கண்டி வன்முறைகளால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு | தினகரன்

கண்டி வன்முறைகளால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

 

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்படி வ ன்செயல்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பரவாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

வெல்லம்பிட்டியில் நேற்று முன்தினம் (11) சேதவத்தை வெஹரகொட புராண விகாரையில் புதிய பிக்குமார் தங்குமிடமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கொழும்பை அடுத்து சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் மாநகரமாக கண்டியே விளங்குகின்றது. நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தரும் பெருமளவிலான அரபு நாட்டினர் கண்டிக்கும் விஜயம் செய்கின்றனர். தமது ஜீவனோபாயத்திற்கு சுற்றுலாத் துறையை நம்பியிருப்போர் கண்டியில் கூடிய விரைவில் சுமுக நிலையை ஏற்படுத்துமாறு என்னிடம் வலியுறுத்தினரெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேற்படி வன்செயல்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பரவாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். கண்டியில் ஆரம்பித்த கலகம் நாட்டின் நாலா பக்கமும் பரவுமென பலரும் அஞ்சினர். எமக்கும் அதே சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆயினும், நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இதற்காக நான் பாதுகாப்புப் படைகள், பொலிஸார் மற்றும் மகா சங்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூர வன்செயல்கள் மூலம் முழு நாட்டிற்குமே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத யுத்தமொன்றின் விளைவாக, நாம் கடந்த 30 வருடகாலமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டோம். அதன் விளைவாக, நாட்டின் சமாதானம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. அந்த சமாதானத்தை மீண்டும் ஏற்படுத்தவே நாம் இன்று பாடுபட்டு வருகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

 


Add new comment

Or log in with...