தியத்தலாவ சம்பவம்; விசாரணைக்கு ஐவரடங்கிய குழு | தினகரன்


தியத்தலாவ சம்பவம்; விசாரணைக்கு ஐவரடங்கிய குழு

Diyatalawa Bus Attack-5 Persons Committee Appointed

 

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில், தனியார் பஸ் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, இராணுவத் தளபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (21) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 12 இராணுவத்தினர் உள்ளிட்ட 19 பேர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்வபம் தொடர்பில், காயமடைந்த நபர் ஒருவர், தியத்தலாவ வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக, ஒரு சில சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் அதிர்ச்சிக்குள்ளான, தியத்தலாவ, எல்லேகம பிரதேசசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்றதன் பின்னர், வைத்தியசாலையிலிருந்து சென்றதாகவும், அவரிடம் ஏற்கனவே பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த 17 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு, பாரிய காயங்களுக்குள்ளாகி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் 02 இராணுவ வீரர்களிடம் இன்று (23) வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரில் ஒருவரே, கைக்குண்டை கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் சென்ற இராணுவ வீரர் வைத்திருந்த குறித்த கைக்குண்டு வெடித்ததன் காரணமாக இவ்வனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அரச பகுப்பாய்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(படங்கள்: ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...