சிறையில் வர்ண ஆடையுடன் சசிகலா | தினகரன்

சிறையில் வர்ண ஆடையுடன் சசிகலா

 

தேசிய மகளிர் ஆணைய தலைவி, ரேகா சர்மா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் திடீரென ஆய்வு செய்த போது அங்கு தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, கைதிகளுக்கான சீருடை அணியாமல் வர்ண ஆடைகள் அணிந்திருப்பதை பார்த்து அதிருப்தி தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மத்திய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, நேற்று முன்தினம் மாலை திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது சிறையில் உள்ள சசிகலாவும் இளவரசியும் கைதிகளுக்கான சீருடை அணியாமல் கலர் உடை அணிந்திருப்பதை பார்த்தார். சிறையில் மற்ற கைதிகள் சீருடைய அணிந்திருந்தனர்.

இதனால் அதிருப்திஅடைந்த ரேகா சர்மா, 'இவர்களுக்கு மட்டும் கலர் உடை அணிய, எப்படி அனுமதி அளிக்கப்பட்டது' என சிறை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிறை ஊழியர், 'கைதிகளின் தண்டனை அளவின் அடிப்படையில் வர்ண ஆடை அணிய வாய்ப்புள்ளது. விதிமுறையின்படியே உடைகள் அணிந்துள்ளனர்' என, விவரித்தார்.

அவரது பதிலில் திருப்தியடையாத, ரேகா சர்மா, இது தொடர்பாக எழுத்து மூலமாக விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டார். அதன்பின் சசிகலாவிடம் 'இந்த ஆடைகள் எங்கிருந்து வந்தன' என கேட்டபோது பதிலளிக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

இதையடுத்து அவரது அறைக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை ஆய்வு செய்தார். பை ஒன்றில் வெவ்வேறு ஆடைகள் இருப்பதை கவனித்தார்.

சசிகலாவுடன் ஐந்து நிமிடம் பேசினார். சிறையின் வசதிகள், சூழ்நிலையை கேட்டார். 'சிறையில் அனைத்தும் நன்றாக உள்ளது. இங்கு கம்ப்யூட்டர், கன்னடம் கற்று வருகிறேன்' என சசிகலா ஆங்கிலத்தில் பதிலளித்தார்.

இது குறித்து கர்நாடக முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், ''சிறையில் சசிகலாவுக்கு எந்தவிதமான சலுகையும் ஆடம்பர வசதியும் அளிக்கப்படவில்லை. அதுபோன்ற செயல்களை நாங்கள் செய்யமாட்டோம்,'' என்றார்.


Add new comment

Or log in with...