முறி தொடர்பான தகவல் கசிந்தமை அம்பலம் | தினகரன்

முறி தொடர்பான தகவல் கசிந்தமை அம்பலம்

 
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட முதலாவது கோப் குழுவின் சாட்சிகளின் பிரதிகள், அக்குழுவின் உறுப்பினர் ஒருவர் மூலம் அவரது மகன் ஊடாக, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளமை இன்று (06) அம்பலமாகியுள்ளது.
 
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான முகவரான நுவன் சல்காது இன்றைய தினம் (06) ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
 
இதன்போது, அவருக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு ஆணைக்குழுவின் முன் ஒலிபரப்பட்டுள்ளது.
 
குறித்த ஒலிப்பதிவு கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
 
பேர்பச்சுவல் நிறுவன தொலைபேசி உரையாடல் பதிவுகள் யாவும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த தரவுகள் அழிக்கப்படுவதற்கு முன்னர் பெறப்பட்ட, திருத்தம் செய்யப்படாத ஒலிப் பதிவுகளின் மூலப் பிரதிகள் நேற்றைய தினம் (05) ஆணைக்குழுவில் வழங்கப்பட்டிருந்தது.
 
ஆணைக்குழுவில், மிக முக்கியமான சாட்சியங்கள் அடங்கிய கோப்புகள் போன்றவை காணப்பட்டதன் காரணமாக நேற்று (05) இரவு முதல், ஆணைக்குழுவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

Add new comment

Or log in with...