அமெரிக்காவுடன் பேச்சு தொடர்பில் வடகொரியாவிடமிருந்து பதிலில்லை | தினகரன்

அமெரிக்காவுடன் பேச்சு தொடர்பில் வடகொரியாவிடமிருந்து பதிலில்லை

 

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு இடையிலான சந்திப்பு குறித்து வட கொரியாவிடம் இருந்து தமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தென் கொரியா குறிப்பட்டுள்ளது.

இந்த நேரடி பேச்சுவார்த்தைகான அழைப்பை கடந்த வெள்ளிக்கிழமை டிரம்ப் ஏற்றுக்கொண்டது ஒரு எதிர்பாராத திருப்பமாக பார்க்கப்படுகிறது. கிம் தனது அணு அயுதங்களை விட்டுக் கொடுக்க தயாராகி இருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் அல்லது திட்டங்கள் குறித்து இன்னும் இணக்கம் எட்டப்படாத நிலையில் திட்டமிடப்பட்டிருக்கும் சந்திப்பு தொடர்பான விபரம் தெளிவில்லாமல் உள்ளது.

“வட கொரிய – அமெரிக்க மாநாடு குறித்து வட கொரிய அரசிடம் இருந்து உத்தியோகபூர்வ பதில் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை” என்று ஒருமைப்பாட்டுக்கான தென் கொரிய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விடயத்தை அவர்கள் மிக அவதானத்துடன் அணுகுவதாக நான் நினைக்கின்றேன். தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் தேவை” என்றும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

வட கொரிய தலைவரின் தூதை எடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்ற தென் கொரிய அதிகாரிகள் எதிர்வரும் பேச்சுவார்த்தை குறித்து விளக்குவதற்கு தற்போது சீனா மற்றும் ஜப்பானுக்கு தமது பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜீ ஜேவின் முக்கிய ஆலோசகர் சங் இயுய் யொங் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்கவிருப்பதோடு தென் கொரிய உளவு நிறுவன தலைவர் சுஹ் ஹூன் டோக்கியோ சென்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்திக்கவுள்ளார்.

வட கொரிய மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருந்த சூழலிலேயே இரு நாட்டு தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...