நாட்டுப்படகுகளில் கச்சதீவுக்கு செல்ல இந்திய மீனவர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி | தினகரன்

நாட்டுப்படகுகளில் கச்சதீவுக்கு செல்ல இந்திய மீனவர்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

 

கச்சதீவு திருவிழாவிற்கு, இராமேஸ்வரம் மீனவர்கள் நாட்டுப் படகுகளில் செல்ல அடுத்த ஆண்டு முதல்பாதுகாப்பு அம்சங்கள், விதிமுறைகளுக்குட்பட்டு அரசு தரப்பில் அனுமதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியிலுன்ன சட்டத்தரணி பிரின்சோ ரைமண்ட், தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கச்சதீவில் 1913இல் புனிதஅந்தோனியார் ஆலயம் அமைக்கப்பட்டது. 1974ல் கச்சத்தீவை இலங்கை அரசிடம், இந்திய அரசு சில ஒப்பந்தங்கள் அடிப்படை யில் கொடுத்தது. அதன்படி இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தீவில் வலைகளை உலர்த்தலாம். திருவிழா கொண்டாடலாம். 1974 க்கு பின் ஓலைக்குடா மக்கள் மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் திருவிழாவிற்கு சென்றுவருகின்றனர்.

அங்கு இராமேஸ்வரம் மற்றும் அதைச்சுற்றிலும் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுப் படகுகளில் சென்றுவருவது வழக்கம்.

இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. கச்சதீவில் இன்று திருவிழா நடக்கிறது. மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர அனுமதி கோரி இராமநாதபுரம் அரச அதிபரிடம்(கலெக்டரிடம்) மனு அளித்தோம்.அது பாதுகாப்பற்றது எனக்கூறி நிராகரித்தார்.

அந்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும். இராமேஸ்வரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் கச்சதீவு திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பிரின்சோ ரைமண்ட் மனு தாக்கல் செய்திருந்தார். இதுபோல் மேலும் சிலர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு உத்தரவு: தற்போதுகுறுகிய கால அவகாசமே உள்ளதால், நடப்பு ஆண்டு மனுதாரர்கள் கோரும் நிவாரணம் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கவேண்டிய சூழல் எழவில்லை.

அடுத்த ஆண்டு முதல் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கச்சதீவு திருவிழாவிற்கு மோட்டார் பொருத்திய நாட்டுப் படகுகளில் சென்றுவர பாதுகாப்பு அம்சங்கள், நிபந்தனைகள், விதிமுறைகளுக்குட்பட்டு பரிசீலித்து, அரசுத் தரப்பில் அனுமதிக்க வேண்டும் என்றனர். 

 


Add new comment

Or log in with...