இன்று நள்ளிரவு முதல் வைபர் தடை நீக்கம் | தினகரன்


இன்று நள்ளிரவு முதல் வைபர் தடை நீக்கம்

இன்று நள்ளிரவு முதல் வைபர் தடை நீக்கம்-Viber Ban Removed from Today Midnight

 

இன்று நள்ளிரவு (14) முதல் வைபர் (Viber) பிரத்தியேக செய்தி பரிமாற்ற செயலி பாவனைக்கான தடை நீக்கப்படவுள்ளது.

வெளிநாட்டிலுள்ள உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிரமம் தொடர்பில் கருத்திற்கொண்டு அரசாங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக, இன்று (13) பிற்பகல் ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்ட இனக் கலவர சம்பவங்களை அடுத்து, கடந்த புதன்கிழமை (07) முதல் சமூக வலைத்தளங்களின் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இனவாத கருத்துகள் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் நாளை மறுதினம் (15) கொழும்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பேஸ்புக் பாவனை தடை நீக்கப்படும் என, தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெனாண்டோ இன்று (12) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்ஷன குணவர்தனவினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு,

சமீபத்தில், நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின்போது, சிலர் இனவாத கருத்துகளை பகிரவும், கலவரங்களை ஒருங்கிணைக்கவும் சட்ட விரோதமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அரசாங்கத்தினால் தற்காலிக  தடை விதிக்கப்பட்டது.

குறித்த தடையை அடுத்து, வன்முறைகள் மற்றும் சட்ட விரோத செயல்கள் வேகமாக பரவுவது கட்டுக்கோப்புக்குள் வந்ததோடு,  நாட்டின் பாதுகாப்பு நிலைமை மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் குறித்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்களது வீட்டிலுள்ளவர்களை தொடர்புகொள்வதிலான சிரமங்களை, அரசாங்கம் மிக உருக்கமாக கவனத்திற் கொண்டுள்ளது. அது போன்று, வர்த்தக சமூகம், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், சிறு பரிமாண சுயதொழிலாளர்கள் போன்றோர் கடந்த சில நாட்களாக இத்தடை காரணமாக பாதிப்படைந்துள்ளமை தொடர்பிலும் கருத்திற் கொண்டு, ஆரம்ப கட்டமாக வைபர் சமூக வலைத்தளத்தை இன்று நள்ளிரவு (14) முதல் மீண்டும் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படாதிருக்கும் வண்ணம், உரிய நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில், தற்போது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ள ஏனைய சமூக வலைத்தள நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.

உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பரிசீலித்து குறித்த சமூக வலைத்தள பயன்பாட்டை மீண்டும் உரிய வகையில் வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் சமூக வலைத்தள சேவை, சமூக வலை பயனர்களினதும் சமூகத்தினதும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில், அனைத்து இலங்கையரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டிருந்தால், அது தொடர்பில் அரசாங்கம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்ஷன குணவர்தன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...