இனவாதம் பரப்புவோரை பேஸ்புக்கிலிருந்து அகற்ற முடிவு | தினகரன்

இனவாதம் பரப்புவோரை பேஸ்புக்கிலிருந்து அகற்ற முடிவு

- சமூக வலைத்தளங்களின் தடை 16 முதல் நீக்கம்

பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணாந்து அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், நாளை (15) முகநூல் நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வர இருப்பதாகவும் அவர்களுடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டார். கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையடுத்து அரசாங்கம் முகநூல் அடங்களான சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக தடைசெய்திருந்தது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தடை நீக்கம் குறித்து அறிவித்தார்.

குரோத கருத்துக்களை அடையாளம் காணவும் அவற்றை நீக்கவும் இலங்கை அரசிற்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க முகநூல் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.இனவாதம் பரப்பி நாட்டுக்குள் குழப்பம் பரப்புவதற்கு சிறிய தொகையினர் முகநூலை பயன்படுத்துகின்றனர்.

சிங்கள முஸ்லிம் இனவாத குழுக்கள் தமது தேவைகளுக்காக இவ்வாறு செயற்படுகின்றன. ஆனால் அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பையும் நல்லுறவையும் கவனத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு முடிவு காண்பது தொடர்பில் முகநூல் நிறுவனம் சாதகமான பதில் வழங்கியுள்ளது. சிங்களத்தில் எழுதப்படும் செய்திகளை வாசிக்க முடியாததால் அந்த நிறுவனம் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளது.

இருந்தாலும் இதற்கான வளங்கள் இன்மைக்கு மத்தியிலும் உரிய நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு முகநூலுக்கு இருக்கிறது.

இனவாத மதவாத கருத்துக்களை பரப்பும் நபர்களை முகநூலிலிருந்து அகற்ற அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. இது தொடர்பாக முகநூல் மேற்பார்வை செய்து வருவதோடு இவ்வாறான நபர்கள் முகநூலில் இணையாதிருக்க தேவையான செயற்பாடுகள் எடுக்கப்பட இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

குறுகிய காலத்தில் முகநூல்பாவனை இரட்டிப்பாகி 62 இலட்சத்தை எட்டியுள்ளது.கண்டி சம்பவம் தொடர்பான வீடியோகளை பயன்படுத்தி முகநூல் ஊடாக பிரசாரம் செய்ய சிலர் முயன்றதாக கூறிய அவர், அதனை கட்டுப்படுத்த முடியாத அளவு வளர்ந்ததால் தற்காலிகமாக முகநூலை தடைசெய்ய அரசுக்கு நேரிட்டதாகவும் தெரிவித்தார்.

கண்டி சம்பவத்துடன் ஏற்பட்ட பதற்ற நிலையுடன் இனவாத மதவாத கருத்துக்கள் சமூக வலைத்தளக்களினூடாக பரபப்படுவதை தடுப்பதற்காக தொலைத் தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு சமூக வலைத்தளக்களை தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்த கருத்துக்களை கவனித்து தடையை நீக்க முடிவு செய்யப்பட்டது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு, முகநூல், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது (பா)


Add new comment

Or log in with...