ரொஹிங்கிய கிராமங்களில் மியன்மார் இராணுவ முகாம் | தினகரன்

ரொஹிங்கிய கிராமங்களில் மியன்மார் இராணுவ முகாம்

மியன்மார் ரகின் மாநிலத்தில் முன்னர் ரொஹிங்கிய முஸ்லிம்கள் வசித்த நிலங்களை அந்நாட்டு இராணுவம் அபகரித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கம் கிராமங்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டு புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருவதாக செய்மதி படங்கள் மற்றும் கண்ணால் பார்த்த சாட்சியங்களை முன்வைத்து மேற்படி உரிமைக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த இராணுவ மயமாக்கல் ரொஹிங்கியர்களுக்கு எதிரான குற்றங்களின் ஆதராங்களை அழிப்பதாக உள்ளதென மன்னிப்புச் சபை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை குறித்து மியன்மார் அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் மியன்மார் இராணுவம் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கையை அடுத்து சுமார் 700,000 ரொஹிங்கிய முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றனர்.

“ரொஹிங்கிய முஸ்லிம்கள் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்ட அதே பாதுகாப்பு படையினர் புதிய முகாம்களை கட்டி வருகின்றனர்” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் நெருக்கடி நடவடிக்கை இயக்குனர் டிரான் ஹசன் குறிப்பிட்டார். 


Add new comment

Or log in with...