நல்லது நடக்க வேண்டும் இதுவே மக்களின் எதிர்பார்ப்பு | தினகரன்

நல்லது நடக்க வேண்டும் இதுவே மக்களின் எதிர்பார்ப்பு

உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு நாடடில் உருவான அரசியல் கொந்தளிப்பு தற்போது ஓரளவு ஓயத்தொடங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது. தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிகள் இரண்டுக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியதே இதற்கு மூலகாரணமாக அமைந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்துக்கு எந்த வகையிலும் வழிகோலமாட்டாது என்பதை உணர்ந்த நிலையிலும் கூட எதிரணிச் சக்திகளின் அரசு பதவி விலக வேண்டும், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை துறக்க வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.

இந்தச் செயற்பாடுகள் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகவே நோக்க வேண்டியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் அரசுக்கு ஒரு சிவப்புச் சமிக்ஙையை காட்டியது என்பது யதார்த்தம் தான். ஆனால் அது ஆட்சி மாற்றமொன்றுக்கான சமிக்ஙையாக கொள்ள முடியாது. பயணிக்கும் பாதை பிழையானது. சரியான திசைக்குத் திரும்புமாறு வலியுறுத்துவதாக மட்டுமே கொள்ள முடியும். இந்தப் பின்னடைவை அரசு மீதான சிறியதொரு அதிருப்தியை வெளிப்படுத்துவதாக மட்டும்தான் நோக்க வேண்டியுள்ளது.

இந்தத் தேரதல் முடிவு பிரதமர் பதவி விலக வேண்டும், ஆட்சிமாற்றமொன்று இடம்பெற வேண்டுமென்பதற்கான மக்கள் தீர்ப்பாகக் கொள்ள முடியாது. அரசியலமைப்பிலோ, தேர்தல் சட்டவிதிகளிலோ அவ்வாறு கூறப்படவில்லை. அதற்கான காரணம் 2015ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் அதனையடுத்து அதே ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இவற்றோடு இணைந்த சில கட்சிகளும் மக்களுக்கு அளித்தவாக்குறுதிகள் உரியமுறையில் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கான சிவுப்புச் சமிக்ஙையாக மட்டுமே இதனைக் கொள்ள முடியும்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டிருந்த நாட்டை கடந்த மூன்றாண்டுகளுக்கிடையில் நல்லாட்சி அரசாங்கத்தால் ஓரளவு தலைநிமிர வைக்க முடிந்துள்ளது. கடன் சுமையிலிருந்தும் படிப்படியாக மீளக்கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்த முடிந்துள்ளது. பொருளாதாரத் துறையிலும், அபிவிருத்தியிலும் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புபட்ட பல விடயங்களில் அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை காரணமாக மக்கள் அதிருப்தியடைந்து காணப்பட்டனர். இதன் பிரதிபலிப்பையே தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியது.

இந்த நெருக்கடியான நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சில சக்திகள் தீவிரமாகச் செயற்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி துறக்க வைத்து அரசாங்கத்தை சுதந்திரக் கட்சி பொறுப்பேற்க வேண்டுமென்று சுதந்திரக் கட்சியில் உள்ள கடும்போக்குச் சக்திகள் தலைமைத்துவத்துக்கு அழுத்தம் கொடுத்தன. இதனால் ஜனாதிபதி ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியிலும் குறிப்பிட் சிலர் கட்சித் தலைமை மாற வேண்டுமென மறைமுகமாகச் செயற்படத் தலைப்பட்டனர்.

ஆனால், இவ்வாறான எந்த முடிவுக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனினும் கடந்த பத்து நாட்களாக காணப்பட்ட கொந்தளிப்பு நிலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து இடம்பெற்ற ஜனாதிபதி – பிரதமர் இருவருக்குமான சந்திப்புக்கள் ஆரோக்கியமாக அமைந்ததன் காரணமாக இடம்பெறவிருந்த தடைகள், முட்டுக்கட்டைகளை தவிர்க்க முடிந்துளள்ன.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்குடையிலான இறுதிப் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவும் இடம்பெற்ற போது நல்லாட்சி அரசை 2020 வரை தொடர்வதெனவும், பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்வார் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவையில் மாற்றத்தைக் கொண்டுவர இருவருக்குமிடையில் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இது வரவேற்கக்கூடியதே. அமைச்சரவையில் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களை நீக்கி திறமையானவர்களை நியமிப்பது மிக அவசியமானதாகும். அத்துடன் குழப்பவாதிகளுக்கு இடமளிப்பதை தவிர்த்துக்கொள்வதும் முக்கியமானதாகும்.

அடுத்த இரண்டு வருடங்களில் நல்லாட்சி அரசு மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பது மிக முக்கியமானதாகும். நாடு மீண்டும் படுகுழிக்குள் தள்ளப்படுவதைத் தடுக்க வேண்டுமானால் இரண்டு வருடங்களுக்கிடையில் கவனம் செலுத்த வேண்டிய பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டியுள்ளது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படக்கூடிய விதத்தில் அரசு நடந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானதொன்றாகும்.

தனித்து ஆட்சியமைக்க முனைப்புக்காட்டிய சுந்திரக்கட்சித் தரப்பபில் சிலர் மகிந்த ராஜபக்ஷ தரப்பின் ஏஜண்டுகளாகத் தான் செயற்பட்டனர். இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியான நிலைப்பாட்டை எடுத்தன் காரணமாகவே தனியாட்சித் திட்டத்தை தடுக்க முடிந்தது எனலாம். இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவு இரண்டு பிரதான கட்சிகளுக்கும் நல்லதொரு சமிக்ஙையாகும். தவறுகளை திருத்தி சரியான திசையில் பயணிக்கக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிச் செயற்படவேண்டுமென்பதையே இது வலியுறுத்திக் கூறியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சர்வதேசம் நல்லபிப்பிராயம் கொண்டுள்ளது. அதன் பிரதிபலனாக பல நன்மைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. சர்வதேசத்தின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டுமென்பதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது. தேர்தல் முடிவுக்குப் பின்னர் ஏற்பட்ட நெருக்கடியான நிலையின் இறுதிக் கட்டத்தின் போது சர்வதேசம் ஒரு சமிக்ஙையை இரு தலைவர்களுக்கும் விடுத்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரும் இந்திய உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியையும், பிரதமரையும் தனித்தனியே சந்தித்து பேசியதானது இரண்டு நாடுகளும் வழங்கிய செய்தியாகவே காணப்படுகின்றது. இதனையடுத்தே நிலைமை சீரடையத் தொடங்கியதெனலாம்.

அழிவை நோக்கிப் புறப்பட்ட சுனாமியை திசை திருப்பி நாட்டைப் பாதுகாக்க முடிந்துள்ளதை இன்றைய சூழ்நிலை உணர்த்துகின்றது. தீயசக்திகளை முறியடித்து பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை 2020 வரை ஆரோக்கியமாக முன்கொண்டு செல்லப்படவேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...