கல்வித் துறையில் மிகப்பெரும் ஆளுமை கலாநிதி சஹாப்தீன் | தினகரன்

கல்வித் துறையில் மிகப்பெரும் ஆளுமை கலாநிதி சஹாப்தீன்

 

‘நேற்று இருந்தவர் இன்று இல்லை’ என்பதை உலகின் பெருமை எனக் கூறுகிறார் வள்ளுவர். இது இயற்கையின் நியதி. மனிதர் தோன்றுவதும், வாழ்வதும், சிறப்பதும், இறப்பதும் என இந்த நியதி சதா நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது. எனவே வந்து போன சகலரையும் நினைவில் நிறுத்துவது என்பது அசாதாரணம். ஆயின் சிலர் நின்று நிலைப்பர். அவர்கள் நினைவு கொள்ளப்படுவர், அவர்கள் மனித வரலாற்றின் தொடர்ச்சியில் ஏதோவொரு மையப்புள்ளியில் நின்றுகொண்டு தாம் செய்த நற்செயல் காரணமாக நினைவு கூரப்படுவர், அவ்வாறாக நின்று நிலைத்தோருள் நினைவுகூரப்பட வேண்டிய ஒரு மாமனிதர் மர்ஹூம். தேசமான்ய, கலாநிதி ஏ. எம். முஹம்மத் சஹாப்தீன் அவர்கள். (1926-2017)

இலங்கை வரலாற்றில் பொதுவாக வணிக சமூகமாக அறியப்பட்ட இஸ்லாமிய மக்களில் இருந்து, அந்த வணிக மேம்பாட்டையும் தாண்டிய இறைநேசர்கள், கல்வியாளர்கள், பொதுச் சேவையாளர்கள் எனப் பலர் மேற்கிளம்பியுள்ளனர். அவ்வாறான மேற்கிளம்பிகளில் மூத்த தலைமுறையினர் எனப் பலரை அடையாளங்காட்ட முடியும். அவர்களுள் பட்டம், பதவி, வணிகம், இறைபணி, பொதுத்தொண்டு எனப் பல துறைகளிலும் கால்பதித்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டோருள் கலாநிதி சஹாப்தீன் முதன்மையானவர்.

இலங்கை மத்திய மலைநாட்டில் இஸ்லாமியர்கள் செறிந்து வாழ்கின்ற கம்பளைதான் அவரது ஜன்மபூமி. அப்துல் மஜீத், சஹாஹர்வான் மஜீத் தம்பதியினரின் மகனாக 1926 இல் பிறந்த அவர் தாம் கல்வி மீது கொண்ட தணியாத தாகத்தால் ஆரம்ப இடைநிலைக் கல்வியைக் கற்றுத் தேறி, இலங்கைப் பல்கலைக்கழகத்துள் அனுமதிக்கப்பட்டு 1949 இல் கலை மாணிப் பட்டம் பெற்றவர். அடுத்த ஆண்டில் (1950) இலங்கை நிருவாக சேவையில் (C.C.S) இன்றைய (SLAS) இணைந்து கொண்டார். 1973 இல் ஓய்வு பெறும் வரை இலங்கை அரசின் பல உயர் பதவிகளை அவர் அலங்கரித்திருக்கின்றார். ஓய்வின் பின்னரும் கடினமான உழைப்பாளியாக அவர் தம்மை நிலைநிறுத்தியுள்ளார்.

அன்னாரது செயற்பாடுகளை பின்வரும் மூன்று தளங்களில் வைத்து நோக்கமுடியும்.

(அ) அரச நிர்வாகி

(ஆ) கல்வியாளன்

(இ) இறைபற்றுடன் கூடிய சமூக சேவையாளன்.

1950 இல் அரச நிர்வாக சேவையில் இணைந்த அரச நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் செயலாளராகவும், தலைவராகவும், பணிப்பாளராகவும் உறுப்பினராகவும் தொடர்நது செயலாற்றி வந்துள்ளார். அவர் வகித்த பதவிகளின் பட்டியல் மிக நீண்டது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவர் அரச பதவிகளில் அமர்த்தப்பட்டார் என்றால் அவர் தம்மீது சுமத்தப்பட்ட பணிகளில் எவ்விதம் இயங்கியுள்ளார் என்பதைக் கணிப்பிட முடியும்.

சிறந்த நிர்வாகியாக விளங்கியவர். சிறந்த கல்விமானாகவும் விளங்கியுள்ளார். அவர் தமது பட்டப்படிப்பில் மேலைத்தேய மெய்யியலைப் பிரதான பாடமாகக் கொண்டிருந்தமையினால் 1957-1959 காலப் பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழக வித்தியோதய வளாகத்தில் (ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகம்) மேற்கத்தைய மெய்யியல் துறையின் வருகை விரிவுரையாளராகவும், துறைத் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அவ்வாறு மெய்யியல் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நிகழ்த்தி 1985 இல் கலாநிதிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். சூபி மார்க்க இறைநேசர்களின் இறையியல் கொள்கைகள் பற்றியதாகவே அவரது ஆய்வேடு அமைந்திருக்கின்றது. இவ்விடத்தில் இன்னோர் இஸ்லாமிய அறிஞரான பேராசிரியர், அல்லாமா எம். எம். உவைஸ் அவர்களையும் நினைவு கூரல் தகும். பேராசிரியர் உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் கவனங்கொண்டு தனது ஆய்வுகளை நிகழ்த்த கலாநிதி சகாப்தீன் இஸ்லாமியத் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆய்வினை நிகழ்த்தினார். மர்ஹூம் சஹாப்தீன் அவர்களது கலாநிதிப்பட்ட ஆய்வு ‘The Suti Doctrine in Tamil Literature’ என்பதாகும்.

‘இஸ்லாமிய தத்துவக் கொள்கைகள், சூபித்துவ ஞானம் என்பவற்றை முஸ்லிம் இறை ஞானிகளின் எழுத்துக்களில் இருந்தும் தமிழகத்தில் தோன்றிய பீர் முகமதப்பா, குணங்குடி மஸ்தான் போன்றவர்களின் ஞானப்பாடல்களிலிருந்து எடுத்து எழுதினேன். முக்கியமாக திருக்குர் ஆன் ஹதீஸ்களிலிருந்தும் அவைகளைப் பற்றிய ஆதாரபூர்வமான விளக்கத்தை ஆங்கில பாஷையில் எடுத்துரைத்தேன்’ என்று அவர் எந்த ஆய்வேடு பற்றிக் குறிப்பிடுகின்றார். அந்த ஆய்வேடு ஆங்கிலத்திலும், பின் சில திருத்தங்களுடன் ‘இறைவனும் பிரபஞ்சமும்’ என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது.

‘தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தின் பல்வேறு துறைகளையும், தத்துவஞானத்தையும் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்மொழி வன்மையையும் ஒருங்கே கொண்டிராத காரணத்தினால் ஆய்வாளர்கள் எவரும் இப்பாரிய கைங்கரியத்தை ஏற்க முன்வந்தார்களில்லை..... எவ்வளவுதான் மொழியாற்றல் இருந்தாலும் சூபித்தத்துவத்தின் நுணுக்கமான அம்சங்களில் பரிச்சயம் இல்லாதவிடத்து, அக்கருத்துக்களைத் திருப்தி அடையக்கூடிய விதத்தில் ஒரு மொழியிலிருந்து பிறிதொரு மொழிக்குப் பெயர்க்க முடியாது. ஆனால் இந்நூலாசிரியரோ இங்கு கூறப்பட்ட துறைகளில் எல்லாம் பாண்டித்தியம் பெற்றிருப்பதால் இப்பணி இவருக்கு இலகுவான ஒரு காரியமானது. சூபிச் சிந்தனைகளையும் கருத்துக்களையும் இந்நூல் நன்கு விளக்கிச் செல்கிறது. இத்துறையில், இந்நூல் தலைசிறந்து விளங்குகின்றது, எனக் கூறின் அது மிகையாகாது.’

என அல்லாமா. எம். எம். உவைஸ் அவரக்ள் குறிப்பிடுவது வெறும் புகழ்மாலையல்ல. மேற்குறித்த நூல்கள் தவிர மெய்யியல் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும், செவ்வியல் இசை சார்ந்தும் அவர் கொண்ட ஈடுபாடு காரணமாகப் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பது இவ்விடத்தில் மனங்கொள்ளத்தக்கது.

கலாநிதி சஹாப்தீன் அவர்கள் இன்னோர் தளத்தில் விஸ்வரூபம் கொண்டார். அதுதான் அவரது சமூக சேவைத் தளமாகும். அந்தச் செயற்பாட்டிற்கு ஆதார சுருதியாக அமைந்தது அவரது வணிகச் செயற்பாடுகளாகும். மஜீட்சன்ஸ் குழுமத்தை உருவாக்கி, மாணிக்கக்கல், தங்க ஆபரணத் தொழில், கட்டட நிர்மாணத் தொழில் எனப் பலவாறாக இயங்கி அந்த நிறுவனத்தின் வழி பெருஞ் செல்வந்தரானார்.

ஆனால் தான் உழைத்த பணத்தை தனது சுக போகங்களில் அவர் செலவிடவில்லை. மாறாக அதனை இறைபணியுடன் கூடிய சமூக சேவைக்கு செலவிடுவதில் கவனங்கொண்டார். இந்த நோக்கின் வழி உருவானதுதான் ஏ. எம். எம். சஹாப்தீன் நம்பிக்கை நிதியம். 1991 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் சமூக நலன்புரி நிறுவனமாக அது தன்னைப் பதிவு செய்துகொண்டது. இதன் வழி உயர்கல்வி, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு ஆகியவற்றைப் பயிலும் வறிய, திறமை மிக்க மாணவர்க்கான புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் விஞ்ஞானம், இலக்கியம் மற்றும்சர்வதேச புரிந்துணர்வு ஆகியவற்றில் திறமைமிக்க தென் ஆசியாவைச் சேர்ந்த புலமையாளருக்கான விருதுகளையும் வழங்கி வருகின்றது.

இதற்கும் மேலாக குருநாகல் மாவட்டத்தில் செறிந்து வாழ்கின்ற பஹமுன என்ற இடத்தில் பட்டக் கற்கைகளுக்கான டாக்டர் சஹாப்தீன் நிறுவனம் ஒன்றை ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் நிறுவினார். அந்த வளாகம் சகல வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், கேட்போர் கூடம், நூலகம், விரிவுரையாளர்கள் ஓய்வறைகள் ஆகியவற்றுடன் கூடிய பிரதான கட்டட தொகுதி, தகவல் மையம், பெண்களுக்கான விடுதி, விளையாட்டு மைதானம் ஆகிய சகல உள்ளகக் கட்டுமானங்களையும் கொண்டதாக விளங்குகின்றது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் வெளிவாரி மாணவர்களாகப் பதிவு செய்து கொண்ட மாணவர்களுக்குச் சகல பாடங்களுக்குமான விரிவுரைகள் பொருத்தமானவர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. இவற்றுக்கு மேலாக ஆங்கிலப் போதனை, கணினி போதனை, மா வெட்டுதல் மற்றும் வடிவமைப்பு, தையற்கலை ஆகிய தொழில் சார் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இன்றைய தனியார்மயப்பட்ட கல்வி நடவடிக்கைகள் இலாப நோக்கில் இயங்க, சஹாப்தீன் பவுண்டேசனோ சமூக நலதிட்டம் ஒன்றையே கருதி வசதி குறைந்த பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் கவனங் கொண்டு இலாப நோக்கில் தன்னை இழந்து, தம் பிள்ளைகளுக்குக் கல்விக் கண்களைத் திறந்து விட்டு அவர்களைக் கல்விச் செல்வர்களாக்க முயல்கின்றது.

நிறைவாக :

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் முகம் வாடியவர்களாக மஸ்ஜிநுந் தபவில் அமர்ந்திருந்தார். முகவாட்டத்துக்குக் காரணங்கேட்ட ஸஹாகாபஜகளிடம் “என் உம்மத்தின் வருங்காலத்தை நினைத்து வருந்துகிறேன்.” என்று சுருக்கமாக அவர்கள் பதிலளித்தார்கள்.

அதாவது ‘அதிகமான செல்வத்தைக் குவித்து ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் அலட்சியமாக இருந்து விடுவார்களோ என்று அஞ்சுகிறேன்” – என்றார்கள். ‘பணப்பெருக்கம் இறை நெருக்கத்தை அந்நியமாக்கி விடுமோ’ என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது.

ஆயின் மர்ஹீம் தேசமான்ய கலாநிதி சஹாப்தீன் போன்றவர்களிடம் உம்மத்தும் இருந்து, இறைநேசமும் இருந்தது, சமூக மயப்பாடும் இருந்தது. அவர்கள் போன்றவர்களுக்குப் பணம் எசமானவர்கள் அல்ல. பணம் அவர்களிடம் ஏவல் கேட்டது. சஹாப்தீன் போன்றோர்கள் அதன் வழி நின்று எஞ்ஞான்றும் நினைவு கொள்ளப்படுவர்.

பிற்குறிப்பு :

நல்ல பெற்றோர்களும், குருவானவர்களும் வாய்க்கப் பெற்றவர்கள் அதிஷ்டசாலிகள். அவ்வாறானபேறு எனக்கும் கிடைத்தது. என் குடும்பத்தின் வழி, இஸ்லாம் சமூகத்துடனான ஊடாட்டம் பால்யப்பருவத்திலிருந்து தொடங்கியது. சாஹாப்தீன் போன்றோரது ஊடாட்டம் என் பேராசிரியர் தில்லைநாதன் வழிவந்தது. அவரது வழிகாட்டலில் நான் பலரைச் சந்திக்கவும் அறியவும், தொடர்பு கொள்ளவும் முடிந்தது.

1998 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் கோயிலின் “அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்” நடைபெற்றது. அதற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது, என் பேராசிரியர் கூறினார். ‘கலாநிதி சஹாப்தீன் நமது நண்பர், நமது பல்கலை மாணவர், ஒருமுறை தமிழ்த்துறை நடத்திய கருத்தரங்கிற்கு நிதியளித்தவர். ஆகவே அவரிடம் சென்று நிதி கேட்கலாம் என்றார். அவரின் ஆலோசனைப்படி அவரது கொழும்பிலுள்ள சிபானி கட்டத்திற்குச் சென்றேன்.

தில்லையின் மாணவன் என்ற மதிப்புடன் உபசரிக்கப்பட்டு நிதியையும் பெற்றேன். அன்றிலிருந்து தொடங்கியது நமக்கிடையேயான உறவு. அர் பகமுனாவில் ஆரம்பித்த கல்வி நிறுவனத்தில் தமிழுக்கான ஆலோசனைச் சபை உறுப்பினராக இன்று வரை இருந்து வருகின்றேன். தமது கல்விநிறுவனத்தை தான் காலத்திலேயே இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாகத் தரமுயர்த்த விரும்பினார். நானும் பேராசிரியர் அனஸ் மற்றும் அவரது நிறுவன மேலாளர் ஜனாப் ரிஷான், பவுண்டேசன் பணிப்பாளர் ஜனாப் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து உழைத்தோம். எனின் அந்த எண்ணம் கைகூடவில்லை.

அவருடைய கனவை அவரது பிள்ளைகள் நிறைவேற்றுவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் நீண்ட கால உறவைப் பேணியவர், பேராசிரியர் சி. தில்லைநாதனுடன் நல்ல நட்பைப் பேணியவர், அவரது முயற்சிகளுக்குக் கைகொடுத்தவர். அண்மையில் எமது துறை சர்வதேச மாநாடு ஒன்றை நடத்திய போது வழமைபோல அவரிடம் அணுகினேன். மாநாட்டுப் பேராளர்களுக்கான கைப்பையை வழங்குவதற்கான நிதியை அவர் வழங்கினார். எனக்கும் அவருக்குமிடையே மானசீக உறவு இருந்தது.

என்னை அன்புடன் டொக்டர் என்று அழைப்பார். அவரது விருந்தோம்பல் விபரிக்கமுடியாதது. கொள்ளுப்பிட்டி பஹத்தல வீதியில் அமைந்துள்ள அவரது மாமளிகையில் பல தடவைகள் விருந்துண்டிருக்கிறேன். விருந்துக்குமேலான அன்பும், அனுசரணையும் நிறைந்ததாய் அதுஅமையும். எவ்வளவு பெரிய மனிதன் மிக எளிமையுடன் என்னுடன் பழகியதை என்னால் என்றும் மறக்கவியலாது. என் வாழ்நாளில் சந்தித்த மிகப் பெரும் ஆளுமையாக அவரை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

பேராசிரியர்
வ. மகேஸ்வரன்
(தமிழ்த்துறை, பேராதனைப்
பல்கலைக்கழகம்)


Add new comment

Or log in with...