அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) முற்பகல் யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் "தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்குச் சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, சம உரிமை இயக்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புக்கள் தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தன. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க. ஆனந்தகுமாரசுவாமி, இணைச் செயலாளர் ச. தனுஜன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா. செல்வம் கதிர்காமநாதன், சம உரிமை இயக்கத்தின் வடபிராந்தியச் செயற்பாட்டாளர் யூட் சில்வா பிள்ளை, மூத்த எழுத்தாளர் க. தணிகாசலம் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(செல்வநாயகம் ரவிசாந்)
Add new comment