பிரசன்னவும் மனைவியும் அச்சுறுத்தியதாலேயே காசோலையில் ஒப்பமிட்டதாக வர்த்தகர் சாட்சியம் | தினகரன்

பிரசன்னவும் மனைவியும் அச்சுறுத்தியதாலேயே காசோலையில் ஒப்பமிட்டதாக வர்த்தகர் சாட்சியம்

 

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க 2015 ஆம் ஆண்டில் மேல் மாகாண முதலமைச்சராக இருந்தபோது அவரது மனைவியுடன் இணைந்து கொள்வனவு செய்த காணியொன்றுக்கான மிகுதி பணத்தைக் கோரி தன்னை தொலைபேசியில் மிரட்டியதாக ஜெஹார்ட் மெண்டிஸ் எனும் 74 வயதான வர்த்தகர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்தார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 64 மில்லியன் ரூபா பெறுமதியான காணிக்குரிய மிகுதிப் பணத்தை வழங்கக் கோரி முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் இன்னுமொரு நபர் ஆகியோர் தொலைபேசியில் வர்த்தகர் ஒருவரை மிரட்டியதாகக் கூறி சட்டமா அதிபர் இம்மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அதன் பிரதம சாட்சியாளரான ஜெஹார்ட் மெண்டிஸ் எனும் வர்த்தகர் நீதிமன்றத்தில் மேற்படி சாட்சியம் அளித்தார். பிரசன்ன ரணதுங்க தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து மீதொட்டமுல்ல காணிக்கான மிகுதி பணத்தை வழங்கக்கோரி தன்னை மிரட்டியதாக இதன்போது சாட்சியாளர் நேற்று இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி லலித் ஏக்கநாயக்கவிடம் தெரிவித்தார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் தான் 2.2 ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்ததுடன் அதிலிருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து விரட்டுவதற்கும் அக்காணியை மண் கொண்டு நிரப்புவதற்கும் முன்னாள் மேல்மாகாண முதலமைச்சரான பிரசன்ன ரணதுங்கவுிடம் உதவி கோரியதாகவும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.

அதற்கு முன்னாள் முதலமைச்சர் அவரது மனைவி மற்றும் மேலும் இருவர் இணக்கம் தெரிவித்ததுடன் ஒப்பந்தமொன்றுக்கு வந்ததாகவும் பின்னர் பிரசன்ன ரணதுங்க தன்னிடம் 64 மில்லியன் ரூபாவை கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் தான் தனது குடும்பத்தின பாதுகாப்புக் கருதி 11 காசோலைகளை தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

எவட்வாறாயினும் அவர் வழங்கிய 15 மில்லியன் ரூபாவுக்கான காசோலையில் பல காசோலைகள் தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததன் காரணமாக மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துஹித் முதலிகே மற்றும் சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷவீந்திர விக்கிரம ஆகியோர் சாட்சியாளர் சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா சட்டத்தரணி மேரி டிக்மன் ஆகியோரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிரசன்ன ரணதுங்கவும் அவரது மனைவியும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றைய வழக்குக்கு ஆஜராகியிருந்தனர்.

எனினும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூன்றாவது நபரான நரேஷ் குமார் பரீக் ஆரம்பம் முதலே இந்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை. 2015 ஏப்ரல் 06 முதல் 2015 ஜூன் 02 வரையான காலப்பகுதிக்குள் 15 குற்றச்சாட்டுக்களை காதரணமாகக் கொண்டு சட்டமா அதிபர் மேற்படி தமூவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் இந்த வழக்குத் தொடர்பில் 65 பேரையும் அவர் சாட்சியாளராக குறிப்பிட்டிருந்தார்.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...