இனவாதத் தாக்குதல்களால் பீதி நீங்காத நிலையில் முஸ்லிம்கள் | தினகரன்

இனவாதத் தாக்குதல்களால் பீதி நீங்காத நிலையில் முஸ்லிம்கள்

 

கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையிலும், வன்முறைக் கும்பல்களின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எம்.பிக்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் நேரில் சென்று களநி​ைலவரங்களை அறிந்து கொண்டதோடு, மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட ஊர்களுக்கு அமைச்சர் ரிஷாட் உடனுக்குடன் நேரில் சென்று, நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், பாதுகாப்புப் படையினரையும் உஷார்படுத்திக் கொண்டிருந்தார்.

கண்டி, கொஹாகோடை பிரதேசத்தில் நேற்றுமுன்தினமிரவுஇரண்டு வீடுகள் சேதமாக்கப்பட்டிருந்தன. ஹாரிஸ்பத்துவ, அங்குறதென்ன பிரதேசத்தில் வன்முறையாளர்களின் தாக்குதலினால் சுமார் 10 வீடுகளும், பள்ளிவாசல் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக கேள்வியுற்ற அமைச்சர் அங்கு சென்ற போது, அந்த ஊர் பொதுமக்கள் சுமார் 100 பேர் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர்.

உக்குரஸ்பிட்டிய மற்றும் அக்குரணை 04 ஆம் கட்டை ஆகிய பகுதிகளிலும் சேதமாக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை அமைச்சர் பார்வையிட்ட போது, அங்கு வாழ்ந்த மக்களையும் சந்தித்து நி​ைலவரங்களையும் கேட்டறிந்தார்.

அம்பதென்ன, பூஜாபிட்டிய வீதியில் அமைந்துள்ள வெளேகட பகுதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான மரஆலைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட போது, அமைச்சர் குழாம் அங்கு விரைந்தது.

மரஆலை ஒன்று தீச்சுவாலையுடன் அப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. பிரதான வீதியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும், பெரும்பான்மையினர் வசிக்கும் அந்தக் கிராமத்தின் பின்புறமாக வந்து, முஸ்லிம்களுக்குச் சொந்தமான மர ஆலைகளை குறிவைத்து வன்முறையாளர்கள் தீயை வைத்திருந்தனர்.

அமைச்சர் முயற்சி மேற்கொண்டு சுமார் 08 கீ.மீ தூரத்தில் இருந்து தீயணைப்புப் படையினரை வரவழைத்து, சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். பூஜாபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் அங்கு விரைந்திருந்தார். சம்பவத்தைக் கேள்வியுற்று அமைச்சர் ஹலீமும் வருகை தந்திருந்தார்.

கண்டி மாவட்டத்தில் இரவு நேரங்களில் முஸ்லிம் கிராமங்களில் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சமே நிலவி வருகின்றது.

பெரிதும் பாதிக்கப்பட்ட திகன, பலகொல்ல, கட்டுகஸ்தோட்டை 04ஆம் கட்டை, ஹாரிஸ்பத்துவ,அங்குறதென்ன, அம்பதென்ன, வத்தேகம, உக்குரஸ்பிட்டிய, கட்டுகஸ்தோட்டை போன்ற பிரதேச வாழ் முஸ்லிம் மக்கள், இன்னும் தமக்கு நேர்ந்த பாதிப்புக்களின் அச்சத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை.

அதேபோன்று, அக்குரணை, மடவளை, உடத்தலவின்ன, இனிகல ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் சென்ற போது, அந்த மக்கள் வித்தியாசமான கருத்துக்களை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

“கும்பல்கள் எந்த நேரமும் எமது கிராமங்களை தாக்க வருவார்கள். எனினும், நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எமது சொத்துக்களையோ, எம்மையோ பாதுகாக்கப் போவதுமில்லை. எமது கிராமத்தின் எல்லைப் புறங்களில் மட்டும் பாதுகாப்பு தருவோர் நின்று கொள்ளட்டும். வன்முறையாளர்கள் அதையும் மீறி ஊடுருவினால் நாங்கள் எங்களை எப்படியாவது தற்காத்துக் கொள்வோம்”

அதேநேரம் நாப்பன்ன போன்ற சிங்கள கிராமங்களுக்கு அருகில் வாழும் மக்கள், தமக்கு படையினரின் பாதுகாப்பு தேவை எனவும், முக்கிய இடங்களில் படையினரை வரவழைத்துத் தருமாறும் அமைச்சரிடம் வேண்டினர்.

வேறு சில கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களோ, தாம் சிங்கள மக்களுடன் மிகவும் அந்நியோன்யமாக வாழ்வதால் தங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும், எங்களுடன் சேர்ந்து தாங்களும், இனவாதிகளை விரட்டி அடிப்போம் என்ற நம்பிக்கையை எமக்குத் தந்துள்ளனர் என்றும் கூறினர்.

மொத்தத்தில் கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் இரவு பகல் என்று பாராது தமது உயிர்களை கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதையே காண முடிந்தது.

கண்டி மாவட்டத்திலும், குருநாகல், குளியாப்பிட்டிய, வெலிகம, கெக்கிராவ, பூகொட ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களின் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் நடத்தப்பட்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களால், மக்கள் பெரிதும் கவலை கொண்டிருக்கின்றனர்.

சர்வதேசத்தின் கவனத்தையும் இந்த சம்பவங்கள் ஈர்த்துள்ள நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கான தமது ஆதரவை வாபஸ் வாங்க வேண்டுமெனவும், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்என்று ஒருசாரார் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.-

சுஐப் எம். காசிம்-


Add new comment

Or log in with...