இந்தியாவை நேசிக்கும் கனடா பிரதமர் | தினகரன்

இந்தியாவை நேசிக்கும் கனடா பிரதமர்

தமிழர்களின் பெருமைமிக்க பண்டிகையான பொங்கலை இதுவரை இந்திய நாட்டு பிரதமர் கூட கொண்டாடியிருப்பாரா, தமிழர்களின் விளையாட்டான சிலம்பம் சுற்றியிருப்பாரா போன்ற கேள்விகளுக்கு 'தெரியாது' என்பதே பதிலாக இருக்கும். ஆனால், கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதையெல்லாம் செய்திருக்கிறார் என்று நாம் அடித்தே கூறலாம்.

ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களின் மீது அத்தனை அன்பு கொண்டவர். தமிழர்கள் மீது மட்டுமல்ல, பொதுவாக அனைவரின் மீதும் அவருக்கு அன்பு இருக்கிறது. அதனால்தான் உலக மக்கள் பலர் அவரை நேசிக்கின்றனர். இவர் தற்போது ஏழு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி இந்தியாவுக்கு வந்த அவர், இந்தியாவின் முக்கிய இடங்களான டெல்லி, அஹமதாபாத் மற்றும் மும்பைக்கு சென்றிருக்கிறார்.

டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு சென்று காதல் சின்னமான தாஜ்மஹாலை தன் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார். தாஜ்மஹால் சென்றதை பற்றி ட்வீட் செய்த ட்ரூடோ, தனது பத்து வயதில் ஏற்கனவே அங்கு வந்த நினைவைப் பகிர்ந்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஜஸ்டின் தன் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் மட்டுமல்லாமல் விதவிதமாக போஸ்கள் கொடுத்தும் புகைப்படம் எடுத்திருக்கிறார். தாஜ்மஹாலை பார்த்தவுடன் அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணர் பிறந்த ஊர் என சொல்லப்படும் மதுராவுக்கு சென்ற அவர், அங்கு இருக்கும் யானைகள் சரணாலயத்தை குடும்பத்துடன் பார்க்க சென்றிருக்கிறார். இங்கு எடுத்த புகைப்படங்களையும் டிவிட்டரில் பதிவிட்டுவிட்டார்.

டெல்லியில் இருந்து குஜராத்துக்கு சென்றவர், விமான நிலையத்தில் அனைவருக்கும் தன் தோற்றத்தின் மூலம் அதிர்ச்சி கொடுத்தார். குடும்பத்தோடு குர்தா அணிந்து வடஇந்தியராகவே மாறிவிட்டார். அன்றைய நாளில் முதல் பயணமாக சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். பின்பு அங்கு கதர் இராட்டையை சுற்றிப்பார்த்தார். காந்தி நகர் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அன்று மதியம் ஐஐஎம் கல்வி நிறுவனத்திற்கு சென்று மாணவர்களிடம் உரையாற்றினார். அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் சந்திப்பு ஒரு புறமிருந்தாலும், குடும்பத்துடன் தனது இந்திய பயணத்தை கொண்டாடுகிறார் தமிழர்களுக்கு விருப்பமான பிரதமர் ட்ரூடோ. 


Add new comment

Or log in with...