கிழக்கு கெளத்தாவில் சிரிய படை தொடர்ந்தும் பயங்கர தாக்குதல் | தினகரன்

கிழக்கு கெளத்தாவில் சிரிய படை தொடர்ந்தும் பயங்கர தாக்குதல்

 48 மணி நேரத்தில் 250 பேர் பலி

சிரியாவின் கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் மூன்றாவது நாளாக கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற பயங்கர வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் அந்த பிராந்தியத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது.

சிரிய அரச படையின் முற்றுகையில் உள்ள இந்த பிராந்தியத்தில் 2013 இல் இடம்பெற்ற இரசாயன தாக்குதலுக்கு பின்னர் அதிக உயிரிழப்புக் கொண்ட இரண்டு தினங்களாக இது மாறி இருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு மழையில் 106 பேர் பலியானதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு இங்கும் மேற்படி கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் இரண்டு நாட்களில் ஆறு மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. இதன்போது பலரும் கொல்லப்பட்டிருப்பதோடு மூன்று மருத்துவமனைகள் முற்றாக செயலிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

“கடந்த 48 மணிநேரத்திற்குள் கிழக்கு கெளத்தாவில் ஆறு மருத்துவமனைகள் மீது பங்கர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் செய்தி பற்றி நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்” என்று சிரிய பிரிச்சினை தொடர்பான ஐ.நா பிராந்திய மனிதாபிமான இணைப்பாளரான பனோஸ் மெளட்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா குறிப்பிட்டிருக்கும் ஆறு மருத்துவமனைகள் தவிர மற்றொரு பிரதான மருத்துவமனை தாக்குலுக்கு இலக்காகி செவ்வாயன்று செயலிழந்ததாக சிரிய அமெரிக்க மருத்துவ சமூகம் குறிப்பிட்டுள்ளது.

“நேற்றைய தினத்தில் இருந்து தற்போது வரை எமது சுற்றுப்புறத்தில் அனைத்து வகையான குண்டு வீச்சுகளையும் எம்மால் பார்க்க முடிகிறது” என்று இரு குழந்தைகளின் தாயான ஷம்ஸ் என்பவர் கிழக்கு கெளத்தாவில் இருந்து அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

“நகருக்கு மேலால் போர் விமானங்கள் பறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. குண்டு வீச்சு தற்காலிகமாக நிறுத்தப்படும்போது ஏவுகணை தாக்குதல்களை நடத்த ஆரம்பிக்கிறார்கள்” என்று அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.

சிரிய அரச படையின் தொடர்ச்சியான வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் டமஸ்கஸ் புறகநகரில் இருக்கும் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் முற்றுகைக்கு மத்தியில் டமஸ்கஸ் புறநகர் பகுதியில் வாழும் மருத்துவரான காலித் அபுலபத், தற்போதைய நிலைமை பேரழிவு கொண்டது என வர்ணித்துள்ளார்.

“இதனை வர்ணிக்க முடியாது. அலெப்போவில் இரவு, பகலாக குண்டு விழுந்ததை ஞாபகப்படுத்துகிறது” என்று அபுலபத் குறிப்பிட்டார். “பாடசாலைகள், குடியிருப்பு பகுதிகள், சந்தைப்பகுதி என்று கூட இல்லாமல் குண்டுகள் வீசப்படுவதால் காயப்பட்டோர் மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் போதிய உணவு மற்றும் மருந்துகள் இன்றி 400,000 பேர் வரையான மக்கள் வாழ்கின்றனர். இங்கு குழந்தைகள் கொல்லப்படுவதற்கு கோபத்தை வெளியிட்டிருக்கும் யுனிசெப் டுவிட்டரில் வார்த்தைகளால் கூற முடியாது என குறிப்பிட்டு, வெற்று இடைவெளியை பதிவு செய்துள்ளது. 


Add new comment

Or log in with...