கண்டி வன்முறைகளுக்கு யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்! | தினகரன்

கண்டி வன்முறைகளுக்கு யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!

 

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொண்ட எம்மை மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன. இத் திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 13  ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  முற்பகல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரைச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி,  இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோர் இவ்வழைப்பை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் எம்மீது திணிக்கப்பட்ட தமிழ் - சிங்கள இனமுரண்பாட்டுத் தீயினை, திட்டமிட்ட இனக் கலவரங்களினூடாக கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாக்கி, பின்னர் கொடிய யுத்தம் ஒன்றிற்குள் எமது தேசத்தைக் கொண்டுபோய்த் தள்ளி, பெரும் அழிவுகள் ஏற்படக் காரணமான சக்திகள், மீண்டும் அதே வகையில், அக் கொடிய யுத்தத்தினால் பாதிப்பை எதிர்கொண்ட இலங்கையின் இன்னொரு தேசிய இனமான முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடுவதன் மூலம், முஸ்லிம் - சிங்கள இனமுரண்பாட்டு யுத்தமொன்றை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல், பொருளாதார நலன்களுக்காக எம் வாழ்வை அழிக்க முனைகின்றன.

எனவே, இந்த உண்மையை உணர்ந்து,  எமதும், எமது எதிர்கால சந்ததியினதும் இருப்பைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, எம் மத்தியில் இன, மத, மொழி அடிப்படையிலான பேதங்களைப் பெரிதாக்கி, எமது வாழ்வை அழிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக, நாம் அனைவரும் ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறு அவமைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

 


Add new comment

Or log in with...