Tuesday, April 23, 2024
Home » தனியார் துறையினருக்கு வழங்கப்படும் முன்னுரிமை

தனியார் துறையினருக்கு வழங்கப்படும் முன்னுரிமை

by sachintha
November 10, 2023 6:00 am 0 comment

சுதந்திர இலங்கையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற வகையில் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் இது.

கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டை எவரும் பொறுப்பெடுக்க முன்வராத நிலையில், நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி, பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தார். அதன் விளைவாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்தில் நாடு முகம்கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்கி நாடு மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது.

இவ்வாறான சூழலில்தான் நிதியமைச்சர் என்ற வகையில் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் திங்களன்று சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

சுதந்திர இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் நான்கரை தசாப்தங்களுக்கும் மேற்பட்ட கால அனுபவத்தைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டில் ஏற்கனவே பல தடவை பிரதமர் பதவியை வகித்துள்ளார்.

இவ்வாறான பரந்த அனுபவப் பின்னணியில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை அவர் தயாரித்திருப்பதாகவே நிதியமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான நாட்டில் அவ்வாறான நெருக்கடி மீண்டும் ஒரு தடவை ஏற்பட்டு விடக்கூடாது என்பதே அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். அதுவே ஜனாதிபதியின் விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும். அதற்கு ஏற்பவே பொருளாதார வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார். அதாவது நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அவரது இலக்காக உள்ளது.

அந்த வகையில் நாட்டின் சகல துறைகளிலும் கவனம் செலுத்தி பரந்த கண்ணோட்டத்துடன் இவ்வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் நாட்டின் தனியார்துறை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நாட்டின் அரச துறையில் 14 இலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் துறையிலோ 80 இலட்சம் ​பேர் கடமையாற்றுகின்றனர். அதனால் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அந்தத் துறையினரின் பங்களிப்புக்களை ஒருபோதுமே குறைத்து மதிப்பிடவும் முடியாது. அத்துறையினரின் பொருளாதார மேம்பாட்டுப் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

இந்தப் பின்புலத்தில் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக தனியார் துறையினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஜனாதிபதி பெற்றுள்ளார். இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாக நோக்கப்படுகிறது.

இந்நாட்டு பொருளாதாரத்தின் உண்மையான முதுகெலும்பாக கடந்த சில தசாப்தங்களாக தனியார்துறை விளங்கி வருகின்றது. இத்துறைக்கு கடந்த காலங்களில் உரிய இடம் அளிக்கப்படவில்லை. அரச துறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க இதுவும் முக்கிய பங்காற்றியுள்ளது. இதனை நாட்டின் பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் இவ்வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு தனியார்துறை நிறுவனங்களின் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார்துறையினருடன் கருத்துப் பரிமாறல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இலங்கையைப் பொறுத்தவரையில் நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு தனியார்துறையினரின் ஒத்துழைப்பும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துறையினரின் பங்களிப்பு இன்றி நாட்டை முழுமையாகக் கடடியெழுப்ப முடியாது.

இந்த நிலையில்தான் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், சுற்றுலாத்துறை மற்றும் ஆடைத் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டங்கள் உட்பட பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரை ஊக்குவிக்கவும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆகவே 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதும் அத்துறையினரை ஊக்குவிப்பதும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். அது மிகவும் அவசியமானது என உறுதிபடக் கூறலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT