WhatsApp தடை நீக்கம்; FB பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை | தினகரன்

WhatsApp தடை நீக்கம்; FB பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

WhatsApp தடை நீக்கம்; FB பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை-WhatsApp Restriction Removed From Midnight

 

கடந்த வாரம் கண்டியில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட WhatsApp செய்தி பரிமாற்ற சமூக வலைத்தள தடை இன்று நள்ளிரவு (15) முதல் நீக்கப்படவுள்ளது.

கடந்த மார்ச் 07 ஆம் திகதி முதல், WhatsApp செய்தி பரிமாற்ற சேவை மூலம் வீடியோக்கள், புகைப்படங்களை பரிமாறுவது உள்ளிட்ட பகுதியளவிலான தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ஜனாபதி செயலாளருக்கு வழங்கிய உத்தரவுக்கு அமைய, நாட்டின் பாதுகாப்பு நிலையை ஆராய்ந்த பின்னர், உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலித்து குறித்த சமூக வலைத்தள பயன்பாட்டை மீண்டும் உரிய வகையில் வழங்கும் வகையில் நேற்று நள்ளிரவு (14) முதல் Viber பிரத்தியேக செய்தி பரிமாற்ற செயலி பாவனை தடையை நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், சமூக ஊடகங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இனவாத, மதவாத கருத்துகளை பரப்பி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பது உள்ளிட்ட, தனிப்பட்டோரின் சுயகௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பது தொடர்பான முறையொன்று அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில், ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோ தலைமையில் பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் நாளை (15) ஜனாதிபதி காரியாலயத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பேஸ்புக் சமூக வலைத்தளம் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை மிக விரைவில் நீக்குவது தொடர்பில் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அது போன்று, நாட்டில் அமைதியற்ற நிலை மீண்டும் ஏற்படாதிருக்கவும், பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்படையாதிருக்கவும், அவசியமான நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்கவும், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் குற்றவாளிகளான இனம்காணப்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், உரிய பிரிவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...