Wednesday, April 24, 2024
Home » பொருளீட்டலின் மகிமை

பொருளீட்டலின் மகிமை

by sachintha
November 10, 2023 9:03 am 0 comment

மனிதனின் வாழ்கைக்குத் தேவையான செல்வத்தை திரட்டுவதற்கு உழைப்பு அவசியம். உழைப்பு இஸ்லாத்தின் பார்வையில் உயர்ந்த அந்தஸ்தை பெறுகிறது. தான் வியர்வை சிந்தி உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழ்வதை இஸ்லாம் தாழ்வாக கருதுகிறது.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதனின் சிறப்புக்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அப்போது சில தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே அவர் எங்களுடன் நீண்ட தூரம் பயணம் செய்தால் நாம் ஓரிடத்தில் தங்கினால் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் வரை அவர் தொழுத வண்ணம் இருப்பார். நாம் பிரயாணம் செய்யும்போது நாம் தூங்கும் வரை திக்ர் செய்த வண்ணமே இருப்பார்” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர் பயணம் செய்த ஒட்டகத்தை மேயவிட்டவரும் அவருக்கு உணவு சமைத்துக் கொடுத்த வரும் யார்?” எனக் கேட்டார்கள் அதற்கு ‘நாம் எல்லோரும்’ என்று ஸஹாபாக்கள் பதில் கூறினர். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியாயின் நீங்கள் எல்லோரும் அவரை விடச் சிறந்தவர்கள்’ என்றார்கள். (நபிமொழி)

இச்சம்பவம் உழைப்பவர்கள் பிறர் உழைப்பில் தங்கி வாழ்வோரை விட மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் வணக்கவாளியாக இருப்பினும் சரியே என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் தொடர்ந்து யாசகம் கேட்டு வந்தால் மறுமையில் முகத்தில் சதையில்லாத நிலையிலேயே வருவான்’ என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஒரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் உழைத்து வலுவேறிய ஒரு தொழிலாளியின் கையை நீண்ட நேரம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதனைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் , நிச்சயமாக அல்லாஹ் தொழில் புரியும் விசுவாசியை நேசிக்கின்றான் என்று கூறினார்கள். (ஆதாரம்: தபரானி)

இஸ்லாத்தில் உழைப்பு முக்கியம் பெறப் பல காரணங்கள் உள்ளன. உழைப்பு அல்லாஹ்வின் அருளை தேடும் ஒரு முயற்சியாகும். ‘அவன் தான் உங்களுக்கு பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே பல கோணங்களிலும் சென்று அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள்’. (அல்குர்ஆன் 67:15)

மேலும் (ஜும்ஆ ) தொழுகை முடிந்ததும் பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வின் அருளை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 62:10)

உழைப்பு முஸ்லிமின் மீதுள்ள கடமையாகும். இஸ்லாமிய சட்ட விதியின் படி இஸ்லாம் முஸ்லிம்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகளுள் சில அவனது செல்வத்துடன் தொடர்புடையன. ஸகாத், ஹஜ், குடும்பப் பராமரிப்பு போன்ற கடமைகளை நிறைவேற்ற செல்வம் அவசியம். எனவே செல்வத்தை உழைப்பின் மூலம் பெற்றுக்கொள்வது கடமை.

மேலும் உழைப்பு ஒரு வணக்கமாக கருதப்படுகின்றது. ஒரு செயலை இஸ்லாமிய வழிகாட்டலில் செய்யும்போது அது வணக்கமாகின்றது அது போலவே உழைப்பும் அவ்வழிகாட்டலுக்கு அமைய மேற்கொள்ளும் போது அது வணக்கமாக இபாதத்தாக மாறுகின்றது. எவர் ஹலாலான உழைப்பில் ஈடுபட்டு, களைப்படைந்த நிலையில் ஓர் இரவை அடைகின்றாரோ அவர் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் அவ்விரவை அடைந்தவராவார் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: இப்னு மாஜா)

உழைப்பை ஒரு வணக்கமாக நோக்குவதன் காரணமாகத்தான், பொருளீட்டலில் ஈடுபடுவோருக்கு தொழுகையில் சிறிய சூராக்களை ஓதுவதற்கு இஸ்லாம் சலுகை அளித்துள்ளது.

ஆகவே (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்கு சாத்தியமான அளவு ஒதுங்கள். ஏனெனில், உங்களில் நோயாளிகள் இருக்கக் கூடும் என்பதனையும் வேறு சிலர் அல்லாஹ்வின் அருளாகிய பொருளைத் தேடி பூமியின் பல பாகங்களில் செல்ல வேண்டியிருக்கும் என்பதனையும் வேறு சிலர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய செல்ல வேண்டியிருக்கும் என்பதனையும் அவன் நன்கு அறிவான். ஆதலால் (உங்களுக்கு அவகாசத்துக்கு தக்கவாறு (கூட்டியோ குறைத்தோ) உங்களுக்கு சௌகரியமான அளவே ஓதுங்கள். (அல்குர்ஆன் 73 : 20)

மேலும் பொருளீட்டலின் போது தூய எண்ணம், அடிப்படை வணக்கங்களுக்கு தடையில்லாதிருத்தல், ஷரீஆவின் அனுமதி, ஷரீஆவின் வரையறைகளை மீறாதிருத்தல் போன்றவற்றை கடைபிடிக்கும் போது அவ் உழைப்பு நிச்சயம் வணக்கமாக அமையும்.

நபிமார்களும் தமது வாழ்வாதாரத்துக்காக தொழில்கள் செய்துள்ளனர். ஆதம் (அலை) விவசாயம் செய்துள்ளார்கள். அவரது மகனாகிய ஹாபில் பயிர்ச்செய்கையும் மற்றைய மகன் காபில் கால் நடை வளர்ப்பையும் தமக்குரிய விசேட தொழில் முயற்சியாக மேற்கொண்டுள்ளனர். மேலும் இத்ரீஸ் (அலை) அவர்கள் நெசவுத் தொழிலையும் நூஹ் (அலை) மற்றும் ஸகரிய்யா (அலை) தச்சுத் தொழிலையும் செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஆண்களைப் போலவே ஸஹாபாப் பெண்மணிகளும் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக உம்மஹாதுல் முஃமின்களில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் வலை பின்னி சீவியம் நடத்தியதைக் குறிப்பிடலாம்.

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் ஹலால் – ஹராமைப் பேணுவது கட்டாயமாகும். எனவே முஸ்லிம்களாகிய நாம் எமது தொழிற்துறைகளில் இஸ்லாமிய ஷரிஆவைப் பேணிக் கொள்வது அவசியமாகும்.

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்…

(அல் அஸ்ஹரி), வெலிகம

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT