அமெரிக்க பாடசாலையில் முன்னாள் மாணவன் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி | தினகரன்

அமெரிக்க பாடசாலையில் முன்னாள் மாணவன் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி

 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பார்க்லாண்டில் உள்ள உயர் பாடசாலை ஒன்றில் 19 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய சந்தேக நபரான நிகொலஸ் கிரூஸ், இந்த பாடசாலையின் முன்னாள் மாணவன் என்பதோடு அவர் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டவராவார். இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் ஆரம்பமானதை அடுத்து மாணவர்கள் ஓடி ஒளிய ஆரம்பித்ததோடு பொலிஸார் பாடசாலை கட்டடத்தை சுற்றிவளைத்தனர்.

2012 ஆம் ஆண்டு கன்னக்டிகட் பாடசாலையில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற அதிக உயிரிழப்புக் கொண்ட பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது உள்ளது. எனினும் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறும் ஆறாவது பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது உள்ளது. இந்த சம்பவங்களில் மாணவர்கள் கொல்லப்பட்டு அல்லது காயமுற்றுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல்தாரி பாடசாலைக்கு வெளியில் மூன்று பேரை கொன்றிருப்பதோடு, பின்னர் கட்டடத்திற்குள் புகுந்து மேலும் 12 பேரை கொன்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். “இது ஒரு பேரழிவு. உண்மையில் அதனை சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று பிரோவார்ட் கெளன்டி ஷெரிப் ஸ்கொட் இஸ்ரேல் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் மூவர் ஆபத்தான நிலையிலும், மேலும் மூன்று பேர் ஸ்திரமான நிலையிலும் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் கால்பந்து பயிற்சியாளர் ஒருவரும் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாடசாலை கலைவதற்கு சற்று முன்னரே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் முதலில் தீவைத்து பாடசாலையின் அவசர அலாரமை ஒலிக்கச் செய்துள்ளார். இதனை அடுத்தே அவர் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் அனைவரையும் வெளியேற்றி பாடசாலை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பாடசாலைக்கு அருகில் குடும்பத்தினர் ஒன்று திரண்டதோடு ஹெல்மட் அணிந்த பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்பு டிரக் வண்டிகள் மற்றும் ஏனை அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது பாடசாலை கட்டடத்தில் இருந்து கைகளை உயர்த்தியவாறு மாணவர்கள் வெளியேறுவதை தொலைக்காட்சிகள் காட்டின.

இதன்போது, தாக்குதல்தாரி நச்சுப்புகையை தடுக்கும் முகமூடி அணிந்து கொண்டு ஒரு துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் புகை குண்டுகளை எடுத்துக் கொண்டு பாடசாலைக்குள் நுழைந்திருப்பதாக புளோரிடாவின் இரு அமெரிக்க செனட்டர்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு பாடசாலைக்குள் அந்த சந்தேக நபர் அலாரம் ஒளியை எழுப்ப வைத்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேறச் செய்தே தனது தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அவர்கள் விபரித்துள்ளனர்.

ஒழுக்க நடவடிக்கையாக பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கிரூஸ், தாக்குதலை நடத்தி விட்டு பாடசாலையில் இருந்து வெளியேறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அருகில் உள்ள கொரால் ஸ்பிரிங்ஸ் என்ற சிறு நகரில் இருந்து எந்த எதிர்ப்பும் இன்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரது சமூக ஊடக பக்கங்கள், இணைதள பக்கங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் அதிக தொந்தரவு தரக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 3,000 பேர் கற்கும் இந்த பாடசாலையில் வாரத்தின் எஞ்சிய நாட்களின் வகுப்பறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.


There is 1 Comment

KOLAPANNUWARAM ADUTHA NIMISHAME POLICE PUDICHUKUMAM

Add new comment

Or log in with...