காட்டுக்குள் சிக்கிக் கொண்ட மீதிப் பேரின் கதியென்ன? | தினகரன்

காட்டுக்குள் சிக்கிக் கொண்ட மீதிப் பேரின் கதியென்ன?

தமிழ்நாடு, தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் மலையேறிச் சென்ற 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த மாணவிகள் கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகளாவர்.

தேனி மாவட்டத்தின் போடி அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. கோடை காலம் என்பதால், போடி, பெரியகுளம், குரங்கனி உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் மாலை நேரங்களில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றிக் கொள்கிறது.

இந்நிலையில் கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் குரங்கனி மலைப்பகுதிக்கு மலை ஏறும் பயிற்சிக்குச் சென்றனர்.நேற்றுமுன்தினம் மாலை மாணவிகள் சென்ற மலைப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ பரவியது. இந்த காட்டுத்தீயில் 40 மாணவிகளும் சிக்கி இருப்பதாக குரங்கனி கிராம மக்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போடி, தேனி, உத்தமபாளையம் தீயணைப்புத் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் என 100இற்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.தேனி மாவட்ட ஆட்சியர், பொலிஸ் உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

குரங்கணி, போடியைச் சேரந்த மக்களும் மலைப்பகுதிச் சென்று

தீயணைக்கும் பணியிலும் மாணவிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் மலைக்காடுகளில் மேலும் எத்தனை பேர் அகப்பட்டுள்ளனரென்பது தெரியவரவில்லை.

தீ விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்திருக்கிறார். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர்.

சென்னையில் இருந்து மலையேறும் கழகம் மூலமாக சென்ற 20 பேரில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

முதல்கட்டமாக 22 மாணவ, மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மலையேற்றத்துக்காக 24 பேர், 12 பேர் என 2 குழுக்களாக மொத்தம் 36 பேர் சென்றனர். இந்நிலையில், திடீரென காட்டுத்தீ ஏற்பட்டதால் அவர்கள் சிக்கிக் கொண்டனர். குரங்கணி மலைப்பகுதியில் கிராமத்தினரே தீ வைப்பதாக புகார்கள் நிலவுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் சிக்கியுள்ள மற்றவர்களை மீட்கும் பணி இரவுபகலாக இடம்பெறுகிறது.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் என பல்வேறு அமைப்பினர் குழுக்களாக அடிக்கடி குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

நேற்றுமுன்தினம் காலை கோவை பகுதியில் இருந்து கல் லூரி மாணவ, மாணவியர் 40 பேர் கொண்ட குழுவினர் போடியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள குரங்கணிக்குச் சென்று அங்கிருந்து மலையேற்றப் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள கேரள மாநில எல்லையான ​ெடாப் ஸ்டேஷன் வரை நடைப்பயிற்சியாகச் செல்வது இவர்களது திட்டம். ஆனால் இவர்கள் முறைப் படி வனத்துறையினரிடம் இருந்து அனுமதி பெறவில்லை.

மலையேற்றப் பயிற்சியின் இடையில் கொழுக்குமலையில் ஓய்வுக்குப் பிறகு இவர்கள் மாலை 4 மணியளவில் மீண்டும் மலையேறத் தொடங்கினர். அப்போது வனப்பகுதியில் காட்டுத் தீ இலேசாக எரிந்து கொண்டிருந்தது. காற்றின் வேகம் காரணமாக திடீரென தீ வேகமாக பற்றி எரியத் தொடங்கியது. இதில் சில மாணவிகள் தீ பற்றுவதற்கு முன்னதாகவே எரியும் பகுதியைக் கடந்து சென்றுவிட்டனர். சிலர் தீ வேகமாக பரவுவதைக் கண்டு பின்தங்கினர். அவசரமாக கீழே இறங்க முயன்ற மாணவிகள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன. பல மாணவிகள் தீயில் சிக்காமல் ஓடினர்.

தீப்பிடித்து எரியும் பகுதியில் சிக்கிக் கொண்ட மாணவர்கள் தவிப்பதைக் கண்ட மலைப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து கீழே குரங்கணிக்கு ஆட்களை அனுப்பி தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னரே மாவட்ட நிர்வாகத்துக்கும் பொலிஸாருக்கும் வனத்துறையினருக்கும் மாணவர்கள் காட்டுத்தீயில் சிக்கிய விவரம் தெரியவந்தது.

நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகளும் மலைப் பகுதிக்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே மீட்கப்பட்டவர்களைத் தவிர காட்டுக்குள் மாணவ, மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என 40 முதல் 60 பேர் வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

108 அம்புலன்ஸ் சகிதம் ஊழியர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

இதற்கிடையே காட்டுத்தீயில் சிக்கிய மாணவர்களை மீட்க முதல்வர் கே.பழனிச்சாமி விடுத்த

வேண்டுகோளை ஏற்று விமானப் படை ஹெலி​ெகாப்டர்களை அனுப்ப விமானப் படை தென்மண்டல தளபதிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் உத்தரவின்படி கோவை மாவட்டம், சூலூரில் இருந்து விமானப்படை ஹெலி​ெகாப்டர்கள் தேனிக்கு விரைந்தன.

தேனி மாவட்டம், போடிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைவாசஸ்தலம் குரங்கணி கிராமம் ஆகும். இம்மாவட்டத்தில் குரங்கணி, கொட்டகுடி, மேல்மூட்டம், கீழ் மூட்டம், முதுவாக்குடி, சாலைப்பாறை, ​ெடாப்ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன், அண்ணாநகர் உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

குரங்கணி மலையானது மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயிற்சிக்கு மிகவும் ஏற்றது என்பதால் இயற்கையை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வருகை தருவது வழக்கம். குரங்கணி மலையின் மைய கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ​ெடாப் ஸ்டேஷன் உள்ளது. கேரளாவில் உள்ள மூணாறுக்கு இங்கிருந்து அடர்ந்த வனப் பகுதிகள், புல்வெளிகளை கடந்து நடந்தே செல்லலாம்.

அருகிலுள்ள மூணாறு மலை மற்றும் கொலுக்கு மலையில் (8 ஆயிரம் அடி) உலகின் மிக உயர்ந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. மலையில் உள்ள மைய கிராமத்தில் 50 வீடுகளும் 200 மக்களும் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத் தொழிலாளிகள். ​ெடாப் ஸ்டேஷன், மீனாறு, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. மைய கிராமத்திலும் 2 தங்கு குடில்கள் உள்ளன.

குரங்கணி மலைக் கிராமத்தில் சுற்றுலா மாளிகை, ெபாலிஸ் நிலையம், சுகாதார நிலையம் ஆகியன உள்ளன. குரங்கணி மலைப் பகுதியில் ஏற்கெனவே மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்துள்ளனர். அதன்பிறகே இந்த இடத்தின் இயற்கை எழில் வெளியுலகுக்கு தெரியவந்தது. தற்போதும் இந்த இடங்களில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. போடியில் இருந்து தரை மார்க்கமாக 15 கி.மீ. தூரம் சென்றால் குரங்கணியை அடையலாம்.

இந்த மலையேற்றத்தை ஏற்பாடு செய்தது சென்னை டிரக்கிங் கிளப் (Chennai Trekking club) ஆகும்.

இதில் 40,000 உறுப்பினர்கள் இருப்பதாக இந்த அமைப்பின் இணையதளம் சொல்கிறது.

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஈரோட்டைச் சேர்ந்த

புதுமணத் தம்பதி விவேக்_ - திவ்யா ஆகியோரும் உயிரிழந்தனர். விவேக் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். திருமணத்துக்காக அவர் விடுமுறையில் வந்தார். மூன்று மாதங்களுக்கு

முன்னர்தான் விவேக்குக்கும் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திவ்யா தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அடுத்த வாரம் விடுமுறை முடிந்து விவேக் செல்லவிருப்பதால் புதுமணத் தம்பதி குரங்கணிக்கு வந்துள்ளனர்.

வந்த இடத்தில் இருவரும் தீயில் கருகி பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொழுக்கு மலையில் காட்டுத் தீயில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. சிக்கி உள்ளவர்கள் மீட்க தரைவழியாக கமாண்டோ வீரர்களும் சென்றுள்ளனர்.

தீப்பற்றி எரிந்ததும் புகை சூழ்ந்து கொண்டதால் தாங்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும் 6 மணி நேரம் கழித்து மீட்புப் பணியாளர்கள் வந்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போது தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலக்கியா தெரிவித்தார்.

பெண்கள் தினத்திற்காக தாங்கள் 27 பேர் இந்த மலையேறுதலுக்காக குரங்கணி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குரங்கணி காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட 36 பேரும் மீட்கப்படுவார்கள் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேற்று உறுதி அளித்துள்ள போதிலும் ஆபத்து நிலைமை நீங்கவில்லை.

காட்டுத்தீயில் இருந்து தப்பித்து வந்துள்ள சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி கூறும் போது "சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த நாங்கள் மலை ஏற்றம் சென்றோம். ஒரு சிலர் மாட்டிக் கொண்டனர். எனக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் பாறைக்குள் குதித்து தப்பித்து விட்டோம். தப்பிக்கமுடியாத காரணத்தால் சிலர் மாட்டிக் கொண்டனர்" எனத் தெரிவித்தார்.

மலைப்பகுதிக்கு அம்புலன்ஸ் வண்டியை செலுத்த முடியாதால், மருத்துவக்குழுவினர் நடந்துசென்று பாதிக்கப்பட்டவர்களை கொண்டுவந்தனர். மலைக்காடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்ணடோரில் சிறுமிகள், பெண்களும் அடங்குகின்றனர்.

வனப் பகுதியில் ஏற்படும் தீயில் சிக்கியவர்களை விமானம் மூலம் மீட்பது என்பது சிரமமான காரியம். இதற்குக் காரணம் விமானம் குறிப்பிட்ட தூரத்துக்குத் தான் போக முடியும். விமானம் மூலம் மீட்பது என்பது இயலாத காரியம். அடர்ந்த காட்டுப்பகுதியில் விமானம் மூலம் செல்ல முடியாது.

குரங்கணி மலையில் மலையேற்ற பயிற்சிக்கு திட்டமிட்ட கல்லூரி மாணவிகள் ஒரே குழுவாக செல்லவில்லை. தனித்தனி பிரிவாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட தூரம் வரை சென்றுவிட்டு மீண்டும் தரையிறங்கியபோது, காட்டுத்தீ பரவியதை ஒரு குழுவினர் பார்த்துள்ளனர்.

இக்குழுவினர், பிறகுழுவினரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போயுள்ளது. செங்குத்தாக இருக்கும் மலைப்பகுதிக்கு தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது. இதுபோன்ற சூழலில் மலைக்குள் மனிதர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினம். செல்போன் சிக்னலும் சரியாக கிடைக்காததால் தகவல்கள் துண்டிக்கப்பட்டன.

காட்டுத் தீயின்போது, காட்டு விலங்குகள் பிற இடங்களுக்கு தப்பிச் செல்லும் என்பதால் காட்டுக்குள் உயிருடன் சிக்கியவர்களை தாக்க வாய்ப்பில்லை என்று தீயணைப்பு அதிகாரி கூறினார். 

 

 


Add new comment

Or log in with...