அரசியலுக்கு இராமேஸ்வரத்தில் அத்திவாரம் | தினகரன்

அரசியலுக்கு இராமேஸ்வரத்தில் அத்திவாரம்

 

இராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்று தன் அரசியல் பயணத்தை நேற்றுக் காலை தொடங்கினார் கமல்ஹாசன். அப்துல் கலாமின் இல்லத்திற்கு காலை 7.45 மணிக்கு சென்ற கமல்ஹாசனை, கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயர் வரவேற்றார். கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார்.

அதன் பின்னர் கலாம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

கலாம் படித்த பாடசாலைக்கு கமல் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து இராமேஸ்வரம் மீனவர்களை சந்திப்பதற்காக புறப்பட்ட கமல் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,"பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் தொடங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மீனவர்களைச் சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாடினார் கமல்.

"தமிழகத்தின் முக்கியமான தொழில்களில் மீனவத் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகதான் வந்திருக்கிறேன். உங்களுக்கு ஏற்படும் சுகதுக்கங்களை பத்திரிகை வாயிலாக அறிவதற்குப் பதிலாக, நேரடியாக உங்களிடமிருந்து அறிய

கடமைப்பட்டிருக்கிறேன். வாக்குறுதிகள் அள்ளி வீசிவிட்டு, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கும் போது, பிரச்சினையை திசை திருப்புவது இப்போது வாடிக்கையாக உள்ளது. கேள்வி கேட்பவர்கள், தங்கள் உரிமையை கேட்பவர்களுக்கு தடியடி செய்து பதில்தர முடியாது" என்றார்.

கூட்டத்தில் இரைச்சலாக இருந்ததால், மீனவர்களிடம் "புரிஞ்சதா... புரியலையா" என்று கேள்வி எழுப்பினார் கமல்.

கமலைச் சந்தித்து உரையாட பல மீனவர்கள் வந்திருந்தனர். ஆனால், அவர்களால் கமலை சந்திக்க இயலவில்லை. மீனவப் பிரதிநிதிகளை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் சந்தித்தார் கமல். மீனவர்கள் பொன்னாடை போர்த்த வந்த போது, `வேண்டாம்` என்று மறுத்த கமல், அவர்களை ஆரத்தழுவினார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார் கமல்ஹாசன். அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன், " ஒரு காலத்தில் திலகர், ராஜாஜி, அம்பேத்கர் என வழக்கறிஞர்கள் மட்டுமே அரசியலுக்கு வந்தனர். அப்போது யாரும் இது போலெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. தொழிலுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. உணர்வும் உத்வேகமும் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாக கூறினார் கமல்.

"கொள்கை பற்றியெல்லாம் கவலை கொள்ளாதீர்கள். மக்களுக்கு என்ன தேவை என்பதை பட்டியலிடுங்கள்.அதுதான் முக்கியம்" என்று சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிவித்தார் கமல்.

அப்துல் கலாம் வீட்டிற்கு செல்ல விரும்பியதில் எந்த அரசியலும் இல்லை என்றார் கமல்.

ஏன் அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர், "நான் யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்வதில்லை. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில் நம்பிக்கை இல்லை" என்றார்.

கலாம் படித்த பாடசாலைக்கு அனுமதிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுமதிக்காவிட்டால் என்ன... நான் பாடம் கற்பேன்" என்றார் கமல்.

பெப்ரவரி 21 ஆம் திகதியை கட்சி தொடங்குவதற்கு தேர்ந்தெடுக்க காரணமென்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "இன்று உலக தாய்மொழி தினம். அதனால்தான் இந்நாளை தேர்ந்தெடுத்தேன்" என்றார்.

அங்கிருந்து கலாம் நினைவிடத்திற்கு புறப்பட்டார் அவர். இராமநாதபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் கமல். இராமேஸ்வரத்திலிருந்து இராமநாதபுரம் செல்லும் வீதியின் இரண்டு பக்கத்திலும் 'நாளை நமதே` என்று பெயர் பொறித்த கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மண்டபம் பகுதியில் ஒலிபெருக்கி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் உரையாடினார் கமல்.

நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகம் செய்தார்.

நேற்று புதன்கிழமை கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், பொதுவாக ஒரு எதிர்பார்ப்பு நிலவும் சூழ்நிலையில், தமிழ்த் திரைப்படத் துறையிலும் கூடுதல் ஆர்வம் காணப்படுகிறது.

நடிகை ராதா, கூறுகையில், பிரபலம் அடைந்த கதாநாயகர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அரசியலில் இறங்க தீர்மானிப்பது தவறான முடிவு அல்ல'' என்று தெரிவித்தார்.

''பொதுவாக கமல் அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். இதனால் கமலின் அரசியல் அறிவிப்பு எனக்கு வியப்பு அளிக்கவில்லை'' என்று ராதா தெரிவித்தார்.

"கமல் மிகவும் தைரியமானவர். இந்தளவு தைரியமாக அவர் ஒரு முடிவு எடுத்துள்ளார் என்ற முறையில் பார்த்தால் அவர் நிச்சயம் வெல்வார் என்று நினைக்கிறேன்'' என்று ராதா தெரிவித்தார்.

இதேவேளை நடிகர் கமல்ஹாசன் சுற்றுப் பயணத்தில் பங்கேற்க யாருக்கும் உணவு, பணம் கொடுத்து அழைத்துவர வேண்டாம் என்று திண்டுக்கல்லில் நடந்த நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்கிவுள்ள நிலையில், யூடியூபில் கமலின் அரசியல் பயணத்தை வரவேற்கும் வகையில், 'வா ராசா.. வா ராசா கமலஹாசா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்த அவரை வரவேற்க காலை 10 மணி முதலே ரசிகர்கள் விமான நிலையத்தில் திரளத் தொடங்கினர். பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் வந்திருந்தனர். பகல் 12.55 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கமலுக்கு மேளதாளம், ஆட்டம்,பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கமல் காரில் ஏறும் வரை, அவரைப் பார்க்கவும், செல்பி எடுக்கவும் ரசிகர்களிடையே பலத்த போட்டி இருந்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அதன்பின் போலிஸார், மன்ற நிர்வாகிகள் கமலை பாதுகாப்பாக காரில் ஏற்றினர்.

மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கிய கமல், மதிய உணவுக்குப் பின்னர் மாலையில் இராமேஸ்வரம் புறப்பட்டார்.இராமேஸ்வரம் வைபவத்தைத் தொடர்ந்து

அருகே நடைபெறும் வரவேற்புக் கூட்டத்தில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, தான் பிறந்த ஊரான பரமக்குடியில் நடைபெறும் கூட்டத்தில் கமல் பேசினார். அங்கிருந்து புறப்பட்டு, மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஒத்தக்கடைக்கு மாலை 5.30 மணியளவில் வந்து சேர்ந்தார்.

அங்கு கட்சியின் புதிய கொடியை ஏற்றி வைத்து அறிமுகப்படுத்தினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசினார் கமல்.

இக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தமிழகம் மட்டுமின்றி, தென் மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் கமல் ரசிகர்கள், நண்பர்கள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 1 இலட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கமலை வரவேற்கும் வகையில் பொதுக்கூட்ட வளாகம் உட்பட மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு 500-க்கும் மேற்பட்டபொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Add new comment

Or log in with...