சிரியாவை சீரழிக்கும் வாடகைப் போர்! | தினகரன்

சிரியாவை சீரழிக்கும் வாடகைப் போர்!

சிரியா போரைப் பொறுத்தவரை நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் இதுதான்...இதில் பங்கேற்றிருக்கும் எல்லாத் தரப்புகளும் ஒற்றை இரும்பு விதியால் வழிநடத்தப்படுகின்றன.

அது இதுதான்.“இந்தப் போர் நமது சொந்தப் போர் அல்ல”.

அதாவது இந்தப் போர் ஒரு வாடகைப் போர். ஒவ்வொரு தரப்பும் தங்கள் ஆதாயங்களை விரிவுபடுத்த விரும்புகின்றன. அதேசமயம், தங்கள் சொந்த வீரர்களைக் காட்டிலும் கூலிப்படைகளையும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களையும் பயன்படுத்தித் தங்கள் எதிரிகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த விரும்புகின்றன.

ஆப்கானிஸ்தான் அனுபவத்திலிருந்து ரஷ்யாவும், ஈரான் – ஈராக் போர் அனுபவத்திலிருந்து ஈரானும், தெற்கு லெபனான் தந்த அனுபவத்திலிருந்து இஸ்ரேலும், ஈராக், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும் ஏற்கெனவே ஒரு பாடம் கற்றிருக்கின்றன. - மத்திய கிழக்கின் எந்த ஒரு நிலத்திலும் தங்கள் வீரர்கள் மரணமடைவதை இந்நாடுகளின் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

ரஷ்யா மீண்டும் ஒரு வல்லரசாகி விட்டது என்றும், சிரியா வில்தான் ஒரு ‘கிங்மேக்கர்’ என்றும் ரஷ்யர்களிடம் சொல்லிக் கொள்ள விளாடிமிர் புட்டின் விரும்புகிறார். ஆனால், ரஷ்ய வீரர்கள் யாரையும் அவர் ஆபத்துக்குள்ளாக்கவில்லை.

மாறாக, ஈரானிடமிருந்து தரைப்படையினரைத் தருவித்துப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒப்பந்த அடிப்படையில் வீரர்களைத் திரட்டிப் பயன்படுத்துகிறார். ரஷ்யாவுக்காகப் போரிட்டு மடிய, அந்நாட்டிலுள்ள ‘வாக்னர்’ எனும் தனியார் நிறுவனத்திலிருந்து கஸாக் வீரர்களைத் தரைப் படைச் சண்டைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். சமீபத்தில் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட கஸாக் வீரர்கள் அந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான்.

ஈரான் அரசு சமீபத்தில்தான் மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. அரசு தனது சொந்த மக்களின் நலனுக்குத்தான் பணம் செலவிட வேண்டுமே தவிர, சிரியாவில் அல்ல என்று ஈரான் மக்கள் போராடினர். இந்நிலையில், ஈரானுக்கு ரஷ்யா உள்குத்தகைக்கு விட்ட தரைப்படைப் போரை, தனது நிழல் யுத்தப் பிரதிநிதிகளான - (ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட) ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஷியா கூலிப் படையினரிடம் ஈரான் உள்குத்தகைக்கு விட்டிருக்கிறது.

வடக்கு சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான போரில், குர்து வீரர்களுக்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் அமெரிக்க சிறப்புப் படைகள் வழங்கி வருகின்றன.

அதே குர்து வீரர்களுக்கு எதிராக, சன்னி கிளர்ச்சிப் படைகளைத் துருக்கி பயன்படுத்திக் கொள்கிறது. ஈரான் ஆதரவுப் படைகளுக்கும் ஷியா ஆதரவுப் படைகளுக்கும் எதிராகப் பல்வேறு சன்னி கிளர்ச்சிப் படைகளை சவூதி அரேபியா, கட்டார், ஜோர்தான் ஆகியவை பயன்படுத்திக் கொள்கின்றன. இஸ்ரேல் தனது விமானப் படையை முழுமையாகப் பயன்படுத்துகிறது.

பொறுப்பிலிருந்து நழுவும் நாடுகள்:

2003-ல் ஈராக்கில் சதாம் ஹுசேன் அரசை அமெரிக்கா கவிழ்த்தது. ஒரு எச்சரிக்கையும் ஈராக் மீதான படையெடுப்புக்கு, பானைக் கடை விதிதான் பொருத்தமானது. பானையை ஒருவர் உடைத்து விட்டால், அது அவருக்குச் சொந்தமானது என்றாகி விடும் (அதை அவர் வாங்கித்தான் ஆக வேண்டும்).

ஆக, இன்றைக்கு சிரியாவைப் பொறுத்தவரை மாறாத விதி இதுதான்: “நீங்கள்தானே பொறுப்பு? அப்படியெனில் நீங்கள்தான் சரிசெய்ய வேண்டும்.” ஆனால், சிரியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள யாருமே விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதெல்லாம் தங்களது ஆதிக்கத்தை வாடகைக்கு விடுவதைத்தான்!

வலி தரும் விஷயம் இது. அடிப்படையில் சிரியாவில் சமரசத்தையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் அளவுக்கு போதிய அதிகாரமோ வளங்களோ உள்நாட்டைச் சேர்ந்தவர்களிடம் இல்லை. வெளியிலிருந்து போரிடுபவர்களோ சிரியாவில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த தங்கள் அதிகாரத்தையும் வளங்களையும் பயன்படுத்தத் தயாராக இல்லை.

இதில் குறைந்தபட்ச நல்ல செய்தி என்னவென்றால், இதில் ஈடுபட்டிருக்கும் எல்லோருமே இழப்புகளைத் தவிர்ப்பதில் மிகவும் கவனமாக இருப்பதுதான். எந்தத் தரப்புமே மிக மோசமாக, பொறுப்பற்றதன்மையுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை. ஈரானியர்களும் ஹிஸ்புல்லா படையினரும் தொடர்ந்து இஸ்ரேலைச் சீண்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இஸ்ரேல் தனது முழு பலத்தையும் காட்டித் திருப்பித் தாக்கும் அளவுக்கு அவர்கள் சென்று விட மாட்டார்கள்.

இஸ்ரேல் முழுப் பலத்துடன் தாக்கினால் லெபனானைச் சுற்றியுள்ள ஹிஸ்புல்லா படையினர் சின்னாபின்னமாகி விடுவார்கள். ஈரான் மீது ​ெராக்கெட் தாக்குதலும் நடக்கும். ஆனால், பதிலடியாக ஈரான் தொடுக்கும் ​ெராக்கெட் தாக்குதல்களால் அதிநவீன நகரங்கள் கொண்ட தனது கடற்கரைப் பகுதிகள் சின்னாபின்னமாகும் என்பது இஸ்ரேலுக்கும் தெரியும்.

துருக்கியர்கள் அமெரிக்காவுடன் ஒரு போரை விரும்பவில்லை. அமெரிக்காவுக்கு ரஷ்யாவுடன் போர் புரிய விருப்பமில்லை. ரஷ்யர்களோ யாருடனும் வம்பு வைத்துக் கொள்ளாமல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணெயை உறிஞ்சி எடுத்துக் கொள்வதற்கும், ‘ஈகோ’வை வளர்த்தெடுக்கும் இடமாகவும் சிரியாவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் – ஏனெனில், வெளிப்பார்வைக்குத் தெரிவதைப் போல் அல்லாமல் ரஷ்யா மிகவும் பலவீனமாக இருக்கிறது.

ஒருவேளை, 1989-இல் லெபனான் தனது உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அதிகாரப் பகிர்வு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டது போல் இவர்கள் அனைவரும் ஒருகட்டத்தில் களைப்படைந்து ஓர் ஒப்பந்தத்தை எட்டலாம். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு லெபனானுக்கு 14 ஆண்டு காலம் பிடித்தது.

வெ.சந்திரமோகன்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...