும் தாக்கத்தை  ஏற்படுத்தியது. அதன் தாக்கத்தினால் மு. நல்லதம்பி புலவர் பத்துப் பாடல்களை  எழுதினார். அப்பாடல்களை வெளியிட்டு தினகரன் அமோக வரவேற்பைப் பெற்றது.

அத்தோடு தொடர்கதை, சிறுகதை, உரைநடை இலக்கியங்களுக்கும் தினகரன்  இடமளித்தது. நாடகத்துறை வளர்ச்சிக்கும், சமய இலக்கிய மேம்பாட்டுக்கும் கூட  தினகரன் ஆரம்ப காலம் முதல் பங்களிப்பு நல்கி வந்துள்ளது. அதன் பயனாக 1940  களாகும் போது தமிழ்ப் பத்திரிகைத் துறையில் முன்னேற்றக் கொள்கையையும், தேசியத்  தன்மையையும் முன்னெடுத்துச் செல்வதில் தினகரனால் பிரதான பாத்திரம் வகிக்க  முடிந்தது.

இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது, தென்னிந்திய பேச்சுத்  தமிழ் மொழியில் தமிழகப் பின்னணியில் எழுதப்பட்ட இலக்கியப் படைப்புகள் 1949  களாகும் போது இலங்கைத் தமிழ் மொழி நடைக்கு பக்கத்திற்கு பக்கம் மாற்றம்  பெற்றன. இக்காலப்பகுதியில் இந்நாட்டு தமிழ் மொழி அறிஞர்களாக விளங்கிய   பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி.  செல்வநாயகம், இளமுருகனார், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, நவாலியூர்  சோமசுந்தரப் புலவர் உள்ளிட்ட பலரின் படைப்புகளுக்கும் தினகரன் இடம்கொடுத்தது.

மேலும் சு. வித்தியானந்தன் லண்டன் சென்று கலாநிதிப்  பட்டத்தைப் பெற்றார். அவர் தம் லண்டன் பயணம் தொடர்பாக எழுதிய பயணக்  கட்டுரையைத் தினகரன் வெளியிட்டது. அதுவே பயணக் கட்டுரை இலக்கியத்திற்கு  முன்னோடியாக விளங்கியது. அத்தோடு உரை நடை இலக்கியத்தில் பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தவென 1950 களில் தினகரன் முக்கிய பங்களிப்பை நல்கியது. இந்நாட்டில்  வாழும் தமிழ்பேசும் மக்களின் மனஉணர்வுகள், வாழ்வு முறை, பாரம்பரியம்,  அடிப்படை இயல்புகள், அவர்களது பேச்சுமொழி வழக்கு, பிரதேச உணர்வுகளின் ஊடாக  வெளியிடப்பட வேண்டும் என்ற கருத்துருவம் ஒரு செழுமையான வடிவம் பெறத்  தினகரனே முன்னோடியாக அமைந்தது.

இக்காலப் பகுதியில் தினகரனில் வெளியான கட்டுரைகள் அறிவுச்  செறிவு மிக்கவையாக இருந்ததால் தினகரன் முன்னெடுத்து வந்த தேசியத்தன்மை,  தேசிய இலக்கியப்பற்று, விடயச் செறிவு என்பனவும், புதிய அரசியல் போக்கும்  புதிய கண்ணோட்டமும் புதிய இலக்கியப் பார்வையை 1956 இல் தமிழ்ப் படைப்பாளர்கள்  மத்தியில் தோற்றுவித்தது.

இக்காலகட்டத்தில் பேராசிரியர் கைலாசபதி,  இளங்கீரன் சுபைர், கே. டானியல், என். கணேசலிங்கன், புலவர்மணி ஆ.மு.  ஷெரிப்தீன், எஸ். பொன்னுத்துரை, சொக்கன், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன்,  தாழையடி சபாரெத்தினம், நீர்வை பொன்னையன், வரதர், சிற்பி, சொக்கன், அ.ந.  கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், அம்பி, பேராசிரியர் ம.மு. உவைஸ், இ. முருகையன்,  பேராசிரியர் கா. சிவத்தம்பி, கனக செந்திநாதன், அருள் செல்வம் போன்ற  படைப்பாளர்கள் தேசிய இலக்கியம் என்ற கோட்பாட்டைத் தழுவி அடிக்கடி எழுதி  வந்தனர். இவர்களது எழுத்தில் ஏற்பட்ட கவர்ச்சி, தினகரன் அளித்த ஊக்கம்  என்பன காரணமாக புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாக வழிவகுத்தது.

தேசிய இலக்கியமாக உருவெடுத்த ஈழத்து இலக்கியம், உலக  இலக்கியங்களோடு தன்னைப் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும்' என்ற சிந்தனை  தோற்றம் பெற வழிவகுத்தது. அந்த வகையில் உலகின் சிறந்த நாவலாசிரியர்களின்  படைப்பிலக்கியங்கள் குறித்து இலங்கை எழுத்தாளர்கள் தினகரனில் ஆய்வுகளை  எழுதினர்.

மார்க்சிம் கோர்க்கி, ஜேம்ஸ் ரெய்லர், ஹெமிங்வே, ஏனெஸ்ட், எமிலி  ஜோலா, வெர்ஜினியா வுல்ப், தகழி சங்கரப்பிள்ளை போன்ற பிறமொழி எழுத்தாளர்கள்  குறித்து 1960 களிலேயே ஆய்வு செய்த ஒரே தினசரி தினகரன்தான். அந்தளவுக்கு  தினகரன் உலகலாவிய இலக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்தது.

இவ்வாறு இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களின் கலை இலக்கிய  வளர்ச்சிக்கு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பங்களித்து வந்த தினகரன்  பத்திரிகைகயும் அதன் வெளியீட்டு நிறுவனமாக விளங்கும் லேக் ஹவுஸ் நிறுவனமும்  1973 .06. 23 அன்று அரசு​டைமையாக்கப்பட்டன.

ஆனாலும் எத்தனையோ தடைகளையெல்லாம் தாண்டி தினகரன் இந்நாட்டின்  கலை இலக்கிய வளர்ச்சிக்கு தொடர்ந்தும் தனது பங்களிப்பை நல்கி வருகின்றது.  இதன் பாசறையில் ஆரம்பம் முதல் இற்றைவரை நூற்றுக்கணக்கான கலை, இலக்கிய  படைப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் உருவாகியுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும்  உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆகவே இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களின் கலை, இலக்கிய,  கலாசார, அறிவியல் மேம்பாட்டுக்காக தினகரன் அளித்துள்ள பங்களிப்புகள்  இலங்கையின் கலை, இலக்கிய, ஊடகத்துறை வரலாற்றில் அழியாத் தடம் பதித்துள்ளன.  அதனால் அவை என்றும் பிரகாசமாக ஒளிர்பவையே.

(மர்லின் மரிக்கார்)

 


Add new comment

Or log in with...