ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடும் ராகுல் | தினகரன்

ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடும் ராகுல்

 

ராஜீவ் கொலையில் மலிவு விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி' என பா.ஜ.க-வின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு 5 நாள் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிங்கப்பூர் ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது “ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்து விட்டீர்களா?" என்ற மாணவர்களின் கேள்விக்கு, “ராஜீவ் கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்குப் பல்வேறு தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி வந்திருந்த பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளைப் பற்றிய நீதிமன்ற நடைமுறைகள் தெரியாமல் ராகுல் காந்தி பேசுகிறார். ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளிகளின் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதில்லை.

இத்தனை ஆண்டு காலம் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது மௌனமாக இருந்துவிட்டும், ஆட்சியில் இருக்கும்போது சொல்ல வேண்டிய கருத்துகளைச் சொல்லாமலும், இப்போது கருத்துகளைச் சொல்வது குற்றவாளிகள் மீதுள்ள கரிசனையினால் அல்ல.

மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்கும், ஒரு எளிமையான விளம்பரத்தை தேடுவதற்காகவுமே இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தற்போது கருத்துத் தெரிவித்துள்ளார். எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்குக் குற்றவாளிகளுடைய கருணை மனு குடியரசுத் தலைவரின் மேசையில் நீண்ட நாள்கள் கிடப்பில் கிடந்தது யார் ஆட்சிக் காலத்தில் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ராகுல் காந்தி தற்போது பேசுவதை எந்தத் தமிழரும் நம்ப மாட்டார்கள். இது ஒரு ஏமாற்று வேலை” என்றார். 


Add new comment

Or log in with...