குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் | தினகரன்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்

Ampara Mosque Attack-Hizbullah-Condemn-அம்பாறை-பள்ளிவாசல் தாக்குதல்-கண்டனம்-ஹிஸ்புல்லாஹ்

 

பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்

அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று (28) செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

'சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமை, பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நல்லாட்சி அரசிலும் இவ்வாறான முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து செல்வதானது முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம் தலைமைகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுசேர்ந்து அரசுக்கு கடுமையைன அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

அம்பாறையில் நடந்துள்ள சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமாகும். வெளியூர்களில் இருந்து வந்த கும்பலொன்றினாலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது பொலிஸார் மந்த கதியில் செயற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி நீதியான விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிரான விரைவாக சட்ட நடவடிக்கை எடுத்து அங்கு முஸ்லிம்கள் வாழ்வதற்கான, வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழலை உறுதி செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இன்று காலை நான் அவருக்கு அனுப்பி வைத்த அவசர கடிதத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளோம் என்றார்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு இன்று (27) காலை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் சென்று பொலிஸ் உயரதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர். அங்குள்ள முஸ்லிம்களுக்கும், அவர்களின் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாயலுக்கும் உரிய பாதுகாப்பை மேற்கொள்ளுமாறும், மேலும் இவ்வாறான துயரச் சம்பவம் இடம்பெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்மாறும் பொலிஸ் உயரதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், அம்பாறை சுழற்சி  நிருபா் - ரி.கே. ரஹ்மதுல்லாஹ்)
 


Add new comment

Or log in with...