Friday, March 29, 2024
Home » மத்ரஸாக்களில் அரபு மொழியோடு ஒழுக்கமும் போதிக்கப்பட வேண்டும்

மத்ரஸாக்களில் அரபு மொழியோடு ஒழுக்கமும் போதிக்கப்பட வேண்டும்

by mahesh
November 8, 2023 11:00 am 0 comment

எமது மத்ரஸாக்களில் அரபு மொழி போதிக்கப்படுகின்ற அதேநேரம், நல்லொழுக்கம் போதிக்கப்படுவதாக தெரியவில்லை. பெரும்பாலான மத்ரஸா மாணவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போதே இவ்வாறு கேட்கத் தோன்றுகிறது என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

பேருவளை சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத்தின் 42 ஆவது வருட மீலாது விழாவும் பரிசளிப்பு விழாவும் (4) அல்-ஹுமைஸராவின் எஸ்.எம்.ஜாபீர் ஹாஜியார் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்கத் தலைவர் ஏ.எச்.ஏ.முக்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா;

ஜும்ஆ பிரசாரங்களை நிகழ்த்தும் எமது பெரும்பாலான மௌலவிமார்கள் கூட குத்பா பிரசங்க மிம்பர்களையும் அரசியல் மேடைப் பேச்சுக்களைப் போன்று ஆவேசமாக நிகழ்த்துவதைக் காண்கிறோம். சன்மார்க்க பிரசங்கங்களுக்கு இது அழகல்ல.

மத்ரஸாக்களில் கற்று வெளிவந்தவர்கள் இஸ்லாம் கூறும் நல்லொழுக்க நற்பண்புகளுக்கு இலக்கணமாக திகழ வேண்டும. இதற்கு வழிவகுக்கும் வகையில் கல்வி போதனைகள் அமைய வேண்டும்.

பாலஸ்தீனத்தில் தினந்தோறும் பல நூற்றுக்கணக்கான எமது சகோதரர்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் எடுக்கிற நேரம் அல்ல. ஆனால் எமது உயிரிலும் மேலான உத்தம நபியின் பிறந்த தின விழா மேடை என்பதாலேயே இங்கு வருகை தந்தேன். பலஸ்தீனத்தில் நடந்தேறும் பரிதாப நிலை கண்டு பிற சமூகத்தவர்களே இஸ்ரேலை கண்டிக்கவும் பலஸ்தீன போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் முன் வருகிறார்கள். இது மனிதாபிமான நல்லெண்ணத்தையே காட்டுகிறது என்றார். சீனன்கோட்டையைச் சூழ இயங்கும் குர்ஆன் மத்ரஸாக்களைச் சேர்ந்த வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு தங்க நகை உள்ளிட்ட பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது அதிதிகளால் கையளிக்கப்பட்டன.

வாலிபர் ஹழரா ஜெமாஅத் செயலாளர் டாக்டர் முர்ஷித் ரிஸாம் நிகழ்வின் இறுதியில் நன்றியுரை வழங்கினார்.

சீனன்கோட்டை மீலாத் நிகழ்வில் அலிஸாஹிர் மௌலானா எம்.பி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT