நாட்டின் சுபிட்சத்திற்கு தேசிய அரசின் தேவை | தினகரன்

நாட்டின் சுபிட்சத்திற்கு தேசிய அரசின் தேவை

 

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் மிக்க இணக்கப்பாடும், உடன்பாடும் 2015 ஆம் ஆண்டில் எட்டப்பட்டதோடு அதனூடாக இந்நாட்டு அரசியலில் பாரிய திருப்புமுனைக்கு அடித்தளமிடப்பட்டது.

இந்நாடு சுதந்திரமடைந்தது முதல் மாறிமாறி இந்நாட்டை ஆட்சி செய்து வந்த இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எட்டப்பட்ட இந்த இணக்கப்பாடு இரண்டு தலைவர்களதும் ஏகமனதான அங்கீகாரத்தோடு உடன்படிக்கையாக 21.08.2015 அன்று கைச்சாத்திடப்பட்டது. இரு வருட காலப்பகுதிக்கான உடன்படிக்கையில் இரண்டு கட்சிகளதும் செயலாளர்கள் உத்தியோகபூர்வமாகக் கைசாத்திட்டதோடு தேசிய அரசாங்கமும் அமைக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க இணக்கப்பாடு இந்நாட்டுக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்நாட்டிலுள்ள சில பிரச்சினைகள் தீர்க்கப்படாது பல தசாப்தங்களாக நீடித்து வருகின்றன. நாடு தொடர்ந்தும் வளர்முக நாடாக இருப்பதற்கும், இந்நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி தாமதமடைவதற்கும் இப்பிரச்சினைகள் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அவற்றில் தேசிய பிரச்சினை பிரதான இடத்தை வகிக்கின்றது. இவ்வகைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒரு கட்சி ஆளும் கட்சியாக இருந்து நடவடிக்கை எடுக்கும் போது, அடுத்த கட்சி எதிர்க்கட்சியாக இருந்து அதனை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது.இது வரலாறு.

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட இரண்டு கட்சிகளதும் தலைவர்கள் இப்பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைக் காண்பதோடு நாட்டை துரித அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்வதையும் நோக்காகக் கொண்டு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு தேசிய அரசாங்கத்தை அமைத்தனர்.

அதன் ஊடாக நாட்டில் அச்சம் பீதி முற்றாக நீங்கிய சுதந்திர ஜனநாயக சூழல் மீண்டும் தழைத்தோங்கி உள்ளது. நீதிச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்களும் சிறப்பாக செயற்படும் சூழலும் தோற்றுவிக்கப்பட்டது. அத்தோடு சுதந்திர ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பரந்தடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற துரதிர்ஷ்டகரமான உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுத்த தேசியப் பிரச்சினைக்கு அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாக நிலைபேறான தீர்வை எட்டவும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் நிமித்தம் பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த தேசிய அரசாங்கம் நாட்டில் சட்டம் ஒழுங்கை மீள உறுதிப்படுத்தவும், சுதந்திர ஜனநாயகம் தழைத்தோங்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேச மட்டத்திலும் இவ்வரசாங்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் இருந்து தூரமாகி இருந்த பல வெளிநாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் திருப்தி கண்டு மீண்டும் இவ்வரசாங்கத்துடன் நெருக்கமான உறவை ஆரம்பித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆட்சிக்காலத்தில் இந்நாட்டு மீன் இறக்குமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கியதோடு ஜி.எஸ்.பி பிளஸ் நிவாரணத்தையும் வழங்கியுள்ளது.

இவ்வரசாங்கம் முற்போக்கு சிந்தனையுடன் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களின் பயனாக இந்நாடு முன்னொரு போதுமே அடைந்திராத பல்வேறு நன்மைகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் 2017 டிசம்பர் மாதம் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியோடு இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு உடன்படிக்கையின் காலமும் முடிவுற்றது. எனினும் அது உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலமாக இருந்ததால் இரண்டு கட்சிகளும் தேர்தலில் கவனம் செலுத்தினவேயொழிய உடன்படிக்கை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகக் களமிறங்கி இருந்ததே இதற்கான காரணமாகும்.

என்றாலும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் ஐ.தே.க.வும், ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றன.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட இத்தேர்தல் முடிவுகளை வைத்து ஸ்ரீ.ல.சு.கட்சியைச் சேர்ந்த சிலர் ஐ.தே.க. உடனான இணக்கப்பாட்டு உடன்படிக்கையிலிருந்து வெளியேறவும், தனித்து அரசாங்கம் அமைக்கவும் முயற்சிகள் செய்தனர்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இது தொடர்பில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பயனாகத் தேசிய அரசாங்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டை ஐ.தே.க தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.ம.சு.மு. செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீரவும் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பின் ஊடாக தேசிய அரசாங்கம் கலைந்துவிடும் என மனப்பால் குடித்தவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.

2015 இல் என்ன நோக்கத்திற்காக இணக்கப்பாட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஒரிரு வருடங்களில் நிறைவேற்றி விட முடியாது. அத்தோடு இவ்வரசாங்கம் மு-ன்னெடுத்த நாடும், நாட்டு மக்களும் நன்மைகள் பெறும் முற்போக்கு வேலைத்திட்டங்களும் ஒரிரு வருடங்களில் நிறைவுறக் கூடியவையும் அல்ல. அதனால் இணக்கப்பாட்டு அரசாங்கம் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் அவசியமானது. அது தான் நாட்டை உண்மையாக நேசிப்பவர்களின் எதிர்ப்பாக உள்ளது.

ஆகவே மக்களின் எதிர்பார்ப்புக்கும் அபிலாஷைகளுக்கும் ஏற்ப செயற்பட வேண்டுமேயொழிய சிலர் அற்ப நலன்கள் பெற்றிட இடமளிக்க முடியாது என்பதற்கு இந்த அறிவிப்பு நல்ல எடுத்துக்காட்டு.


Add new comment

Or log in with...