மனிதகுல நாகரிகத்துக்கு தாய்மொழியே அடிப்படை | தினகரன்

மனிதகுல நாகரிகத்துக்கு தாய்மொழியே அடிப்படை

உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும் பல்வேறு விடயங்களை நினைவுகூருமுகமாகக் குறிப்பிட்ட தினங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு தினத்தின் நோக்கின் மேன்மை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையிலே ஆண்டு தோறும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தாய்மொழித் தினம் நினைவு கூரப்படுகின்றது.

மனித குலத்தின் உயிர்மூச்சாக விளங்குவது மொழியே, மொழியின்றேல் ஏனைய உயிரினங்களுக்கும் மனித குலத்திற்கும் வேறுபாடு காண முடியாது. அதனால்தான் மொழியின்றேல் மூச்சில்லை,பேச்சில்லை என்று கூறப்படுகின்றது.

மனிதனின் சிந்தனைக்கு மொழி அவசியம். சிந்திக்கும் ஆற்றலுக்கு மொழி எவ்வளவு அவசியமோ அதேபோல் சிந்தித்துத் தன் கருத்தை மற்றையோருக்கு வெளிப்படுத்தவும் மொழியே வழி செய்கின்றது. மதங்களின் தத்துவங்களைப் புரிந்து கொள்வதற்கும் அறிவியல்சார் அனைத்தையும் அறிந்து, புரிந்து கொள்வதற்கும் மொழியே துணை செய்கின்றது. மொழியின்றேல் மதங்களின் தத்துவங்களை அறிந்து கொள்ள மார்க்கமுமில்லை. அதனால் மனித குலத்தின் நாகரிக வாழ்வுக்கு மொழியே அடிப்படையானது.

எனவே மொழியின்றேல் சிந்தனையுமில்லை. சமூகத் தொடர்புகளும் இல்லை. விலங்குகளை ஒத்த நிலையில் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்து வாழும் வாழ்வேயமையும்.

உலகளாவிய ரீதியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பேண வேண்டிய கடப்பாட்டை வலியுறுத்தி உணர்த்தும் சிறப்புமிகு தினமாக இந்த தினத்தை நோக்க வேண்டும். நாகரிகமடைந்த சமூகத்தை அளவிடும் அளவுகோலாக அச்சமுகத்தின் சிந்தனையை வளப்படுத்திய, வளப்படுத்தி வரும் தாய்மொழி விளங்குகின்றது,பெருமை சேர்க்கின்றது.

இந்நிலையே நாம் யார்? நமது சிறப்பு என்ன? என்பவற்றை எடைபோட நமது தாய்மொழியான தமிழ்மொழி வழிவகுத்துள்ளது. நமது இனத்தின் பெருமைக்கு சான்று பகர்கின்றது. ஆம் உலகமொழிகளிலே இன்று வழக்கிலுள்ள மொழிகளிலே மூத்த மொழியான தமிழ்மொழி நமது தாய்மொழியென்ற பெருமை நமக்குண்டு.

நமது மொழியின் பெருமையென்ன? இருப்பென்ன? வளமென்ன? சிறப்பென்ன என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, உணர்ந்து வெளிப்படுத்த வேண்டும். அதுவே நமது தாய்மொழிக்கு பெருமை தரும்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று பாரதியார் பாடினார் என்று கூறிக்கொண்டிருப்பதால் பயனில்லை. அந்த இனிமை, பெருமை பாரறியத் திறந்து விடவேண்டும். உலகத்தோர் உணர வழிவகை செய்யப்பட வேண்டும்.

திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி தமிழ் என்று தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியவர் மேலைத்தேசத்தைச் சேர்ந்த மொழி ஆய்வாளர் கால்ட்வெல் பாதிரியார். அவரின் ஆய்வின்படி கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவை என்று வெளிப்படுத்தியுள்ளார். இந்திய நாட்டிலிருந்த மொழிகளை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் நமது இலங்கைத் தீவில் வழக்கிலுள்ள சிங்கள மொழியைப் பற்றி ஆராயாமல் விட்டது துரதிர்ஷ்டமே எனலாம்.

சிங்களமொழி உள்வாங்கியுள்ள தமிழ்ச் சொற்கள் ஏராளம், அவற்றை முறைப்படி ஆய்வு செய்தால் சிங்கள மொழியின் மூலமொழி அதாவது தாய்மொழி தமிழ் என்ற முடிவுக்கு வர பலசான்றுகள் உள்ளன. ஆய்வு செய்யத்தான் எவரும் முன்வருவதில்லை. அரசும் செய்யாது. அறிஞர்களும் செய்ய மாட்டார்கள்.

எது எவ்வாறாயிருப்பினும் நமது தாய்மொழி தமிழ் என்று பெருமைப்பட பல்வேறு ஆதாரங்கள் நமக்குண்டு. உலகின் பழம்பெரும் மூத்த மொழிகள் ஆறில் தமிழ்மொழியும் ஒன்று. அவற்றில் சமஸ்கிருதம், இலத்தீன் போன்ற மொழிகள் வழக்கிழந்த நிலையில் தளர்வின்றி நிலைபெற்று நிற்கும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது.

மொழியியல் ஆய்வாளரும், பேராசிரியருமான அலெக்ஸ் கொலியர் உலகில் மூத்த மொழி தமிழ் என்பதைத் தனது ஆய்வின் மூலம் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். 1995 ஆம் ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழக மொழியியல் பற்றிய ஆய்வின்போது மாணவ, மாணவியர் மத்தியிலே தனது இந்த ஆய்வின் முடிவைப் பகிரங்கப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிஆய்வாளர்களின் கணிப்பின்படி வழக்கிலுள்ள உலக மொழிகளில் அதிக சொற்களைக் கொண்ட மொழியாக முதலிடம் வகிப்பது தமிழ் மொழியாகும். நம் தமிழ்மொழி சர்வதேச மொழியெனப்படும் ஆங்கிலத்தைச் சொற்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இரண்டாமிடத்தில் நிறுத்தியுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்று உலக நாடுகள் அறுபத்து நான்கில் பேசப்படும் மொழியாகக் கணிக்கப்பட்டுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உலகின் ஐந்து கண்டங்களிலும் வாழ்கின்றனர்.

தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மூன்று மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டிலுள்ள மொழி என்ற பெருமை தமிழ்மொழிக்குண்டு. இலங்கை, இந்தியா, மியான்மார், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங், கம்போடியா, இந்தோனேசியா என்று நாடுகள் விரிவடைகின்றன.

அதற்கப்பால் பிஜி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா என்ற கிழக்குப் பக்கமாக நீளும் அதேவேளை மேற்கே மொறிசியஸ், தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, டென்மார்க், சுவிடன், நோர்வே, சுவிட்சர்லாந்து, ஒல்லாந்து, இத்தாலி, கனடா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டிஷ், கயானா என்று உலகளாவிய ரீதியில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் பரந்து விரிகின்றது.

பிரித்தானியரின் ஆட்சிக்குப் பின்பே இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பு மொழியாக ஆங்கிலம், வழக்கில் வந்தது. அதற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பு மொழியாகத் தமிழ்மொழியே இருந்துள்ளது. அதற்கான ஆதாரமுமுள்ளது. சிங்கள மொழி கருக்கட்டாத காலத்திலே அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய நாட்டிலிருந்து தமிழ்ப் பெண்களை வரவழைத்து விஜயனும் அவனது தோழர்களும் மணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.

தமிழ் வழக்கிலிருந்த பாண்டிய நாட்டிலிருந்து இளவரசியையும், பெண்களையும் அழைத்துவரத் தூதனுப்பிய மொழி எதுவாயிருக்கும்? அலசி ஆராயும்போது அந்நாளில் அதாவது ஆங்கிலேயர் இந்நாட்டின் ஆங்கிலேயர் ஆட்சியிலமரும் வரை இலங்கையின் வெளிநாட்டுத் தொடர்பு மொழி தமிழ்மொழியாகவேயிருந்தது என்பதை ஐயமின்றி செப்பிட முடியும். அதுமட்டுமல்ல இலங்கைத் தீவில் தமிழர்களின் ஆட்சி வரலாற்று ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள மொழியின் தோற்றம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளே என்கின்றனர். ஆய்வாளர்கள். அதற்கு முன் அதாவது பத்து நூற்றாண்டுகளுக்கு முன் தேவநம்பிய தீசன் காலத்தில் புத்த சமயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு அறிமுகப்பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ்மொழியே என்பது உறுதியானது.

தமிழ்மொழிக்குரிய மற்றொரு பெருமை உலகிலேயுள்ள மொழிகளில் மதச்சார்பற்ற மொழியென்பதுமாகும். உலகிலுள்ள முக்கிய சகல சமயங்களது தத்துவங்களையும் உள்வாங்கி இலக்கியமாக வெளிப்படுத்தியுள்ள ஒரே மொழி நமது தாய்மொழியான தமிழ்மொழியே. இந்து பௌத்தம், சமணம், இஸ்லாம், கத்தோலிக்கம், கிறிஸ்தவம் என்று சகல தத்துவங்களும் தமிழ்மொழியால் உள்வாங்கப்பட்டு இலக்கியங்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தச் சிறப்பு உலகின் வேறெந்த மொழிக்குமில்லை எனலாம்.

சமயம் சாரா அறக்கருத்துக்கள் நிரம்பிய பெட்டகமாகவும் தமிழ்மொழி பெருமை பெறுகின்றது. உலகம் போற்றும் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி என்று பட்டியல் நீளுகின்றது. அறிவியல் மொழி, பக்தி மொழி, செம்மொழி, செந்தமிழ் மொழி, முத்தமிழ் மொழி என்ற எத்தனையோ அடைமொழிகளால் அழைக்கப்படும் நமது உலகளாவிய ரீதியில் நினைவி்ற்கொள்ளப்படும் தாய்மொழித் தினத்திலே நாமும் நமது தமிழ் மொழியை நினைவிற்கொண்டு உவகையும், பெருமையும் உறவேண்டும்.

மேலும் தமிழ் இலக்கியமானது வெறுமனே அறக்கருத்துக்களை மட்டு உள்ளடக்கியதல்ல. வாழ்கைமுறை, ஒழுக்கம், பண்பாடு, கலை, கலாசாரம், மருத்துவம், சோதிடம், வனசாஸ்திரம் என்று மேலும் பல பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளது. இதுவும் நம் தாய்மொழியின் சிறப்பாகின்றது. அறிவியல் விஞ்ஞானமென்று கூறப்படும் இன்றைய புதுமையை அன்றே நமது தமிழ் வெளிப்படுத்தியுள்ளார். இது போன்ற பல விஞ்ஞான விளக்கங்கள் நம்மொழிக்கு உள்ளது.

உலகிலேயுள்ள நூற்றுக்கணக்கான மொழிகள் பட்டியலிலே,தாய்மொழியின் உரிமையாளர் பட்டியலிலே தமிழர்கள் பதினான்காம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமையும் பெருமிதத்திற்குரியது.

நமது சிந்தனைக்கு, உரைக்கு, செவிமடுத்தலுக்கு, எழுத்துக்கு, பார்வைக்கு உரித்தான நமது தாய்மொழியான தமிழைப் போற்றுவது நமது கடமை. அத்துடன் நமது அன்றாடக் கடமைகளுக்கு உரித்துடைய மொழியாகத் தமிழ்மொழியைப் பயன்படுத்தி அதனை வளப்படுத்தி, வலுவூட்ட வேண்டிய பொறுப்பும் நமக்குண்டு. தமிழ் மொழியின் பெருமை, வளம், பழைமை, சிறப்பு அனைத்துமே நம்மை பெருமிதப்படுத்தும், அழகுபடுத்தும் அணிகலன்களாகும். தமிழ் வாழ நாம் வாழ்வோம்.

த.மனோகரன்...
உதவிச் செயலாளர்
(தொழில் உறவுகள்) தேசிய சகவாழ்வு,
கலந்துரையாடல் மற்றும்
அரசகரும மொழிகள் அமைச்சு 


Add new comment

Or log in with...