ஐ.சி.சி தவறால் முதலிடத்தை இழந்த பாக். மீண்டும் முதல் இடத்தை பிடித்தது | தினகரன்

ஐ.சி.சி தவறால் முதலிடத்தை இழந்த பாக். மீண்டும் முதல் இடத்தை பிடித்தது

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தவறால் அவுஸ்திரேலியா முதல் இடம்பிடித்தது. தற்போது சரி செய்ததால் பாகிஸ்தான் மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்தது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் வெளியிடப்பட்டு வரும் ஐ.சி.சி அணிகள் தரவரிசையில் ரி 20 போட்டிக்கான ரேங்கில் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்தது.

சமீபத்தில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ரி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஒவ்வொரு அணிகளும் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதனடிப்படையில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் அவுஸ்திரேலியா ஐந்து போட்டிகளில் தோல்வியின்றி வெற்றி பெற்றால் தரவரிசையில் முதல் இடம்பிடிக்கும் எனக்கூறப்பட்டது.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதும் அவுஸ்திரேலியா முதன்முறையாக ரி 20 அணிகள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கணக்குமுறை தவறாகிவிட்டது. தசம அடிப்படையில் பாகிஸ்தான் அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது என்று தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா 125 புள்ளிகள் பெற்றுள்ளது. தசம புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியா 125.65 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தான் 125.84 புள்ளிகள் பெற்று 0.19 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தை தக்கவைத்துள்ளது 


Add new comment

Or log in with...