உலக மகளிர் தினம் உருவான வரலாறு | தினகரன்

உலக மகளிர் தினம் உருவான வரலாறு

சர்வதேச அளவில் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதை இன்றைய தினத்தில் தெரிந்து கொள்வது முக்கியம். இது தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் இங்கு தரப்படுகின்றன.

* 1908-இல் நியூ​ேயார்க்கில் பணிச் சூழலுக்கு எதிராக பெண் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்திய நாளை முன்னிறுத்தி அமெரிக்க சோஷியலிசக் கட்சி, முதன் முதலில் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.

* ஆனால் முதல் தேசிய பெண்கள் தினம் அமெரிக்காவில் பெப்ரவரி 28, 1909-இல் கொண்டாடப்பட்டது.

* 1910இ-ல் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று வலியுறுத்தியும் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டனர். பின்லாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதல் 3 பெண்களும் இதில் அடக்கம். இதில் சர்வதேச அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. எனினும், திகதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

* இதன் விளைவாக உலக மகளிர் தினம் 1911, மார்ச் 19 அன்று முதன்முதலாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டது. பேரணியாக நடத்தப்பட்ட விழாவில் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர். அதில் வாக்குரிமையோடு, பணிபுரிவதற்கான உரிமையும், வேலையில் பாகுபாடு காட்டக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

* 1914-இல் முதல் உலகப் போர் மூண்டது. அமைதி நடவடிக்கையாக ரஷ்யப் பெண்கள், தங்களின் முதல் பெண்கள் தினத்தை பெப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். போருக்கு எதிராகவோ, ரஷ்யப் பெண்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவோ அதே வருடத்தில் மார்ச் 8 இல் ஐரோப்பியப் பெண்கள் பேரணிகளை நடத்தினர்.

* 1917-இல் மற்றுமொரு புரட்சி தோன்றியது. முந்தைய ஆண்டுகளில் ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடந்த போரால் ஏராளமான ரஷ்ய வீரர்கள் செத்து மடிந்தனர். அனைவரும் வாழ வழியின்றிப் பட்டினியால் அவதிப்பட்டனர். பொறுக்கமுடியாமல் ரஷ்யப்பெண்கள் பொங்கி எழுந்தனர். பெப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்யப் புரட்சி வெடித்தது. முடியாட்சி முடிவுக்கு வந்தது.

* 1975இ-ல் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதாகக் கூறப்படும் மார்ச் 8- ஐ சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.


Add new comment

Or log in with...