இந்துமக்களின் வழிகாட்டியாக வாழ்ந்த கந்தையா நீலகண்டன் | தினகரன்

இந்துமக்களின் வழிகாட்டியாக வாழ்ந்த கந்தையா நீலகண்டன்

 

ஆற்றலும், ஆளுமையும் கொண்ட ஒரு பெருமனிதன் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்து கொண்டு இறைவன் திருவடியில் அமைதியமைந்து விட்டார். ஆம், பல்துறை ஆற்றலும், ஆளுமையும் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் நீலகண்டன் தனது எழுபத்தோராவது அகவையில் நேற்றுமுன்தினம் அமரத்துவமடைந்து விட்டார். பிறப்புண்டு, வாழ்வுண்டு. இறப்பும் உண்டு என்ற இயற்கை நியதிக்கொப்ப 1947 ஆம் ஆண்டு நான்காம் மாதம் பதினாறாம் திகதியன்று வட இலங்கையின் வடமராட்சியின் உடுப்பிட்டியில் கந்தையா தம்பதியினரின் மகனாகப் பிறந்து அன்னார் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்று இலங்கை சட்டக்கல்லூரியில் பயின்று 1969 இல் சட்டத்தரணியாக வெளியேறினார்.

பாடசாலைக் காலத்திலேயே தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்திய அன்னார், கொழும்பில் தனது தொழிலை மேற்கொண்ட காலம் முதல் இறக்கும் நாள்வரை சமயப்பணி, கல்விப்பணி, சமூகப்பணியென்று பல்வேறு சமூக நலப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆம் இறப்பை எதிர்கொண்ட 2018-.02-.18ஆம் நாளில் சில மணி நேரத்திற்கு முன்பும் சமய நிகழ்வொன்றின் ஒழுங்குகளை நேரில் மேற்பார்வை செய்தமை அவரின் செயலுறுதியை வெளிப்படுத்துகின்றது.

ஆரம்பத்தில் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கப் பேராளராக, அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற அவர், மாமன்றத்தின் துணைச்செயலாளராகவும், பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பல்லாண்டுகள் திறமையுடன் பணியாற்றினார். கொழும்பு விவேகானந்த சபை, திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை, உட்பட பல இந்து சமய நிறுவனங்களில் பல பொறுப்புக்களை வகித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.

அமரர் வைத்தியகலாநிதி க. வேலாயுதபிள்ளையுடன் இணைந்து மூடிக் கிடந்த கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியை மீண்டும் இயங்க செயற்பட்டவர்களில் கந்தையா நீலகண்டனும் முக்கிய இடம்பெறுகின்றார். அத்துடன் இரத்மலானை இந்துக் கல்லூரியின் மாணவ மாணவியரின் எண்ணிக்கைப் பெருக்கத்தையும், வசதியற்ற பிள்ளைககளின் நலனையும் நோக்காகக் கொண்டு இலவச தங்குமிடம் மற்றும் உணவு உட்பட்ட வசதிகளுடன் கூடிய மாணவவிடுதிகளை நிறுவவும் உழைத்தார். பல ஆண்டுகளாகப் பலநூறு தமிழ்ப் பிள்ளைகள் குறித்த விடுதியான சக்தி இல்லத்தில் தங்கி பயின்று பயன் பெற்றுள்ளனர்.

காணி கிடைத்தும் பல்லாண்டு காலமாக கட்டடம் அமைப்பதில் பின்னடைவு கண்டிருந்த அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பணிமனையை அதன் முன்னாள் தலைவர்களான அமரர் க. பாலசுப்பிரமணியம் மற்றும் அமரர் வி. கயிலாசபிள்ளை உட்படப் பலருடன் இணைந்து நிறுவுவதில் வெற்றி கண்டவர் கந்தையா நீலகண்டன். இவரது காலத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் மாமன்றக் கிளை அலுவலகம் நிறுவப்பட்டமையும், முறிகண்டியில் சரவணப் பொய்கை என்ற பெயரில் கட்டடம் நிறுவப்படுவதும் அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் மாமன்ற செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் அவரது ஆற்றல்மிகு வழிகாட்டலென்பது குறிப்பிடத்தக்கது.

கல்விப் பணியைப் பொறுத்தவரை மாமன்றக் கல்விக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஊக்கமும், உந்துதலும் தந்தவர் நீலகண்டனே என்பதை அதன் செயலாளராகச் செயற்படுபவன் என்ற முறையில் உறுதியாகக் கூற முடிகின்றது.

இன்று நாடு முழுவதுமாக இந்துப் பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களது சமய அறிவை மேம்படுத்த நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பயிலரங்குகள், செயலமர்வுகள் என்று நடத்தி பல்லாயிரம் மாணவ, மாணவியருக்கு கற்பித்தல் செயற்பாட்டை நடத்தி வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் அனைத்துப் பாடங்களுக்கும் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறான கல்விப்பணிகளைத் தளராது மேற்கொள்ள ஊக்கமும், உதவியும் ஒத்துழைப்பும் மாமன்றத் தலைவர் என்ற முறையில் அமரர் நீலகண்டன் தயங்காது வழங்கினார்.

நாட்டின் கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர் தர வகுப்பிலும், அதே பரீட்சையிலும் இந்து நாகரிகம் ஒரு பாடமாக இருந்த போதிலும் அதற்கான பாடநூல் ஒன்று இருக்காமை ஒரு குறையாகவிருந்து வந்தது. அக்குறையை நீக்க பாடத்தி்ட்டத்தோடிணைந்த பாடநூலொன்றைத் தயாரித்து வெளியிட எமக்கு பலவழிகளிலும் நீலகண்டன் உதவினார். அதற்கு இந்துமாணவ சமுதாயம் என்றும் நன்றியுடையதாயிருக்கும்.

த. மனோகரன் ...
(துணைத்தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்) 


Add new comment

Or log in with...