தவறு செய்வோர் என்னுடன் வர வேண்டாம்: நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு கமல் அறிவுரை | தினகரன்

தவறு செய்வோர் என்னுடன் வர வேண்டாம்: நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு கமல் அறிவுரை

 

பொதுமக்களை சந்திக்கும் பணி தூய்மையாக இருக்க வேண்டும் என்று நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு கமல் அறிவுறுத்தி உள்ளார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை கமலஹாசன் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அகில இந்திய பொறுப்பாளர் தங்கவேல், 11 பேர் கொண்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் அடுத்த கட்ட பயணம் குறித்து கமல் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தற்போது உயர்நிலைக் குழுவை தவிர புதிய நிர்வாகிகளை அதிகாரபூர்வமாக நியமிக்கவில்லை. அனைத்து மாவட்டங்களில் நற்பணி இயக்க நிர்வாகிகள் ஏற்கெனவே உள்ளனர். அந்தந்த மாவட்டத்தில் இயக்க, கட்சிப் பணிகளை கவனிக்க கமல் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி, அரசியல் அனுபவம், மக்களிடம் நல்ல அணுகுமுறை போன்ற பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க அவர் திட்டமிட்டுள்ளார். கட்சி நிர்வாகி, நற்பணி இயக்க நிர்வாகிகள் எனத் தனித்தனியே செயல்படும் திட்டமும் உள்ளது. நற்பணி இயக்கத்தை தவிர தகுதியான பொதுமக்களும் நிர்வாகிகளாக நியமிக்கப்படுவர். வேறு அரசியல் கட்சிகளைவிட, மக்கள் நீதி மய்யம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகே புதிய நிர்வாகிகள் நியமனம் இருக்கும். ஏற்கெனவே நடத்திய ஆலோசனையில் பணம் சம்பாதிக்கும் நோக்கிலும், பதவி ஆசை, எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது. தகுதி இருக்கும் பட்சத்தில் யாரும் கேட்காமல் பதவி அளிக்கப்படும் என கமல் கூறியுள்ளார்.

கல்வி, பொது அறிவு, அரசியல் அனுபவம், குற்றப் பின்னணி இல்லாதவர்களை எதிர்பார்க்கிறார். இதுபோன்ற தகுதியானவர்கள் நற்பணி மன்றத்தில் இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இது அவரது திட்டமாக உள்ளது.

தற்போது ஓய்வுபெற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகள் கட்சியில் சேர்ந்துள்ளனர். துடிப்பான இளைஞர்களை எதிர்பார்க்கிறோம். பணம் மட்டுமே பிரதானம் எனக் கருதினால் பல கோடீஸ்வரர்கள் கட்சியில் பதவிக்காக வருவர். கட்சியில் வளர்ச்சி இருக்காது என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதிலும் கமல் கவனமாக இருக்கிறார்.

எல்லா கட்சிகளைப் போல் இன்றி, ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைப்போம். நற்பணி இயக்கத்தினர் தூய்மையுடன் இருக்க வேண்டும். இல்லையெனில் யாராக இருந்தாலும் வெளியே அனுப்புவேன் என, நிர்வாகிகளை ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.

சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு, இருக்கும் வரை மக்கள் பணி செய்ய வருகிறார். இங்கு தவறு கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். தவறு செய்வோர் என்னுடன் பயணிக்க முடியாது. எப்போதும் மக்களை சந்திக்கும் பணி தூய்மையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறார். இது போன்ற பல்வேறு அறிவுரைகளை கமல் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் கூறினார். 


Add new comment

Or log in with...