Thursday, April 25, 2024
Home » ஷகீபின் முடிவுக்கு பங்களாதேஷ் பந்துவீச்சு பயிற்சியாளர் அதிருப்தி

ஷகீபின் முடிவுக்கு பங்களாதேஷ் பந்துவீச்சு பயிற்சியாளர் அதிருப்தி

- மைதானம் சென்று தடுக்க நினைத்ததாக தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
November 9, 2023 9:03 am 0 comment

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் அஞ்சலோ மெத்திவ்ஸ் ‘டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்து செல்வதை பார்ப்பதற்கு கடினமாக இருந்ததாக பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் மைதானத்திற்குச் சென்று தனது முடிவை மாற்றிக் கொள்ளும்படி ஷகீபிடம் கூற நினைத்ததாகவும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த திங்கட்கிழமை (6) நடந்த இந்தப் போட்டியில் துடுப்பெடுத்தாட வந்த மத்தியூஸின் தலைக்கவசம் உடைந்த நிலையில் மாற்று கவசம் ஒன்றை கோரிய நிலையிலேயே ஷகீப் அல் ஹசன் கால தாமதத்திற்காக டைம் அவுட் முறையில் நடுவரிடம் ஆட்டமிழப்பு கோரியிருந்தார்.

தனது ஆட்டமிழப்புக் கோரலை மீட்டுக்கொள்வது பற்றி நடுவர் கோரியபோதும் ஷகீப் அந்த முடிவில் இருந்து விலகவில்லை.

இது தொடர்பில் கிரிக்பிளொக் இணையதளத்திற்கு பேட்டி அளித்த அலன் டொனால்ட் கூறியதாவது,

“அந்த சமயத்தில் பரவாயில்லை நண்பா, விரைவாக தலைக்கவசத்தை சரி செய்து கொண்டு விளையாடுங்கள் என்று சொல்வதே சரியானதாக இருந்திருக்கும்.

அந்த நிகழ்வு நடந்தபோது களத்திற்குள் சென்று, போதும் நிறுத்துங்கள் என்று அணியின் தலைவர் ஷகீப்பிடம் சொல்ல நினைத்தேன்.

இறுதியில் போட்டி முடிந்து ஹோட்டல் அறைக்குள் சென்று நான் என்ன நடந்தது என்று வியப்பில் அமர்ந்தேன். குறிப்பாக இலங்கை அணியினர் எங்களுக்கு கை கொடுக்காமல் சென்றனர். அந்த சமயத்தில் கோபத்திலிருந்த நான் முதல் ஆளாக சென்று அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். இவ்வாறு நான் நினைப்பதற்காக என்னை பழைய காலத்து ஆள் என்று இப்போதைய வீரர்கள் நினைக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை என்னுடைய எண்ணமாகும்” என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. போட்டிக்குப் பின்னர் இலங்கை அணி வீரர்கள் நடுவர்களுக்கு கை கொடுத்துவிட்டு பங்களாதேஷ் வீரர்களுக்கு கைகொடுக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT