கிரிக்கெட் அரங்கில் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக வருவதே இலக்கு −குசல் மெண்டிஸ் | தினகரன்

கிரிக்கெட் அரங்கில் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக வருவதே இலக்கு −குசல் மெண்டிஸ்

கிரிக்கெட் அரங்கில் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக வருவதே தனது இலக்கு என்று இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரரும் அண்மைக் காலமாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பிரகாசிப்பவருமான குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி-20 தொடரின் நாயகன் விருதை வென்ற பிறகு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் குசல் மெண்டிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது தான் அணியில் இணைக்கப்படாதது வேதனையாக இருந்தாலும், அதன்பின்னர் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர ஆகியோர் தன்னை மேம்படுத்தியதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து சாதனைகளை நிலைநாட்ட காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வரிசையில் நிலையான மூன்றாம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாடி வந்த குசல் மெண்டிஸ், திடீரென ஆரம்ப வீரராக களமிறங்கி அண்மையில் நிறைவுக்கு வந்த பங்காதேஷுடனான ரி-20 கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் அரைச் சதங்கள் குவித்து இலங்கைக்கு முழுமையான தொடர் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முக்கிய காரணமாகவும் இருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராட்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பிரகாசிக்கத் தவறியதால் இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட குசல் மெண்டிஸ், சந்திக்க ஹத்துருசிங்க பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இலங்கை அணிக்குள் இடம்பெற்றுதுடன், ஆரம்ப வீரராகவும் புதிய அவதாரம் எடுத்தார்.

எனினும், முத்தரப்பு ஒரு நாள் தொடரில் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக குசல் மெண்டிஸ் பிரகாசிக்கத் தவறினாலும், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரி-20 தொடரிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர் தனது திறமையால் மீண்டும் இளம் ஹீரோவாக உருவெடுத்தார்.

உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள்

இதில் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 196 ஓட்டங்களைக் குவித்த மெண்டிஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 68 ஓட்டங்களைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்ட T-20 தொடரில் 53 மற்றும் 70 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு சிறந்த ஆரம்பங்களை பெற்றுக்கொடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

மொறட்டுவ பிரிஸ்ன் ஒப் வேல்ஸ் கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியை மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு காலடிவைத்த 23 வயதான குசல் மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் தொகுப்பு பின்வருமாறு,

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் மற்றும் ரி-20 தொடர்களில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி இலங்கை அணியின் வெற்றிக்கு அடியிட்டிருந்தீர்கள். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கியதை பற்றிச் சொல்லுங்கள்?

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்குவது எனக்கு பிரச்சனை இல்லை. 3ஆம் இலக்கத்திலிருந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மாறியது மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவும் இல்லை. ஏனெனில் நான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இதற்கு முன் களமிறங்கியுள்ளேன். ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு முறையும், என்னுடைய கழகத்துகாக விளையாடிய போதும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்தேன்.

மோசமான திறமையினை வெளிப்படுத்திய பிறகு மீண்டும் அணியில் இடம்பெற்றமை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

அணியில் எனது இடத்தை இழந்த பிறகு, முதல் வேலையாக தீவிர பயிற்சிகளை ஆரம்பித்தேன். குறித்த காலப்பகுதியில் எனது கழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் நிறைய உதவியிருந்தனர். எனவே, அணியில் மீண்டும் இடம்பிடித்து தொடர்ந்து விளையாடுவதற்கான எனது அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுத்தன.

சந்திக்க ஹத்துருசிங்க தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, உங்களை அணியில் இணைத்துகொள்ள வேண்டும் என அவர் தேர்வாளர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வாய்ப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் முதலில் கூறியது போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து நான் தொடர்ந்து பயிற்சிகளை முன்னெடுத்து வந்தேன். எனவே, மனதளவில் மிகப் பெரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்த தருணத்தில் அணியில் மீண்டும் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியதற்கு பயிற்சியாளருக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம், துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீரவும் எனக்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துகின்றேன்.

அதுதொடர்பில் விளக்கமாக கூறி னால்?

சந்திக்க ஹத்துருசிங்கவும், திலான் சமரவீரவும் என்னுடன் நீண்ட நேரம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எனது திறமையை மேலும் வெளிக்கொண்டுவருவதற்கு அதிக அக்கறை செலுத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடுவதற்காக எனது மனநிலையையும் சரி செய்வதற்கு ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். அதுதான் எனது துடுப்பாட்டத்தை மேலும் வலுப்படுத்தியது. 

 


Add new comment

Or log in with...