Home » வடக்கு காசாவில் போர் உக்கிரம்: பல்லாயிரம் பலஸ்தீனர்கள் தெற்கை நோக்கி வெளியேற்றம்

வடக்கு காசாவில் போர் உக்கிரம்: பல்லாயிரம் பலஸ்தீனர்கள் தெற்கை நோக்கி வெளியேற்றம்

-தொடர்ந்தும் இடைவிடாது வான் தாக்குதல்

by sachintha
November 10, 2023 6:26 am 0 comment

காசாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றும் (09) சரமாரி குண்டுமழை பொழிந்ததோடு தரைப்படையினர் ஹமாஸ் போராளிகளுடன் வீதி வீதியாக உக்கிர சண்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் பாதுகாப்பைத் தேடி தமது வீடுகளை விட்டு தெற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் போர் வலயங்களில் போதுமான உணவு மற்றும் நீர் இன்றி மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் உள்ள இரு வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 30 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா தெரிவித்துள்ளது.

இந்த வான் தாக்குதல்களில் பல டஜன் பேர் காயமடைந்திருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காசா நகரின் அல் சப்ரா பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய கான் யூனிஸில் இருக்கும் அல் இக்லாஸ் பள்ளிவாசலுக்கும் அங்கிருக்கும் அல் முஸ்தபா பள்ளிவாசலுக்கும் இஸ்ரேல் நேற்று குண்டு வீசியது. இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் இதுவரை நான்கு பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக வாபா குறிப்பிட்டது.

இஸ்ரேல் கடந்த மூன்று நாட்களில் எட்டு மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முற்றுகை பகுதியில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் 18 மருத்துவமனைகள் செயலிழந்திருப்பதாகவும் அது கூறியது.

வடக்கு காசா பகுதியில் உள்ள பெயித் லஹியா சிறு நகரில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக ஏ.பீ. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்ததோடு வடக்கு காசாவை மையப்படுத்தியே போர் தீவிரம் அடைந்துள்ளது.

காசாவில் உயிரிழப்பு 11 ஆயிரத்தை நெருங்கி இருப்பதோடு மேற்குக் கரையிலும் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் எட்டுக் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 171 உயர்ந்துள்ளது.

ஜெனின் நகரில் நேற்று அதிகாலை இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றுவளைப்பிலேயே பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்திருப்பதோடு காயமடைந்த சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தரைவழி மோதல்

மறுபுறம் தரைவழி மோதலும் தீவிரம் அடைந்துள்ளது. ஹமாஸின் கோட்டையாக கருதப்படும் காசா நகரின் மையப் பகுதியை நோக்கி முன்னேறுவதாக இஸ்ரேல் கூறியிருப்பதோடு எதிரிகளுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் குண்டு வீச்சுக்கு மத்தியில் வீதிகளில் கடும் மோதல் இடம்பெறுவதை காட்டும் வீடியோவை ஹமாஸ் ஆயுதப் பிரிவு கடந்த புதனன்று (08) வெளியிட்டது. நிலத்தடி சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி அதிரடி தாக்குதல்களை நடத்தும் பலஸ்தீன போராளிகளின் எதிர்ப்பை இஸ்ரேலிய டாங்கிகள் சந்தித்து வருவதாக ஹமாஸ் மற்றும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு காசாவின் ஜபலியாவில் உள்ள ஹமாஸ் புறக்காவல் நிலையத்தை 10 மணி நேர சண்டைக்குப் பின் கைப்பற்றியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக இஸ்ரேலிய தலைமை இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டனியோல் ஹகரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய போர் நிலை பொறியியலாளர்கள் வெடிபொருட்களை பயன்படுத்தி பல நூறு கிலோமீற்றர் நீண்ட சுரங்கப் பாதைகளை அழித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இதுவரை 130 சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய துருப்பினர் கடந்த புதனன்று காசா நகர விளிம்புப் பகுதிக்கு செய்தியாளர்களை அழைத்துச் சென்றிருந்தனர். அந்த நகரம் பேரழிவை சந்தித்திருப்பதை கண்டதாக அங்கு சென்ற செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டங்களின் சுவர்கள் தகர்ந்து அனைத்து இடங்களிலும் துப்பாக்கி குண்டுகளின் துளைகள் தெரிவதோடு பனை மரங்களும் துண்டாடப்பட்டு காணப்படுவதாக அவர்கள் விபரித்துள்ளனர்.

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் ஒன்றை செயற்படுத்துவதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்நிலையில் 6 அமெரிக்கர்கள் உட்பட 12 பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஹமாஸ் அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸுடன் தொடர்பு கொள்ள வழி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை பேச்சாளர் ஜோன் கிர்பி, முயற்சிகளை சீர்குலைக்கும் என்பதால் விபரத்தை வெளியிட மறுத்துள்ளார்.

“அவர்களை (பணயக்கைதிகள்) அவர்களின் குடும்பங்களுடன் இணைப்பதற்கு எம்மால் முடியுமான அனைத்தையும் செய்வோம்” என்றும் அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்தை மறுக்கும் இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் ஆதரவு வழங்குவதோடு ஜப்பானில் புதன்கிழமை கூடிய ஜி7 வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்திலும் “மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பாதைகளுக்கே” அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

சுரங்கப் பாதைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய தரைப் படை தாக்குதல்களை நடத்தி வான் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் அதேநேரம் வடக்கு காசாவில் இருந்து மக்களை தெற்கை நோக்கி வெளியேறும்படி கூறி இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களையும் வீசி வருகிறது.

வடக்கு காசாவின் போர் வலயத்தில் இருந்து கடந்த புதன்கிழமை சுமார் 50,000 பேர் வெளியேறியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது இந்த வார ஆரம்பத்தை விடவும் பெரும் அதிகரிப்பாக உள்ளது. ஏற்கனவே 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவின் பாதிக்கும் அதிகமான 1.5 மில்லியன் மக்கள் அந்தக் குறுகிய நிலப்பகுதியின் தெற்குப் பக்கமாக அடைக்கலம் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வாதி காசா மாவட்டத்தின் வடக்கு போர் வலயங்களில் நிலைமை மோசமடைந்திருப்பதாக ஐ.நா மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.

“இடம்பெயர்ந்தவர்கள் உட்பட காசாவின் வடக்கில் தொடர்ந்து தங்கியுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் மோசமான மனிதாபிமான நிலையை எதிர்கொண்டிருப்பதோடு உயர்வாழ்வதற்கான குறைந்த அளவான உணவு மற்றும் நீரை பெறுவதற்கும் போராடி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையில், வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது இரண்டு வயது மகன் முஹமது அபூ கமரின் உடலை கட்டிப்பிடித்தபடி தந்தை ஒருவர் அழுதுகொண்டிருப்பாதை காணமுடிந்தது.

“அவனை பிரேத அறையில் வைக்க வேண்டாம், எனக்கு வீட்டுக்கு எடுத்துச்செல்ல தாருங்கள். நாளை அவனை நான் அடக்கம் செய்கிறேன்” என்று தந்தையான நிதால் அழுதபடி கூறியதோடு அருகில் அவரது மனைவியும் அழுதபடி காணப்பட்டார்.

காசா மீதான குண்டுவீச்சு மற்றும் அங்குள்ள மக்களை வெளியேற உத்தரவிட்டிருக்கும் இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

“பொதுமக்களை சட்டவிரோதமாக வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போன்று பலஸ்தீன பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் கூட்டுத் தண்டனையும் ஒரு போர் குற்றமாகும்” என்று காசாவுடனான ரபா எல்லையில் எகிப்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய துர்க் தெரிவித்தார்.

இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் அழிவடைந்திருக்கும் கட்டட இடிபாடுகள் மற்றும் அதற்குக் கீழ் தொடர்ந்து சிக்கி இருக்கும் சடலங்களைத் தாண்டி பலரும் தெற்கை நோக்கி பயணித்தபோதும் மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் வடக்கில் தங்கியுள்ளனர்.

காசாவின் தென் பகுதி பாதுகாப்பானது என இஸ்ரேல் வாக்குறுதி அளித்தபோதும் அந்தப் பகுதியும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. தெற்கு மற்றும் மத்திய காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 3,600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தெற்கை நோக்கி வெளியேறும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT