பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் உயர் மட்ட மாநாடு | தினகரன்

பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் உயர் மட்ட மாநாடு

பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வு

கண்டி திகன சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை தணிந்துள்ள நிலையில் நாட்டில் அமைதி யான சூழலை தொடர்ந்து பேணுவது தொடர்பில் புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று பொலிஸ் உயரதிகாரிகளை அழைத்து ஆராய்ந்துள்ளார்.

கைதானவர்களை விடுவிக்க சில எதிரணி அரசியல்வாதிகள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக இங்கு உயர் பொலிஸ் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதேச அரசியல் வாதிகள் சிலருக்கு இந்த சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கண்டி இனவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பொது நிர்வாக அமைச்சில் நடைபெற்றது. இதில் பொலிஸ் மாஅதிபர்,பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்,சி.ஜ.டி பணிப்பாளர், நிதி மோசடி பிரிவு பணிப்பாளர், விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி அடங்கலான உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கண்டி சம்பவத்தின் பின்னரான தற்போதைய நிலைமை குறித்தும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நிலைமை முழுமைான சீரடைந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சமூக வலைத் தளங்களின் முடக்கப்பட்டிருப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பேஸ்புக், வைபர்,வட்சப் போன்றவற்றை எதிர்காலத்தில் கண்காணிப்பது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதனை பொலிஸினூடாக முன்னெடுப்பது பற்றியும் அதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

சீனா போன்ற நாடுகளில் பேஸ்புக் முற்றாக தடைசெய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் மாணவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இனவாதம் பரப்பியிருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இவர்களை தூண்டிவிட்ட நபர்களை கண்டுபிடிக்குமாறும் அவர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சமூக வலையத்தள தடையை துரிதமாக நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

எதிரணி அரசியல் வாதிகள் இந்த பிரச்சினையின் பின்னணில் செயற்பட்டிருப்பது குறித்தும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க அமைச்சர்கள் மீது பழியை சுமத்த முயல்வதாக குறிப்பிட்டுள்ள அவர், முழுமையான விசாரணையின் பின்னர் சகல உண்மைகளையும் அம்பலப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவது பற்றியும் இதன் போது விபரமாக ஆராயப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் ஏற்படும் தாமதத்தையும் குறைபாடுகளையும் நீக்கி துரிதமாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறைபாடுகளை தவிர்ப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சு பேச்சாளர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்காக சுற்றிவளைப்புகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறும் அமைச்சர் பொலிஸாருக்கு பணித்துள்ளார். (பா)

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...