குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதலல்ல | தினகரன்

குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதலல்ல

சபையில் பிரதமர் அறிவிப்பு

கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிவிபத்துக்கு கைக்குண்டு வெடிப்பே காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக விபரித்த பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர, “இராணுவ வீரர் ஒருவரிடமிருந்த கைக் குண்டொன்றே வெடித்துள்ளது.” என நேற்றிரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளை - தியத்தலாவை நோக்கி பயணித்த பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கான உண்மைக் காரணம் என்ன என்பதை அரசு அறிவிக்க வேண்டுமென நேற்று தினேஷ் குணவர்த்தன எம்.பி பாராளுமன்றத்தில் கோரியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பஸ் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியை தொடர்புகொண்டு விசாரித்தேன். பஸ்ஸில் பயணித்த ஒருவரின் பொதியிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே இதற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இராணுவத் தளபதியை தொடர்புகொண்டு பேசியபோது, கைக்குண்டு வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதுவதாகக் கூறினார். இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, கைக்குண்டு வெடித்தமையே இதற்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன. அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன. விசாரணைகள் பூர்த்தியடைந்ததுமே காரணத்தை உறுதிப்படுத்திக் கூற முடியும் என்றார்.

தீவிரவாத செயற்பாடு காரணமல்ல

தியத்தலாவை, கஹகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் எவ்வித தீவிரவாத செயற்பாடுகளும் கிடையாது என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.

கிரணைட் ரக குண்டொன்றே வெடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை பொலிஸாரும் அதற்கு மேலதிகமாக இராணுவமும் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

தடயங்களின் அடிப்படையில் மேற்படி வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் எவ்வித தீவிரவாத நடவடிக்கையும் கிடையாது என்று தெரிவித்த அவர் இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தும் பொறுப்பு பொலிஸாரையே சாரும் என்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராணுவப் பேச்சாளர் அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. :-

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி வருகைத்தந்த தனியார் பஸ் வண்டி சுமார் அதிகாலை 5.30 மணியளவில் பண்டாரவளை பஸ்தரிப்பு நிலையத்தை வந்தடைந்துள்ளது. தியத்தலாவ நோக்கி பயணிக்கவிருந்த பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதை அடுத்து பண்டாரவளை பஸ் நிலையத்திலிருந்து வேரொரு பஸ் வண்டியில் மேற்படி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டு வந்த பஸ் வண்டி சுமார் 5. 45 மணியளவில் கஹகொல்ல பிரதேசத்தை அண்மித்த போது பாரிய வெடிப்பு சத்தத்துடன் பஸ் வண்டி தீப்பிடித்துள்ளது.

இந்தச் சம்பவம் அதிகாலை வேளை அந்த பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பஸ் வண்டியில் பயணித்த 19 பயணிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயடைந்தவர்களில் 7 இராணுவ வீரர்களும், 5 விமானப்படை வீரர்களும், 7 பொது மக்களும் அடங்குவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டார்.

பண்டாரவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலிருந்து தியத்தலாவைக்கு நாளாந்தம் கடமைக்காக சென்றுக் கொண்டிருந்த படைவீரர்களே காயடைந்துள்ளனர். இவர்களில் இரு படைவீரர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத், ஷம்ஸ் பாஹிம், ஸாதிக் ஷிஹான் 

 

 


Add new comment

Or log in with...