சிரிய படை இடைவிடாது வான் தாக்குதல்: மேலும் 42 பேர் பலி | தினகரன்

சிரிய படை இடைவிடாது வான் தாக்குதல்: மேலும் 42 பேர் பலி

 

கிழக்கு கெளத்தாவின் மத்திய நகரங்களை அரச படை நெருங்கி வரும் நிலையில் அங்கு தொடர்ந்து இடம்பெறும் வான் தாக்குதல்களில் மேலும் 42 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பிராந்தியத்தின் பெரிய நகரான தூமா மீது சிரிய போர் விமானங்கள் இடைவிடாது குண்டு போட்டு வருவதாக அங்கிருக்கும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதைரா நகரை அரச படை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கிழக்கு கெளத்தாவின் அடுத்த முனைக்கான இணைப்பை அரச படையால் ஏற்படுத்த முடியுமாகியுள்ளது.

தலைநகர் டமஸ்கஸில் இருந்து 10 கிலோமீற்றர் கிழக்காக உள்ள அண்டைய சிறு நகரான மெஸ்ரபாவை கைப்பற்றியதை அடுத்து அரச படை தூமா நகரை சுற்றிவளைத்துள்ளது.

இராணுவம் முதைராவில் முன்னேற்றம் கண்டிருக்கும் நிலையில் துமா மற்றும் ஹரஸ்தா நகரங்களை துண்டித்து கிளர்ச்சியாளர் பகுதிக்குள் ஆழ ஊடுருவ முடிந்துள்ளது.

கிழக்கு கெளத்தாவில் 400,000 சிவிலியன்கள் முற்றுகையில் சிக்கி இருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

இந்நிலையில் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களில் தலைநகர் டமஸ்கஸில் இருந்து கிழக்காக உள்ள ஜொபர் பகுதியில் எட்டுப் பேர் பலியாகி இருப்பதோடு தூமாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நூர் ஆதம் என்ற செயற்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரச படையின் வேகமான முன்னேற்றத்தால் கிழக்கு கெளத்தா பிராந்தியம் மூன்றாக பிரிக்கப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமை செய்தி வெளியானது. இந்நிலையில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி அரச படையின் உக்கிர தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கிழக்கு கெளத்தாவில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,099 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 227 சிறுவர்கள் மற்றும் 145 பெண்கள் அடங்குகின்றனர். 


Add new comment

Or log in with...